12.11.10
ஊழல் பேர்வழிகளை ஊட்டி வளர்க்கலாமா?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது வழக்கில் உள்ள மொழி. ஆனால் ஊழல் பேர்வழிகளை ஊட்டி வளர்த்தால் என்னாகும்?
பெரும்பான்மையானோர் ஊழலுக்கு ஒப்புதல் அளிப்பதில்லைதான். ஆனாலும் ஊழல் எப்படி வளர்கிறது? சற்று ஆராய்ந்தோமானால் நமது மௌனமே நாம் ஊழலுக்கு தரும் ஒப்புதலாகிறது என்பதை உணரலாம்.
சுற்றுலாத் தலங்களில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரிக்கவே வெளிநாட்டவரின் முகச்சுளிப்பைக் குறைத்து அவர்களின் வரவை அதிகரிக்கச் செய்ய ஒருமுறை அரசு ஒரு பொது விளம்பரம் அனைத்து ஊடகங்களிலும் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘தயவு செய்து பிச்சையிடாதீர்கள், பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்த அரசுக்குஉதவுங்கள்’ என்ற தொனியில் இருந்தது அந்த விளம்பரம். இன்னமும் ஒருபடி மேலே போய் அந்த விளம்பரங்கள் , ‘ பிச்சையிட்டு பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள். வெளிநாட்டவரின் பார்வையில் நமது நாட்டின் மரியாதையை காக்க உதவுங்கள்’ என்ற தொனியிலும் இருந்தது.
இந்த விளம்பரம் மிகத் தெளிவான விளம்பரம். ஒரு செயலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நமது அணுகுமுறை அதன் வேரை நோக்கி இருக்க வேண்டும் என்ற சரியான நோக்கினைக் கொண்ட விளம்பரம். இந்த அணுகுமுறை தெரிந்த அரசாங்கமே நமது சமுதாயத்தில் புற்றுநோயாய் ஊடுருவிப்போன இந்த ஊழலைப் பற்றி அறிந்தும் அறியாமலிருப்பது மிகவும் வருந்தத் தக்கது. ஒருவேளை இது ஆதாயம் கருதியும் இருக்கலாம். அரசாங்கம் என்பது வெறும் இயந்திரமல்லவே. அது மக்களை ஆளும் மக்களைத்தானே குறிக்கிறது. ஆக எவ்வகையிலேனும் சுயநலம் கொண்டவர்கள் இணையும் போது ஒரு ஒத்துப்போதல் நிகழ்கிறதே தவிர மாற்றங்கள் நிகழ்வதில்லை.
இது கிடக்கட்டும். நாம் மறுபடியும் வேருக்கே வருவோம். பிச்சை கொடுப்பதை நிறுத்தினால்தான் பிச்சையெடுப்பவர்கள் குறைவார்கள் எனத்தெரிந்த நமக்கு கையூட்டு கொடுப்பதை நிறுத்தினால் தான் கையூட்டு பெறுபவர்கள் குறைவார்கள் என்பது ஏன் தெரிவதில்லை?
சிலர், தொலைநோக்குப் பார்வையில்லாத சிலர், கையூட்டு தந்து தங்களது காரியத்தை சாதித்துக் கொள்வதை நியாயப் படுத்த , ‘ இது ஒரு அன்பளிப்பு. அவ்வளவுதான்.’ எனச் சொல்வதையும் கேட்டிருக்கிறேன். ‘ எனக்கு தாமதம் இல்லாது வேலை முடிகிறது. எனவே இது ஒரு win win situation தான். எனக்கும் இழப்பில்லை. வேலை செய்து கொடுப்போருக்கும் ஒரு பயன். ‘ என்ற கோணத்தில் கையூட்டினை நியாயப் படுத்துவதையும் நாம் காணலாம்.
இது சரியா? கையூட்டு தந்து காரியம் சாதிப்பது win win situation எனச் சொல்பவர்கள் இதனால் தாங்கள் அடையும் இழப்பை அறியாத பேதைகள். மிகக் குறுகிய மனப்பாங்கும் மழுங்கிய சமுதாயப் பார்வையும் உடையவர்கள் .
