15.11.10
கற்றும் குருடராய் வாழலாமோ?
விஜய் தொலைக்காட்சியில் 14.11.10 அன்று ஒளிபரப்பப்பட்ட நீயா நானா? நிகழ்ச்சி சமுதாயத்தில் ஊழலை ஏற்றுக்கொள்வோரையும் எதிர்ப்போரையும் எதிரெதிரே நிறுத்தியது. விவாதத்தின் போது பொதுமக்களின் விழிப்புணர்வும், அறியாமையும் ஒன்றுசேர வெளிப்பட்டது. ஒரு கிராமத்து சிறுவிவசாயி தான் சட்டப்படி வாங்கிய தனது சொத்தின் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து 16 வருடங்களாக போராடிக் கொண்டிருப்பதாயும், இது குறித்து நீதி மன்றத்தினை அணுகி உத்தரவு பெற்று வந்த போதும் அந்த உத்தரவு அதிகாரிகளால் இன்னமும் செயல் படுத்தாமல் இருப்பது குறித்தும் சொன்னார். இந்தப் போராட்டத்தினால் நான்கு இலட்ச ரூபாய்களுக்கு மேல் தனக்கு கடன்சுமை ஏற்பட்டிருப்பதையும் வெளிப்படுத்தினார்.
எதிரணியில் இருந்தவர்களில் ஒருவர் இவரைப்பார்த்து பிழைக்கத் தெரியாதவர் என்றும், வெறும் இரண்டாயிரம் இலஞ்சப் பணத்தில் முடிந்திருக்கவேண்டிய ஒரு சாதாரண காரியத்தினை கையாளத்தெரியாமல் இத்துனை கடனாளியாய் ஆகிவிட்டரெனவும் குற்றம் சாட்டினார். இன்னுமொருவர் அதற்கும் மேலே போய், இனி இவர் வாங்கிய சொத்தை விற்றாலும் இந்த இழப்பை சரிசெய்யமுடியாது என்று இவரைப்பார்த்து பரிதாபப் பட்டார்.
நடுத்தரவயதுடைய, நன்கு கற்ற மேல்தட்டு நடுத்தரக் குடுப்பத்தைச் சார்ந்தவர்களைப் போலத் தோற்றமளித்த இந்த இருவரின் குற்றச்சாட்டுகளுக்கும் முதிய, பார்வைக்கு கல்லாதவரைப்போல் தோன்றிய அந்த கிராமத்து குறு விவசாயி கேட்ட கேள்வி, “ இந்த சனநாயக நாட்டில் எனது நேர்மையான சனநாயக உரிமையை நான் பெறத் தக்கவனா இல்லையா? எனது நேமையான சனநாயக உரிமைகள் எது குறித்து மறுக்கப் படுகின்றன?” என்பதுதான். சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர், திரு. மனுஷ்யபுத்திரன், ‘தற்போதைய நிலையில் ஒரு சாதாரண மனிதன் தன் அன்றாடத் தேவைகளுக்கே போராட வேண்டிய சூழலில் யார் இந்த ஊழல் பூதத்தை எதிர்த்து போராடத் துணிவர்?’ என்று ஒரு சாதாரண மனிதனின் இயலாமையைச் சுட்டிக் காட்டினார். திரு. தேவசகாயம் IAS, நம் இந்தியா வல்லரசாக வேண்டுமானால் ஊழலால் உளுத்துப்போன இந்த அமைப்புகளைச் சீர் செய்தே ஆகவேண்டும் என்றார். அது ஒட்டுமொத்த சனங்களின் போராட்டத்தினாலும் அனைவரின் ஊழல் மறுப்பு நிலையாலும் தான் சாத்தியப் படும் என்றும் ஆணித்தரமாக தனது கருத்தை வலியுறுத்தினார்.
சென்ற பதிவிலேயே நான் ஊழல் குறித்து பேசியிருந்தபோதும் இந்த நீயா, நானா? நிகழ்ச்சியில் கண்ட கற்றோரது அறியாமையும், கிராமத்து குறு விவசாயியின் தெளிவும் என்னை மீண்டும் இந்த ஊழல் குறித்து பேசத் தூண்டியது.
ஊழலை குறித்து அதனை ஏற்றுக் கொள்வோரது பொதுவான கருத்து என்னவென்றால், அதனால் தமக்கு பாதகமில்லை என்பதும், தங்களது காரியம் சுலபமாகவும் விரைவாகவும் முடிகிறது என்பதும் இதனால் அலைச்சலும் பொருட்செலவும் மிச்சம் என்பதுதான்.
ஊழல் ஒரு சட்ட விரோத செயல் எனும் விழிப்புணர்வும் அதனை ஊக்குவிப்பதும் ஒரு சட்டவிரோத செயல் எனும் குற்ற உணர்வும் இவர்களுக்கு கிஞ்சித்தும் இல்லாதது எனக்கு வியப்பாய் இருந்தது. எல்லாவற்றையுமே லாப நட்டக் கணக்கில் பார்க்கும் இவர்களை கற்றோர் எனக் கருதவே மனம் ஒப்பவில்லை.
