Followers

Monday, January 20, 2014

கொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…


20.1.14

ஆடிய பாதம் - 5

கொள்கைக் கூட்டமும் கொள்ளைக் கூட்டமும்…

 
 
நண்பருடன் இருந்த அடுத்த அரை மணி நேரமும் அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. சாதாரணமாக பெண்கள் எப்போதும் பெண்களுடன் கூட்டாக இருப்பார்கள். அது எதிர்ப் பாலினர் தங்களை எளிதில் ஏமாற்றாமலோ அல்லது அவர்களுக்கு ‘நாங்கள் ஒன்றாயிருக்கிறோம்’ என்னும் செய்தியினை வெளிக்காட்டிக் கொள்ளவோ அவர்கள் கொள்ளும் ஒரு முயற்சியாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்ற அவர்களது உள்ளுணர்வாகக் கூட இருக்கலாம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் நண்பர் சொன்ன கூட்டணி மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நண்பர் தொடர்ந்தார்.   “ நான் ஏற்கனவெ சொன்ன ‘பிச்சை’ ‘முத்து’ ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவர் மேலதிகாரி ஆனதும் தனக்கு பாதுகாப்புக்காக தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தன் அதிகாரத்தில் சலுகைகளை காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் இது வெளிப்படையாகத் தெரியவில்லை. பேசும்போது மிகுந்த நியாயவாதியாக தன்னைக் காட்டிக் கொள்வார். ஏறக்குறைய அத்தனை பேரும் இவருக்கு ஏஜண்ட்டுகள் போலத்தான் செயல் பட்டு வந்தனர். அன்றைக்கு செயல் பட்டு வந்த ஒரு அசோசியேசனின் தலைவர் இவரோடு மிகுந்த ‘பற்றோடு’ இருப்பார். உற்று கவனித்தால்தான் தெரியும். அது பொது நன்மைக்காக உண்டாக்கப்பட்ட அசோசியேசன் அல்லவென்று. அதில் இருந்தவர்கள் அத்துனைபேரும் ‘சமூகப்’ பற்றில் ஒன்று சேர்ந்தவர்கள் தான். அவர்களது நடவடிக்கை அலுவலகத்தில் ஒரு மறைமுக பயமுறுத்தலுடனேயே இருந்து வந்தது.     இப்படி  இருக்கையில் தனது சமூகத்தைச் சொல்லி தனக்கு கீழே உள்ளவர்களை தன்னை பாதுகாக்கும் அடியாட்களைப் போலவும் அங்கங்கே நடப்பவைகளை உளவு சொல்லவும் தான் இட்ட கட்டளைகளை செய்து முடிக்க ஒரு net work போலவும் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டார். இவரது அதிகாரம் கொடுத்த சலுகைகளினால் யாரும் அலுவலகப் பணியினைச் செய்யாமல் மிகுந்த மிடுக்கோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உலா வந்தனர். இந்தக் கும்பலைக் குறித்தும் அவர்களது அலுவலகப் பணிகளின் மெத்தனத்தைக் குறித்தும் யாரேனும் இவரிடம் அதிகாரி என்ற முறையில் முறையிட்டால், முறையிட்ட அலுவலர்களை அலுவலக hierarchy ஐக் கூட பார்க்காது அவர்கள் குற்றம் சாட்டிய தனது சமூகத்தினர் முன்னரே மிகுந்த அவமானப் படுத்தி அனுப்பும் வழக்கம் இருந்தது. இது மட்டுமல்ல, “ இவரு உன் சாதியைச் சொல்லி உன்னைத் திட்டினதா எழுதிக் கொடப்பா… நான் பார்த்துக் கொள்கிறேன் ..” என்றும் குற்றமிழைத்தவரை முறையற்ற முறையில் ஊக்கப் படுத்தவும் செய்தார். அப்புறமென்ன. யாரும் எதைக் குறித்தும் கவலைப் படுவதை விட்டு விட்டனர். நமக்கென்ன போச்சு. அரசுத் துறைதானே. அதிகாரியே இப்படி இருந்தால்..? வேலையை விட நமது பாதுகாப்புதான் முக்கியமென விலகத் தொடங்கினர்.

இவர்கள் அடித்த லூட்டியில் சமூக நீதிக்காக போரடும் எண்ணம் கொண்டவர்களே தங்களது எண்ணம் தவறோ என சந்தேகப்படத் துவங்கிவிட்டனர். இவர்களது கொட்டத்தால் வெளியில் சமூகத்தில் வறுமையோடும் சமுதாய வேறுபாடுகளோடும் போராடிக் கொண்டு அன்றாடும் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அனுதாபமும் ஒத்துழைப்பும் கிடைக்காமற் போகும் அபாயம் உண்டென்பது இவர்களுக்குப் புரியவில்லை.
ஆனால் அதைப்பற்றி ‘பிச்சை’ ‘முத்து’வுக்கு கவலையிலை. தங்கு தடையின்றி கப்பம் வசூலாயிற்று. கேட்பாரில்லை. நட்சத்திர விடுதிகளுக்கு வரவழைத்து தங்கக் காசுகளை வசூலித்தார். இது புதிதல்ல பழைய கதைதான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், தனக்கு பாதுகாப்பிற்காக தனது சமூகத்தினரை சமூகத்தின் பெயரைச் சொல்லி தன் வேலைகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டவர், தனது மேலதிகாரியிடம் மிகுந்த பவ்வியமாக நடந்து கொண்டார். அந்த மேலதிகாரி வேறு சமூகத்தைச் சார்ந்தவர். இரண்டு சமூகங்களுக்கும் ஆகாது. எலியும் பூனையும் போல. ஆனால் இரண்டு பேருமே கொள்கைக்காக வாழ்பவர்கள் என்று காட்டிக் கொண்டபோதும் கொள்ளைதான் அவர்களை சேர்த்து வைத்தது. பங்குதாரர்கள் எப்போதும் பங்காளிகள் தானே.  இரைக்காக  நிறம் மாறும்  பச்சோந்திகள் தானே.

மக்கு ஜனங்களுக்கு புரிவதேயில்லை.”

நான் உறைந்து போனேன். ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் வெளியில் வந்தால் பொது ஜனம்தானே. தனது அலுவலக அனுபவத்தை வைத்து தனது பார்வையை குறுக்கிக் கொண்டாரானால் அது சமுதாயக்கேடு மட்டுமல்ல பெரும் அபாயமும் அல்லவா?

யார் இதைச் சொல்வது?

உண்மையிலேயே நாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோமா?

யாரிடம் இதைக் கேட்பது?

 

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

2 comments:

  1. உங்களின் சிந்தனைக் கோணம் எனக்கும் சரியாகவே படுகிறது .எல்லா அரசு அலுவலகத்திலும் இந்த பிரச்சினை உள்ளது .இதனால் பாதிக்கப் படுவதும் அவர்களின் சமூகமே என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள் !

    ReplyDelete
  2. இது மிகவும் அச்சமூட்டும் உண்மை நண்பரே..

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...