6.9.10
ஒரு தலைவனைத் தொடரலாமா?
வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 3
ஒருவரை முன் மாதிரியாகக் கொள்ளலாம். ஆனால் அவரை அப்படியே பின் தொடரலாமா?
ஒரு தலைவனைப் பின் தொடர்தல் நல்லதா என்பது குறித்துப் பேசுவோம்.
நாம் பேசிக்கொண்டிருப்பது நமது தொல்விகளை வெற்றிகளாக்குவது பற்றியும் மற்றும் நமது வெற்றிகளை நிரந்தர வெற்றிகளாக்குவது பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் மிக முக்கியமான இரண்டு சூழல்கள் பற்றியும் அதன் காரணிகளைப் பற்றியும் மிகத்தெளிவாக நாம் அறிந்திருக்க வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுக பேசிக்கொண்டிருக்கிறோம்.
சூழல்கள் இரண்டு. ஒன்று அகச்சூழல். மற்றொன்று புறச்சூழல்.
இதுவரை வந்த பேச்சுக்களில் அகச்சூழல் மற்றும் அதன் காரணிகளைப் பற்றிப் பேசினோம். இப்போதும் அதையேதான் தொடர்கிறொம்.
சென்ற பதிவில் பணிக் குழுமத்தின் நோக்கங்கள் ( corporate goals) மற்றும் சமுதாய நோக்கங்கள் ( community goals) மற்றும் நமது தனிப்பட்ட நோக்கு (individual goal) ஆகியவற்றைப் பற்றி பேசினோம்.
சமுதாய நோக்கங்கள் மற்றும் குழுமத்தின் நோக்கங்கள் நமது நோக்கங்களை பாதிக்கக் கூடாது என்றும் முன் பதிவில் பார்த்தோம்.
சிலர் குழுமத்தின் நோக்கோடு தனது நோக்கினையும் இணைத்துக் கொள்வதும் நடக்கிறது. இது சில நேரங்களில் இவர்களது தனி நோக்கினை குழு நோக்கிற்காக தியாகம் செய்யும் அளவிற்கு இவர்களை குழுமம் சார்ந்தவர்களாக மாற்றிவிடும். இந்த விளைவு குழுமத்திற்கு மிகவும் உயர்ந்தது. இது கருதித்தான்- இதை நோக்கித்தான் - இன்னமும் பெருமளவு குழுமங்களில் தங்களது குழுமங்களின் பங்குகளை ஊக்கப் பங்குகளாக தரும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான குழும நிறுவனர்கள் (corporate founders) குழும நோக்கும் தனது நோக்கும் ஒன்றாகவே கொண்டிருப்பர்.
இங்கு ஒரு தலைவனைப் பின் தொடர்தல் குறித்துப் பார்ப்போம்.
தலைவன் என்பவன் தனது குறிகோள் குறித்து ஒரு தெளிவான சிந்தனை கொண்டவன். குறிக்கோள் தெளிவானதென்றால் அதை அடைவதற்கான பாதை குறித்தும் அவனுக்கு ஒரு தெளிவான சிந்தனை இருக்கும். ஆக நாம் தொடர்பவர் அல்லது தொடரும்படி நம்மை ஈர்ப்பவர் மிகுந்த தெளிவானவர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனவே இவரைத் தொடர்தல் குறித்து இரு மடங்கு நாம் தெளிவாக இருக்கவேண்டும்.
நாம் அவரைத் தொடரலாமா வேண்டாமா என்பது தான் இப்போது நாம் நிர்ணயிக்க வேண்டியது. இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒருவரது infatuation or influence நமது சிந்தனையை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கக் கூடியது.இதில் நமக்குத் தெளிவில்லாததனாலேயே தீக்குளிப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. இது நமது நாட்டில் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு கொடுமையான நிகழ்வு.
நான் ஏற்கனவே கூறியதுபோல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கு அல்லது குழுமத்தின் நோக்கினை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவனது தனி மனித உயர்விற்கு உகந்ததாகும். இங்கு நான் ஒருவன் சுயநலவதியாக இருப்பதைச் சொல்லவில்லை. தன்னைச் சீர்படுத்திக்கொள்வதென்பது மிகவும் முதன்மையானது. இது அவனது சிந்தனையை தெளிவாக்கும். இத்தகைய ஒருவனே சமுதாயத்தைக் குறித்தும் சரியான பார்வையினைக் கொண்டிருப்பான்.இது குறித்து பின்னர் பேசுவோம்.
மேலே சொன்னது போலல்லாமல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கினையும் கலந்து கொண்டிருந்தானால்அவன் தனது சமுதாய நோக்குப் போர்வையில் சுய முன்னேற்றத்திற்கான வழி வகுத்துக் கொண்டுள்ள கபட வேடதாரி. அவனை தொடர்வது மிகவும் ஆபத்தானது.
இப்படி அல்லாது சமுதாய நோக்கே தனது நோக்காக கொண்டுள்ள நபர்களே தலைமை தாங்கும் தகுதியுடையவராகின்றனர். அவர்க்கென ஒரு தனி நோக்கும் அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்காது.இதற்கு உதாரணமாக ராணுவத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு தனி நோக்கு கிடையாது. வெறும் சமுதாய நோக்கு மட்டும் தான். அதே போல் சில தலைவர்கள் தங்களது குடும்பத்தினை கருதாது பொதுநோக்கு மட்டும் கருதியே வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர். சிலர் தமது வெற்றியை, நோக்கை, சமுதாயத்திற்கே அர்ப்பணிக்கும் வகையில் பெரிதாய்க் கொள்கின்றனர். நமது முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களை இதற்கு உதாரணமாய்க் காட்டலாம்.
சில நேரங்களில் சமுதாய நோக்கினை மட்டுமே தமது நோக்காக கொண்டிருக்கும் தலைவர்கள் தமக்குப் பிடித்திருந்தாலுமஅவர்களை அப்படியே தொடராமல் , தமது சிந்தனையால் அந்த நோக்கினை மேலும் சிறப்பாக்கி தனக்கென தனி வழி கொண்டவர்களும் உண்டு. பெரியார் - அண்ணா மற்றும் காந்தி - நேதாஜி போன்றொரை இதற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம்.
எனவே தெளிவான சிந்தனை கொண்டவர்களே தொடர்தலில் சிறப்பான முடிவெடுக்க முடியும்.
தெளிவான சிந்தனை தனி மனித வெற்றிகளுக்கு மட்டுமன்றி சமுதாயத்தின் சிறப்பான வெற்றிகளுக்கும் மிக முக்கியமானதாகிறது.
இன்னமும் பேசுவோம், சிந்திப்போம்.
அன்பன்
வேதாந்தி.
No comments:
Post a Comment