Followers

Wednesday, August 5, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII


5.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII


 
முந்தைய பகுதிகளுக்கு:
1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II
3. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III
4. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV
5. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி V

 

நண்பர் சொன்னதைக் கேட்ட எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

எப்படி இது நடந்தது? வியந்து போனேன்.

என் மனைவி நாங்கள் வெகுநேரமாய் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு எங்கள் இருவருக்கும் சாப்பிட சிற்றுண்டி கொண்டு வந்தாள். நண்பர் நொறுக்குத் தீனியை விரும்பமாட்டார் என்பதாலும், நேரம்  மாலை ஏழு மணி ஆகிவிட்டதாலும் இருவருக்கும் குழிப்பணியாரம் தட்டில் சட்னியுடன் வைத்துக் கொண்டு வந்தாள்.

மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் நண்பர் தட்டிலிருந்த பணியாரத்தை சாப்பிட்டார். கூடவே சுடச் சுட டீ வந்தது. இருவரும் ஹாலில் உட்கார்ந்த படியே சிற்றுண்டியை முடித்தோம். சிற்றுண்டியை முடித்து டீக் கோப்பையை கையில் எடுத்தவன் நண்பர் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்.

யோசிக்க யோசிக்க அது பிடிபடவில்லை. நண்பர் ஒரு திட்டத்தோடு செயல் பட்டு வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சூழலை வெற்றியை நோக்கி மெதுவாக நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார் என்பது தெளிவாய்த் தெரிந்தது.

முதலில் சூழ்நிலை குறித்த ஆவணங்களை சேகரித்து / உருவாக்கியிருக்கிறார்.

நிலையை மோசமடையாமல் தடுக்க ஒரு தடுப்பணைபோல வழக்குத் தொடுத்திருக்கிறார்.

பின்னர் அதிகாரிகளுக்கு மனு திரும்பத் திரும்ப கொடுத்து தனது குரலுக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார்.

போதுமான காலம் காத்திருந்திருக்கிறார்.

அதற்குப் பின்னர் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி தனது மனுமீது எடுத்த நடவடிக்கை குறித்த கேள்விகளை எழுப்பி தகவல்களைக் கோரியிருக்கிறார்.

தகவலறியும் சட்டத்தின்படி தாமதமாக தகவலளித்தாலோ அல்லது தவறான தகவலளித்தாலோ சம்பந்தப்பட்ட நபர் தண்டனைக்கு உள்ளாவார் என்பதால் அதிகாரிகளை அவருக்கு தாமதமின்றி பதிலளிக்கும்படியான கட்டாயத்திற்குள்ளாக்கியிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட மனு மீது சரியான ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் பதிலளிக்க முடியாதாகையால் உடனடியாக ஆய்வு நடந்திருக்கிறது.

2000 மாவது வருடத்திற்கு பிறகான கட்டிட அத்து மீறல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதிய சட்டம் சொல்வதால் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். குடியிருப்பின் பொது இடத்தை ஆக்கிரமித்தபடி புதிதாய் கட்டிய சுவற்றை இடித்துத் தள்ளியிருக்கின்றனர்.

யோசிக்க யோசிக்க சுவராசியமாகத்தான் இருந்தது.

லேசான இருள் கவிந்தது. நண்பரும் நானும் ஆளுக்கொரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வெளியே முன் வாசலில் வந்தமர்ந்தோம். சூழல் ரம்மியமாய் இருந்தது.

தன்னை இளகிக் கொண்ட நண்பர் தொடர்ந்தார்.

“உதவி செயற்பொறியாளர் ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘சார் நேத்தே ஒரு லெட்டர் பாதுகாப்பு கேட்டு கொடுத்திருந்தோமே.. வந்து சேர்ந்ததா இல்லையா. இங்கு யாரையும் காணோம். உடனே அனுப்புங்க சார்.’ என்று முடித்தார். சற்று நேரத்தில் ஒரு காவலர் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினார். அதுவரை உதவி செயற்பொறியாளரைப்பார்த்து கைகளை நீட்டி ஆவேசமாய் ‘உன்னை ஒழிச்சுடுவேன்.. ‘என்று பேசிக்கொண்டிருந்த கட்சிக்காரன் காவலரைப் பார்த்ததும் சற்று அடங்கினான்.

 
 
கட்சிக்காரன் காவலரைப்பார்த்து ‘அய்யா இருக்காரா?’ என்றான். அதற்கு காவலர்,’இங்க பார். இது டிபார்ட்மெண்ட் விஷயம். ஏதும் கூச்சல் போடக்கூடாது. இப்படி நடந்துட்டினா நான் பேசாம கேஸ் புக் பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன். டிபார்ட்மெண்ட் வேலை செய்யறவங்களை தடுக்கக் கூடாது. புரிஞ்சுக்கோ..’ என்றார்.

அதற்குப் பிறகு கட்சிக்காரன் அமைதியாகி விட்டான்.

ஆக்கிரமித்து கட்டிய சுவற்றை சுத்தமாக இடித்து தள்ளினர். அந்த இடிபாடுகளையும் ஏற்கனவே கட்சிக்காரன் தனது வீட்டின் பக்கவாட்டுச் சுவற்றை இடித்ததனால் கிடந்த இடிபாடுகளையும் சுத்தமாக அகற்றினர்.

