Followers

Wednesday, August 19, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி X


19.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி X

  

7. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII
8. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VIII

9. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IX 
நண்பர் தொடர்ந்தார்.

“நான் அந்த மன அழுத்தத்திலிருந்து மீள சற்று நாட்களாயிற்று. FIR பதிவு செய்ததாலும், மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து அத்து மீறல்கள் பற்றி அறிவிக்கைகள் வந்ததாலும் கட்சிக்காரன் சற்று அடங்கிப் போயிருந்தான்.

கார் பார்க் குறித்து அவன் செய்திருந்த சூது எங்களுக்கு தெரியாது எனும் நினைப்பில் இருந்தான். நானும் சரியான நடவடிக்கை எடுக்கும் முன்னர் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்தேன்.

இதனிடையே குடியிருப்பின் விற்பனையாளரிடம் PROMOTER காவல் துறையினர் விசாரணை செய்தபடி இருந்தனர். அந்த நிலையில்தான் எங்களிடம் அவர் பேச விரும்புவதாக தகவல் வந்தது. ஒரு நடுநிலையாளரது வீட்டில் விற்பனையாளரை சந்தித்தோம்.

விற்பனையாளர் என்னைக் கண்டதும் ‘நீங்கள் என்ன என் மீது புகார் கொடுத்திருக்கின்றீர்கள்? எனக்கும் இந்த காலி இட அபகரிப்பு போலிப் பத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை..’ என்றார்.

 ‘அதை நானோ அல்லது காவல் துறையோ சொல்ல வேண்டுமே தவிர நீங்கள் சொல்லக்கூடாது’ என்றேன் எரிச்சலுடன்.

நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன் என்று தெரிந்ததும் சற்று அடக்கமாக, ‘நானும் உங்களைப் போல கட்சிக்காரனால் பாதிப்படைந்திருக்கிறேன்.’ என்றார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பேச்சை தொடர்ந்தேன்.

‘நீங்கள் கார் பார்க் என குறிப்பிட்டிருக்கும் இடத்தைத் தான் பத்திரம் தயாரித்து விற்பனை செய்திருக்கிறான். அதில் உங்களுக்கும் கூட்டு இல்லை என எப்படி நான் நம்புவது? இந்தக் குற்றத்தில் நீங்களும் ஒரு ACCESSORY தானே? எதை வைத்து அவனுக்கு கார் பார்க் விற்பனை செய்தீர்கள்?’ என்றேன்.

‘இல்லை. அப்படி இல்லை. ஏதோ தவறு நடந்து விட்டது..’ என்றார்.

அந்தச் சமயத்தில்தான் எனக்கு பொறி தட்டியது. உடனே நான், ‘அந்தத் தவறை சரி செய்து கொடுப்பீர்களா?’ என்றேன்.

‘நான் அதற்கு வழக்கறிஞரை ஆலோசித்துதான் பதில் சொல்லவேண்டும்’ என்றார்.

‘உங்களுக்கு நான் 15 நாட்கள் தருகிறேன். அதற்குள் இதற்கு ஒரு சுமுகமான முடிவை எட்டிவிட்டால் சரி. இல்லையேல் உங்கள் மீது வழக்கு தொடுப்பேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்தவுடன் மறுபடி எங்கள் குடியிருப்பின் பதிவு ஆவணங்களை ஆராய்ந்தேன்.

10 குடியிருப்பில் விற்ற 7 குடியிருப்புகளுக்கும் Schedule A and Schedule B  ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. Schedule A என்பது எங்கள் குடியிருப்பின் மொத்த பரப்பளவின் அமைப்பும் இடமும் குறிப்பிடப்பட்டது. Schedule B என்பது ஒவ்வொரு குடியிருப்பின் எண் அதாவது Flat A or B or C  இப்படி குறிப்பிட்டு அந்த குடியிருப்பின் சொந்தக்காரர் Schedule A வில் கண்டிருக்கும் சொத்தில் அனுமதி வாங்கி கட்டப்பட்ட குடியிருப்பின் வரைபடத்தில் காட்டப்பட்ட பொது இடங்களையும் பொது வசதிகளையும் மற்றகுடியிருப்பு வாசிகளுடன் சேர்ந்து அனுபவிக்க உரிமை உண்டு எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