சமீப காலத்திற்கு முன் நமது நாட்டின் வளர்ச்சி நம்மிடம் இருக்கும் அன்னியச் செலாவனியை வைத்துத்தான் அறியப் பட்டது. இதனாலே மிகுந்த தொழில் வளம் உடைய நாடு வளமான நாடு எனும் போக்கில் அறியப்பட்டது. ஆனால் தற்போதுள்ள பார்வை வேறு. ஒவ்வொரு தொழில்முனைவோரும் தமது லாப நட்டக் கணக்கில் தன் தொழிலுக்குத் தேவையான நீர், காற்று, மற்றும் தமது தொழிலால் இயற்கை அடையும் மாசு ஆகியவைகளுக்கு சரியான மதிப்பீடு செய்யாததினாலேயே தத்தம் தொழில்கள் மிகுந்த லாபம் தருபனவாக தோற்றமளிக்கின்றன. இது இயற்கை வளங்கள் நமக்கு கிடைப்பது இலவசமாகத்தானே என்ற மனப்போக்குத்தான் நம்மை இயற்கை வளங்களை சீரழிக்கத் தூண்டுகிறது.
இயற்கை வளங்கள் இலவசமென்றாலும் அதில் அனைவருக்குமல்லவா பங்குண்டு? தொழில் முனைவோர் தாம் மட்டுமே தம் தொழில் வளர்ச்சிக்கு இயற்கை வளங்களைச் சீரழித்து ஒரு பொது மனிதனுக்குமாசுபட்ட இயற்கையால் வரும் நோயை மட்டும் தரலாமா? அந்தப் பொது மனிதனின் சுத்தமான காற்று மற்றும் சுத்தமான நீர் குறித்தான இயற்கை உரிமையை ( right to clean air and clean water) பறிக்க யாருக்கு உரிமை உண்டு?
இந்த இயற்கை மாசு படுதலும் ஊழலால் வரும் விளைவே. இது மட்டுமல்ல மற்றெல்லாத் துறைகளிலும் ஒருவரது கையூட்டு மற்றவரின் உரிமையைக் கொளத்தான் என்பது விளங்கும். இந்த உரிமை மீறல்கள் பொதுமனிதனையும் தாக்கி இறுதியில் இவர்களையும் இழப்பிற்குள்ளாக்கும். இது உண்மை. இது ஒரு biological magnification போல கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அமைதியாய் உள்ளிருந்தே பெருக்கமெடுத்து அனைவரையும் கொன்றுபோடும்.
சாலைப் போக்குவரத்து விதிகளை மீற கையூட்டு கொடுப்பவன் ஒரு பொது மனிதனது சாலைப் பாதுகாப்பை பறிக்கிறான். கையூட்டு பெற்றுக்கொண்டு இயற்கை வளங்களை மாசுபட அனுமதிப்பவர்கள் ஒரு பொது மனிதனின் சொத்தைக் கொள்ளையிடுகின்றனர். இத்தகைய மனிதர்கள் தானும் சமுதாயத்தின் ஒரு அங்கம் எனும் அறிவின்றி சமுதாயத்தையும் அதன் நலனையும் கேடுக்குள்ளாக்குகின்றனர். இது பேதமை அன்றோ.
அரசன் அன்றே கொல்லாவிடினும் இவர்களை இயற்கை நின்று கொன்றுவிடாதா?
இந்த ஊழல் வழக்கத்தால் பொதுச்சொத்து ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கும், ஒரு குடும்பத்தினின்று இன்னொரு குடும்பத்திற்கும் கைமாறியது போய் இப்போது ஒரு நாட்டின் சொத்தே இன்னொரு நாட்டிற்கு கைமாறிய அவலம் வந்திருக்கிறது. இது அனைவரும் வெட்கப்பட வேண்டிய ஒன்று.
பிச்சை போடுவதை நிறுத்துங்கள். அதைவிட ஊழலுக்கு துணை போவதை நிறுத்துங்கள். பிச்சையிட்டால் பிச்சைக்காரர்கள் தான் அதிகரிப்பர். ஆனால் கையூட்டு கொடுத்து காரியம் சாதித்து ஊழலை வளர்த்தால் கொள்ளையர்கள் அதிகரிப்பர். இவர்கள் கொள்ளையிடுவது குரலற்ற ஏழைகளின் வளங்களை. இதைத் தடுப்பது கற்றோர் கடமையன்றொ.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். ஆனால் ஊழல் பேர்வழிகளை ஊட்டி வளர்த்தால் ஊரும் கெட்டு தானும் கெடுவோம்.
எனவே கையூட்டை கொடுத்து காரியம் சாதிப்பது win win situation அல்ல lose lose situation.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
//ஊழல் பேர்வழிகளை ஊட்டி வளர்த்தால் ஊரும் கெட்டு தானும் கெடுவோம்///
ReplyDeleteசரியாச்சொன்னீங்க...
@சங்கவி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.