Followers

Tuesday, January 14, 2014

திருட்டு போன உருப்பெருக்கி…


14.1.14

ஆடிய பாதம் - 3

திருட்டு போன உருப்பெருக்கி…

  
இதுவரை நண்பர் சொன்னதை இலகுவாக ஏற்றுக் கொண்ட நான் அதற்குப் பிறகு அவர் சொன்னதை கேட்கையில் நெஞ்சுக்குள் ‘திக்’ கென்றது. ஒரு பதவி உயர்வுக்கு இப்படியெல்லாமா செய்வார்கள்? என்னசெய்வது பணம் கொள்முதலாகிறதல்லவா. ஆசை கொண்ட மனிதனை அது எந்த நிலைக்கும் தள்ளிவிடுமே..

சற்று மௌனத்திற்குப் பின் நண்பர் தொடர்ந்தார்.

     “உச்ச நீதிமண்ற ஆணைப்படி ஒரு சிறப்புப் பிரிவு தொடங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் ஒரு உயர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த உயர் பதவிக்கு தேவையான கல்வித்தகுதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவில் முனைவர் பட்டம் தேவை என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாறாக அந்தப் பதவிக்கு வேறு ஒரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் பதவி உயர்வால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து deputation basis ல் வந்து சேர்ந்த துறை அதிகாரியான ‘மணி’ யானவர் இத்தனைக்கும் காரணம். இதனால் பாதிக்கப்பட்டவர், தான் அரசாணையில் குறிப்பிட்டுள்ள அத்தனை தகுதிகளைப் பெற்றிருந்தும்  தனக்கு பதவி உயர்வளிக்காது விதிகளுக்குப் புறம்பாக குறிப்பிட்ட பிரிவில் முனைவர் பட்டம் பெறாதவரை பதவி உயர்வளித்து அமர்த்தியது தவறென நீதி கேட்டு நீதி மண்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டார்.

இந்த வழக்கால் உள் குழப்பம் ஆரம்பமாகியது. தான் செய்த தவறை வெளிக்கொண்டுவந்ததால் மேலதிகாரிக்கு இவர் மேல் கடுப்பாகியது. எதற்கெடுத்தாலும் இவர் மீது எரிந்து விழ ஆரம்பித்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் வழக்குத் தொடுத்தவரது பொறுப்பிலிருந்த பிரிவில் உள்ள ஒரு உருப்பெருக்கி காணாமல் போனது.
அன்று காலை வழக்கம்போல் வந்து இருக்கையில் அமர்ந்தவர் தனது பிரிவில் இருந்த உருப்பெருக்கியை காணோமென்றதும் அதிர்ந்து போனார். உடனே ஓடிப்போய் மேலதிகாரியிடம் தெரிவித்தார். அந்த மேலதிகாரியோ மிகச் சாவகாசமாக “ உன்னுடைய பிரிவிலிருந்துதானே காணோம்.. நீ தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து இழப்பை சரி கட்ட வேண்டும்” என்றார்.

இதைக்கேட்ட பாதிக்கப்பட்டவர் மிரண்டு போனார். அந்த உருப்பெருக்கி மிகவும் சிறந்தது. அது ஒரு inverted microscope with continuous recording facility. அது தொண்ணூறுகளிலேயே பதினைந்து லட்சம் விலை கொண்டது. மிகவும் பயந்து போனவர் தனக்கெதிராக ஏதோ ஒரு சூழ்ச்சி நடக்கிறதென்று மட்டும் புரிந்து கொண்டார். உடனே, “அதெல்லாம் முடியாது. அரசு நிறுவனத்தின் சொத்து ஒன்று திருட்டுப் போயிருக்கிறது. நீங்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறீர்களா அல்லது நானே காவல் நிலையம் சென்று இது எனக்கெதிரான சதியென்று புகார் கொடுக்கவா..” என கூச்சலிட்டதும் வேண்டா வெறுப்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த மேலதிகாரி. புகார் கொடுத்த கையோடு அவர் மற்ற ஊழியர்களை அழைத்து, காணாமற் போன உருப்பெருக்கிக்கு அந்தப் பிரிவின் அதிகாரிதான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் இந்த திருட்டு குறித்து தங்களுக்கு அந்தப் பிரிவு அதிகாரியில் மேல்தான் சந்தேகமென்றும் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அதையும் எழுதிக் கொடுத்த ஊழியர்களும் உண்டு.

இறுதியில் காவல் விசாரணையில் சந்தேகப் பிடியில் சிக்கியவர்களில் துறை மேலதிகாரியும், விதிகளுக்கு மாறாக பதவி உயர்வு பெற்றவரும் அடங்கினர். விசாரணை தமக்கெதிராக கிளம்பவே மேலிடத்தைப் பிடித்து விசாரணையைக் கைவிடச் சொல்லி முறையிட்டு செய்யவேண்டியதைச் செய்து அந்தக் கோப்பை கிடப்பிலே போட்டு முடக்கினர்.

அப்பாவியாகிய பிரிவு அதிகாரியை அவர் செய்த புண்ணியம்தான் காப்பாற்றியது. ஆனால் மனிதர் காவல் விசாரணையில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து நூலாகி மன உளைச்சலில் குடும்பத்திலும் சிக்கல் வந்து தனது மாமனாரையும் இழந்து பெரும் அவதிக்குள்ளானார். அவரது மாமனார் தனது மறுமகனுக்கு வந்த அவப்பெயரால் மனமுடைந்து இறந்து போனார்.பாதிக்கப் பட்டவர் நீதிமண்றத்தில் தொடுத்த வழக்கு பத்து வருடங்கள் கழித்து அவருக்குச் சாதகமாக தீர்ப்பாகி பின்தேதியிட்டு பதவி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டதும்.. அவரை சிக்கலுக்குள்ளாக்கிய துறைத்தலைவர் அவரது தாய் துறையான பல்கழைக்கழகத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு பிறகு அவர் அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பதிவாளராக அமர்த்தப்பட்டபோது பெரும் ஊழலில் சிக்கி , “கழிவறை சுத்தம் செய்வது முதற்கொண்டு பெரும் ஊழல்” என ‘தி இந்து’ நாளிதழிலேயே நான்கு colum செய்தி வந்து நாடே நாறிய கதை தனி. தற்போது ஓய்வு பெற்ற அவர் ஓய்வுதியம் மற்றும் பிற பணிக்கால கொடைகள் கிடைக்கப் பெறாது அவதியுறுகிறாராம்.

இதுதான் அரச நீதியும் தெய்வ நீதியும்..” என்றபடி பழைய நினைவுகளில் ஊறிய நண்பர் சற்று மௌனம் காத்தார்..

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...