அதே நேரம் ஏதோ ஒன்று தோன்ற விற்பனையாளர் எங்கள் மீது முதன் முதலில் போட்ட வழக்கின் AFFIDAVIT தேடி எடுத்துப் படித்தேன். அதில் விற்பனையாளர் நாங்கள் பொது இடத்தில் கார்களை நிறுத்தி அவருக்கு தொந்திரவு கொடுப்பதாகவும் உண்மையில் எங்களது குடியிருப்பில் கார் பார்க் இல்லையெனவும் மாநகராட்சி/CMDA அனுமதி பெற்ற வரைபடத்திலும் எந்த இடமும் கார் பார்க்குக்காக ஒதுக்கப்படவில்லை எனவும் எனவே நாங்கள் பொது இடத்தை கார் பார்க்கிற்காக உபயோகப் படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 
 
 
இதைக் கண்ட உடன்தான் எனக்கு உயிர் வந்தது போலாயிற்று. இனி விற்பனையாளர் கார் பார்க்கை விற்றது உண்மையென்றாரென்றால் ஏற்கனவே நீதிமண்றத்தில் எங்களது குடியிருப்பு கார்பார்க் வசதியுடன் கூடியது இல்லை என்று அவர் சொன்னது பொய்யாகி நீதி மண்றத்தில் பொய்த்தகவல் கொடுத்த குற்றத்திற்கு ஆளாவார்.

இல்லையென்றால் இல்லாத ஒரு உரிமையை பொய்யாக கட்சிக்காரனுக்கு எழுதிக் கொடுத்த குற்றத்திற்கு ஆளாவார். ஆனால் இந்த இரண்டாவது குற்றம் கட்சிக்காரன் விரும்பினால் அவர் மீது வழக்கு தொடுக்க ஏதுவாகும். எனவே அவரது நிலை சிக்கலானது.

நான் நினைத்தது போலவே விற்பனையாளரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனாலும் நான் கவலைப்படவில்லை.

கையில் இருந்த ஆவணங்களை வைத்து விற்பனையாளருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவர் பொது இடத்தில் 4 அடிகளை குறைத்துக் குறிப்பிட்டும், கார் பார்க் உரிமையையும் சமீபத்தில் விற்பனை செய்த மூண்று வீடுகளின் ஆவணத்தில் தவறுதலாக SCHEDULE ல் குறிப்பிட்டதால் எங்களது உரிமை பாதிக்கப்படுவதாகவும் இந்த தவறுதலான விற்பனை ஆவணப்பதிவினால் சமீபத்தில் வாங்கியவர் 800 சதுர அடி பொது இடத்தை போலிப்பத்திரம் தயார் செய்து விற்றிருக்கிறார் எனவும் அதனை மிகுந்த சிரமத்துடன் நாங்கள் ரத்து செய்ததாகவும் பின்னாளில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் படிக்கு விற்பனையாளர் ஒரு RECTIFICATION DEED பதிவு செய்து எங்களது உரிமைகளை காப்பாற்ற கடமைப் பட்டிருக்கிறார் எனவும் ஆகவே உடனடியாக இந்தத் தவறுகளைத் திருத்தி திருத்திய ஆவணத்தை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். இந்தக் கடிதத்தை ஒப்புகைச் சீட்டுடன் கூடிய பதிவுத் தபாலில் விற்பனையாளருக்கு அனுப்பி வைத்தேன்.

விற்பனையாளரது நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையானது.

கார் பார்க் இருக்கிறது,, நான் விற்றது சரிதான் என்றாரென்றால் போலிப்பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததில் இவருக்கும் நோக்கமும் பங்கும் உண்டென்றாகி விடும்.

கார் பார்க்  இல்லையென்றால் கட்சிக்காரன் அவரை விடமாட்டான்.

நான் எதிர் பார்த்ததைப் போலவே விற்பனையாளரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

ஒரு மாதம் கழித்து ஒரு இளம் வழக்குரைஞரைப் பார்த்து இந்த வழக்கு குறித்து விவாதித்தேன்.