இந்த சட்டவிரோதச் செயலை ஊக்குவிப்பவர்கள், சரியெனச் சொல்பவர்கள், சமீபத்தில் சென்னையில் திடீர் பணக்காரர்களாகும் நோக்கோடு கீர்த்திவாசன் எனும் சிறுவனைக் கடத்திய இரண்டு பொறியியல் கல்வி படித்தவர்களது செயலையும் சரியெனச் சொல்வார்களா? சீக்கிரமே காரியம் முடியவேண்டும் என்பதற்காக கையூட்டு கொடுப்பது தவறில்லை என வும் இந்தச் செயலை ஒரு சட்டவிரோதச் செயலாகவும் பார்க்கத் தவறும் இவர்கள், கீர்த்தி வாசனை கடத்தியவர்களின் கடத்தல் செயலை எப்படி நியாயப் படுத்தப் போகிறார்கள்?
இந்த கடத்தல் காரர்களில் ஒருவன் பொறியியற்கல்வி முடித்து விட்டு இங்கிலாந்தில் முது நிலை மேலாண்மை கல்வி பயின்றவன். மற்றொருவன் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பகுதி நேர பொறியியற் கல்வி படிப்பவன். கடத்தலுக்கு இவர்கள் சொன்ன காரணம், சீக்கிரமே பணக்காரர்களாக வேண்டும், கோடியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் செய்ததாக சொல்லியிருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பல சாமான்ய மனிதர்கள் கடைப்பிடிக்கும்மிகச் சாதாரண ethics கூட இவர்களது பேச்சில் இல்லையே. இந்த வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒரு மனிதன் தனது குடும்பத்தின் ஒரு நேர சாப்பாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து நாற்றமெடுக்கும் மலம் நிறைந்த பாதாளச் சாக்கடையில் நுழைந்து சுத்தம் செய்கிறானே… அவனுக்குத் தெரியாதா இந்தக் குறுக்கு வழி? அய்ம்பது உரூபாய்க்கு ஒரு கத்தியை வாங்கி வைத்துக் கொண்டு வழிப்பறியில் இறங்கினால் அவனுக்கு பணத்தைப் பெற சிரமமும், நேரமும் மிச்சமல்லவா? பற்றாக்குறைக்கு லாப நட்டக் கணக்குப் பார்த்தால் அய்ம்பது உரூபாய் முதலீட்டில் பல லட்சங்களே சம்பாதிக்கலாம் அல்லவா? மெத்தப் படித்தவர்களே ஊழலையும், கொள்ளைகளையும் ஊக்குவிக்கும் போது இவனுக்குத் தெரியாதா ஒரு குறுக்கு வழி?
இப்படி முறையற்று வாழத்துணிபவர்களின் சட்ட விரோதச் செயல்களை மேற்சொன்ன ‘கற்றோர்’ தங்களது குறுகிய பார்வையால் ஊக்குவிக்கத் துணிவரா? ஊக்குவித்த பின்னர் இதே சமுதாயத்தில் இவர்கள் பாதுகாப்பாக வாழ்ந்திட முடியுமா?
மக்களின் இந்தப் போக்கு கண்டு நமது கல்வி முறைகளிலேயே வெறுப்பு வருகிறது. ஒரு கிராமத்து குறு விவசாயியிடம் இருக்கும் ஒரு தார்மீக உணர்வு கூட இல்லாத இவர்களின் கல்வி இவர்களது வாழ்வை மாற்றுமா? அல்லது இவர்களுக்கு முறையோடு வாழத்தான் கற்றுக் கொடுக்குமா?
கல்வி அறிவுக்கண்ணைத் திறக்கும் என்பார்கள். கற்றும் குருடராய் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குறியதன்றோ?
ஊழலைப் பற்றியும் வாழ்வைப்பற்றியும் இவர்கள் கொண்டுள்ள குறுகிய சுயநல நோக்கு இவர்களை குருடராய் மாற்றுவது மட்டுமல்லாது வரும் தலைமுறையினரையும் குருடராய் மாற்றிவிடுமன்றோ…இது மிகப் பெரிய அவலமன்றோ?
மீண்டும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
கஷ்டப்படாமல் காரியமாக வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலரால் தான் ஊழல் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு லஞ்சம் வாங்குபவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. எதிர்ப்புகளை சமாளித்து, லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே அறவே ஊழலை அழிக்கலாம். ஆனால் சுயநலமும் சோம்பேறித்தனமும் நிறைந்த இந்த உலகில் அது இயலாத செயலாகிவிட்டது.
ReplyDelete@ இந்திரா..
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி. அதன் அபாயத்தை அறிவுறுத்தியே இந்தப் பதிவு.
தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்