Followers

Wednesday, November 3, 2010

ஓன்றின் இழப்பில் நாம் பெறும் மற்றொன்று அதற்கு ஈடானதா அல்லது அதனினும் மேலானதா?

03.11.10
ஓன்றின் இழப்பில் நாம் பெறும் மற்றொன்று அதற்கு ஈடானதா அல்லது அதனினும் மேலானதா?



மாற்றங்களைப் பற்றி பேசினோம். ஆனால் இந்த மாற்றங்கள், situational changes, ஏற்கனவே  உள்ள சூழல் காரணிகளில்தான் மாறுதல்களை உண்டாக்குகின்றன. இந்த மாற்றங்கள் ஒரு புதிய காரணியை சூழலில் புகுத்தலாம், விலக்கலாம், அல்லது மாற்றலாம். எதுவாயிருப்பினும் நமது சூழல் அல்லது  அதனின்று நாம் பெறும் ‘முடிவான விளைவுகள்’ மாறலாம். நான் இந்தப் பேச்சின் தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் ‘இழப்பு’ என்பது  மேற்சொன்ன இந்த முடிவான விளைவுகளின் மாற்றத்தை குறிக்கும்  ஒன்றாகும்.


பொதுவாகச் சொல்லப்போனால் உடல் எடையை இழந்தால் உடல் ஆரோக்கியம் பெறுகிறோம். பிரம்மச்சர்யத்தை இழந்தால் மணவாழ்வைப் பெறுகிறோம்.  மரங்கள் இலைகளை உதிர்த்தால் மொட்டுக்களை பெறுகிறது; தொடர்ந்து  மலர்களை இழந்து கனிகளையும், கனிகளை இழந்து விதைகளையும் பெறுகிறது...


இன்னமும் புரியும்படியாக  சொல்லப்போனால் நமது மனப்பாங்கை எடுத்துக் கொண்டோமானால் பெரியாரின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்திய மாற்றங்களாக நமது சாதி அடையாளங்களில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லலாம். இதைப் பொருத்த மட்டில் ஒருவன் பெரியாரின் சிந்தனைகளுக்கு முன்னர் தான் கொண்டிருந்த சாதி அடையாளங்களை குறித்த சிந்தனை மாற்றங்களைக் கொள்வானேயானால் அவன் தனது சாதி அடையாளங்களை முன் உவந்து இழப்பான். இந்த இழப்பின் மாற்றமானது அவனுக்கு வேறொன்றைக் கொண்டுவரும். அவனை ஒரு முற்போக்குவாதி என்ற அடையாளத்தினை பெறும்படிக்கு இந்த இழப்பு செய்யும்.  இந்த இழப்பால் இவன் பெற்ற வேறொன்றாகிய இது இவன் பெற்றிருந்த முன்னதற்கு ஈடானதா அல்லது அதனினும் மேலானதா என்பதே நமது இன்றைய பேச்சின் கருப் பொருள்.



தயை செய்து கவனிக்கவும்.  நான் இங்கு பெரியாரின் கொள்கைகளைப் பற்றியோ அல்லது அது எதிர்க்கும் சாதி அடையாளங்களைப் பற்றியோ வாதத்திற்கு வரவில்லை அல்லது இந்தப் பொருளை நான் வாதிடவே எடுத்துக் கொள்ளவில்லை. எனது நோக்கு மனிதனின் மனம் பற்றியும் அதைக் கொண்டு அவனது வளர்ச்சி பற்றியும் பேசுவது மட்டுமேயாகும்.


மேற்சொன்னதில் இழப்பில் பெற்ற மற்றொன்று  மனித நேயப் பார்வையில் மிக உயர்ந்த ஒன்றாகும். ஆனால் இந்த மேலான ஒன்றிர்க்காக கூட சிலர் தங்களது சாதி அடையாளங்களை இழக்கத் தயாராவதில்லை. இது எதனால் என்றால் அவர்களது பார்வையில் , அவர்கள் இழந்து பெறும் இந்த ஒன்று மிகவும் குறைவாக மதிப்பிடப் படுவதனாலேயாகும். இவர்களை பெரும்பாலோர் பழமை விரும்பிகள் எனவும் அழைப்பதுண்டு. இதற்குக் காரணம் இவர்கள் இழப்பதை பெரிதாகவும் பெறுவதை சிறிதாகவும் மதிப்பிடுவதினால்தான்.


இந்த இழப்பையும் அதினின்று ஒருவர் பெறுவதையும் மதிப்பீடு செய்கையில் ஒவ்வொருவரின் பார்வைக்குத் தக்க அதன் பரிமாணங்கள் மாறும் என்பது நிச்சயம். இப்படி இருக்கையில் இதனை மதிப்பீடு செய்வது எப்படி?


இந்த மதிப்பீடு செய்கையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அது எவ்வகையிலும் நாம்  சுயநலம் பேணுதல் கூடாதென்பதுதான். மதிப்பீடு செய்யும் செய்திகளை நாம் பார்க்கும் பார்வையிலும் பார பட்சம் இருக்கக் கூடாது. மற்றொன்று நாம் மதிப்பிடுகையில் பொதுநலம் குறித்த செய்திகளுக்கு கூடுதல் மதிப்பீடு அளிக்கவேண்டும் என்பதுதான்.


உதாரணமாக மேற்சொன்ன இழப்பில் பெற்றதை மதிப்பிடும் போது நாம் கவனிக்க வேண்டியவை சாதிய அடையாளங்கள் தனி மனித சுயநலத்தைச் சார்ந்த ஒன்று என்பதும் அதை இழப்பதனால் அவன் பெறும் மனித நேயம் பொதுநலம் சார்ந்த ஒன்று என்பதும் தான்.  இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் தாழ்வு மனப்பான்மை  கொண்டவர்களாகவே இருப்பார்கள் என்பது என் எண்ணம். இவர்கள் தான் தன்னை மிகைப் படுத்திக் காட்டிக்கொள்ளவே தங்கள் சாதி அடையாளங்களை பயன் படுத்திக் கொள்கின்றனர்.



இங்கு இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும். கீதையில் சொல்லியிருக்கும் ‘எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு’ என்ற வாசகமே என்னைப் பொருத்த மட்டில் மனித மனம் மாற்றங்களுக்கு இடம் கொடுக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன். மேலும் இதன் பொருள், “நீ எதையும் கொண்டு வரவில்லை அல்லாமல் நீ இழப்பதும் இழப்பில் பெறுவதும் இங்குதான். இந்த மாற்றங்கள் உன்னை மேம்படுத்தும் பொருட்டு நடப்பதுதான்…” என்பதாகவே படுகிறது. நாம் எதையும் கொண்டு வரவில்லை என்பது உலகம் சார்ந்த பொருட்களுக்காக மட்டுமல்ல சிலர் போற்றும் சாதி அடையாளங்களுக்காகவும் சேர்த்து சொல்லப்பட்ட ஒன்றாகவே எண்ணுகிறேன்.

எனவே கீதையின் பார்வையில் நாம் இழந்து பெறுபவைகள் நிச்சயமாய் நம்மை மேம்படச் செய்யவே என உணர்ந்தோமானால் இழந்ததை விட நாம் பெற்றது மேலான ஒன்றே.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...