மிகவும் தயங்கினார். ஆனால் நான் அவரை ஊக்குவிக்கும் விதமாக , ‘ இதில் ஆர்க்யூமெண்ட்டுக்கே இடமில்லை. எல்லாவற்றிற்கும் ஆவணம் இருக்கிறது. This is a strong case with all the supporting evidences. You can win it like anything. வேண்டுமானால் யாரையேனும் சீனியரை கன்சல்ட் செய்தபின்னர் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.

எனக்கு இளம் வழக்குரைஞர்தான் தேவைப்பட்டது.

அனுபவம் கொண்டவரிடம் விசாரித்தபோதுதான் இந்த வழக்கு நிற்காது என்றும் இந்த வழக்கை போட 80 லட்ச ரூபாய்க்கு மேல் வழக்குச் செலவாகும் என்றும் சொன்னார். அதில் எனக்கு சம்மதமில்லை. எனவே என் விருப்பப்படி வழக்கு பதிய இந்த இளம் வழக்குரைஞரைத் தேடி வந்தேன்.

ஒரு பதினைந்து நாட்கள் கழித்தபின்னர் அதே வழக்கறிஞரைப் பார்த்தோம். வழக்கை எடுத்துக் கொள்ளச் சம்மதித்தார். Complete affidavit draft ஐ தயார் செய்து கொடுத்தேன். Requesting for the direction to register a rectification deed by the Promoter in a bid to correct the above said mistakes தான் முக்கிய கோரிக்கையாக வைத்து வழக்கு பதியப்பட்டது.

Rectification Deed to correct the mistake என்பதால் வழக்குச் செலவாக நாங்கள் சொத்து மதிப்பிற்கு நீதி மண்றத்தில் பணம் கட்ட வேண்டி வரவில்லை.

முதல் பிரதி வாதியாக விற்பனையாளரையும் மற்ற பிரதிவாதிகளாக கட்சிக்காரன், அவனது மனைவி, அவனது தகப்பனார் ஆகியோரையும் சேர்த்தோம்.

வழக்கு நடந்த போது வேடிக்கையாக இருந்தது.

 
 
 
விற்பனையாளர் மிகப் பெரியதொரு வழக்கறிஞரை வைத்து வாதாடினார். அவரது வாதம் விற்பனையாளர் எந்த ஒரு கெட்டநோக்கோடும் கார் பார்க்கை கட்சிக்காரருக்கு கொடுக்கவில்லையென்றும் இது சாதாரணமாக ஒரு மேம்போக்காக ஆவணம் எழுதியதால் வந்த தவறென்றும் நிரூபிக்க முனைவதாக இருந்தது.

வழக்கு முடிந்து தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது.

அனுமதி பெறப்பட்ட வரைபடத்தில் உள்ளபடியும் மற்ற வசதிகளும் நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு திருத்த ஆவணம் விற்பனையாளரை பதிந்து தரச் சொல்லி தீர்ப்பாகியது.

எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தது.

இப்போது கட்சிக்காரன் தான் இடித்துப் போட்ட கீழ் வீட்டைக் கட்டி முடிக்காமல் வேறிடத்தில் குடியிருக்கிறான். வழக்கு எங்களுக்கு சாதகமாக வந்ததில் கட்சிக்காரனுக்கு எங்களை விட எள்ளளவும் அதிக உரிமை பொது இடத்தில் இல்லை என முடிவானது.

எங்கள் குடியிருப்பில் எல்லோரும் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம்” என்று முடித்தார் நண்பர்.

பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறார் நண்பர் என்பதை உணர்ந்தேன்.

அது மட்டுமல்ல. சில நேரங்களில் பிரச்சினைகளிலேயே அதற்கான தீர்வும் இருக்கிறதென்பதற்கு இதை விட ஒரு சிறந்த நிகழ்வைச் சொல்ல முடியாதென நினைக்கிறேன்.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

 

 

 

2 comments:

  1. சிக்கல்கள் எப்படியெல்லாம் வருகின்றன?

    ReplyDelete
  2. அப்பாடா! எப்படியோ பிரச்சனை தீந்தது!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...