எல்ல வேலையும் நடந்த பின்னர் உதவி செயற்பொறியாளர், ‘ சார் உங்க வேலை முடிஞ்சதில்ல. இனியும் ஏதாவது இருக்கா?’ என்றார். நான் கட்சிக்காரனின் இடித்த வீட்டைக் காட்டி,’ இது அனுமதி பெறாமல் இடித்தது. மேலும் இதை வியாபார இடமாக மாற்ற முயற்சிக்கிறார். அது கூடாது. அது மட்டுமல்ல மேலே மூண்றாவது தளத்திலும் விரிவாக்கம் நடக்கிறது..அது மட்டுமல்ல இந்த அனுமதி பெறாத கட்டிடத்தை இடிக்கும்படி உத்தரவு கேட்டு நாங்கள் போட்ட வழக்கில் இதுவரை மாநகராட்சி Counter affidavit submit செய்யவில்லை’ என்றேன்.

‘இரண்டு நாளில் அவைகளுக்கு நேட்டீஸ் கொடுத்துடறேன் சார். உங்க case க்கு Counter affidavit submit செய்யறதுக்கும் ஃபைல் போட்டுடறேன் சார் ’ என்றார். ‘அப்ப சரி. போய்வாருங்கள்’ என்று அனுப்பி வைத்தேன்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து கட்சிக்காரனுக்கு, மாநகராட்சியிடமிருந்து அனுமதி பெறாமல் கட்டப்பெற்ற அவனுக்குச் சொந்தமான மூண்றாவது தளத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று கேட்டும், அனுமதி பெறாமல் அவனது தரை தள வீட்டின் பக்கச் சுவர்களை இடித்தது குறித்தும் அப்படிப்பட்ட மாறுதல்களைத் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கை வந்தது.

இரண்டு அறிவிக்கைகளை கைகளில் பெற்றதும் கட்சிக்காரனது முகம் இருண்டுவிட்டது.

எங்களை விரட்டிவிட்டு எங்களது குடியிருப்பை அப்படியே விழுங்க நினைத்தவனது நினைப்பில் மண் விழுந்து விட்டதென்பது அவனுக்கு தெரிந்து விட்டது. அதுமட்டுமல்ல இப்போது தன் வசம் இருக்கும் மூண்று வீடுகளில் ஒரு வீட்டிற்கு (மாநகராட்சி அனுமதி பெறாத மூண்றாவது தள் வீடு) கேடும் வந்து விட்டது என்பதையும் இனி தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் புரிந்து கொண்டான்.
அதிரடியாக வேறொரு காரியத்தில் இறங்கினான்.

இந்த அறிவிக்கைகள் வந்ததை வெளிக்காட்டாமலேயே தனது இரண்டு வீடுகளையும் விற்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டான். தனது மனைவி பெயரில் வாங்கி இருந்த மூண்றாவது தளத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட அனுமதி பெறாத வீட்டை அடுத்த இருபதே நாட்களில் விற்று விட்டான். அதை வாங்கியவர் ஒரு அப்பாவி. அவருக்கு இந்த வீடு பெரிய வில்லங்கத்தில் இருக்கிறதென்பது தெரியாது.

அது மட்டுமல்ல இரண்டாம் தளத்தில் தனது தந்தை பெயரில் வாங்கியிருந்த வீட்டையும் அடுத்த பதினைந்து நாட்களில் விற்று விட்டான்.

எங்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இப்போது தரை தளத்தில் உள்ள வீடு மட்டுமே கட்சிக்காரனின் பெயரில் இருந்தது.

எல்லாமே நல்ல படியாக முடிந்தது என்று நாங்கள் நிம்மதியாய் இருக்கும்போதுதான் அந்தக் கடிதம் வந்தது.

அந்தக் கடிதம் எனது பெயருக்கு கூரியர் சர்வீசில் வந்தது.

 
 
அதை பிரித்துப் படித்த நாங்கள் மூர்ச்சையடையாத குறை. அந்தக் கவரில் ஒரு கடிதமும் கூடவே ஒரு பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமும் இருந்தது.

கடிதத்தின் சாராம்சம்:

‘அன்பீர், உங்களது குடியிருப்பில் உள்ள கட்சிக்காரனது வீட்டை ஒட்டியுள்ள பொது இடமானது (ஏறக்குறைய 800 சதுர அடி) ஒரு போலிப்பத்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்பட்டு அது இரண்டு பேர்களுக்கு கை மாறியும் உள்ளது. இதை ஒரு நல்லெண்ணத்துடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.


இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி.’

ஆவணமா..?

 

 

'என்னிடம் ஆவணம் இருக்கிறது.. ஆவணம் இருக்கிறது' என்று கட்சிக்காரன் காவல் நிலையத்தில் திரும்பத் திரும்பச் சொன்னது பொடேரென்று பொட்டில் அறைந்த மாதிரி நினைவுக்கு வந்தது.
 
கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணத்தை பார்த்தேன். அது இரண்டு வருடங்களுக்கு முன்னர் அண்ணாநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணம். அதில் கூறப்பட்டிருந்த சொத்து எங்கள் குடியிருப்பின் பொதுச் சொத்து. அது முதல் பதிவிற்குப்பின்னர் இருவரிடம் கை மாறியிருந்தது.

ஆவணத்தைப் பார்த்ததும் அனைவரும் இடிந்து போனோம்.

நண்பர் சொன்னதைக்  கேட்டுக்கொண்டிருந்த எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆசுவாசப்படுத்திக் கொண்ட நண்பர் தொடர்ந்தார்.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

பதிவைத் தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII

அன்பன்,

வேதாந்தி.
 

 
 

1 comment:

  1. ஒரு மர்மத் தொடர் மாதிரி விறு விறுப்பா போகுது!
    தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...