27.9.10
பங்குச்சந்தையில் port folio வும் வாழ்க்கையில் வெற்றிக்கான நோக்கங்களும்
காளைப் பிடியும் கரடிப் பிடியும் சந்தைக்கு மட்டுமல்ல வாழ்விற்கும் பொதுவானது.
மாற்றங்கள் மட்டுமே மாறாதது. இந்த மாற்றங்கள் ஏறுமுகமானதாகவோ அல்லது இறங்குமுகமானதாகவோ இருக்கலாம். மாற்றங்கள் சொல்லும் செய்தி தோல்வியல்ல மாறாக மாற்றங்கள் நமது வெற்றிக்கு வழிகாட்டும் காரணிகள். வாழ்க்கையின் மாற்றங்களோ அல்லது சந்தையின் மாற்றங்களோ ஒருவரை தன் முதன்மையான நோக்கை கைவிடச்செய்யலாகாது. வாழ்க்கையில் இந்த முதன்மையான நோக்கு வாழ்வது, சந்தையில் இந்த முதன்மையான நோக்கு செல்வம் பெருக்குவது. இதைப்பற்றி முன் பதிவுகளில் பேசியுள்ளேன்.
வாழ்வில் முதன்மையான நோக்காக வாழ்வது என்றிருக்கையில் வாழ்வில் வெற்றியடைவது நமது அடுத்த நெடு நோக்காக இருக்கவேண்டும் எனவும் பேசியிருந்தேன். இப்போது இந்த வெற்றிக்கான சூழல் மாற்றங்கள் குறித்தும் அது சொல்லும் செய்தி குறித்தும் பேசுவோம்.
நாம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நோக்கில் ( direction ) நமது வெற்றி குறித்த பிடிவாதத்துடன் இருக்கலாகாது. இது நமது சூழலைக் கருதாத ஒரு நிலை. மிகப் பெரும்பாலான சமயங்களில் இது - காற்றை எதிர்த்துச் செல்லும் பாய்மரக் கப்பலைப்போல நாம் ஒரு வலுவான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கலாம். எனவே காற்றோடு சென்று கரையை அடைவது எளிதானது மட்டுமல்லாது புத்திசாலித்தனமானதும் கூட.
இது எப்படி?
காற்றுதான் நாம் செல்லும் வெற்றியின் திசையை நிர்ணயிக்கவேண்டும். அல்லது காற்று செல்லும் திசை, அதன் வேகம் ஆகியவைகள் சொல்லும் செய்திகளே நமது வெற்றியின் திக்கையும் அதை அடைய நமது இயக்கத்தினையும் நிர்ணயிக்கும் காரணிகளாய் இருக்க வேண்டும்.
சரி. பங்குச்சந்தையோடு நான் வாழ்வின் வெற்றிகளை ஒப்பிட்டிருப்பது சரியாகுமா?
ஆமாம். பங்குச்சந்தையில் நமது நோக்கம் செல்வம் சேர்ப்பது. ஆனால் அது ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியா அல்லது ONGC பங்குகளை வாங்கியா என்பது அல்ல. எதை வேண்டுமானாலும் - சந்தை சொல்லும் செய்தியைக் கொண்டு எதை வேண்டுமானாலும்- வாங்கி செல்வம் சேர்ப்பவனே காற்றின் திசையறிந்து பாய்மரம் விரித்து பயணம் செய்து கரையை அடைவதைப் போல வெற்றியைத் தொடுவான்.
இதையே பங்குச்சந்தை நிபுணர்கள் portfolio management என்று சொல்வார்கள்.
முதலீடுகளை small cap, Mid cap, Large cap, என்று மட்டுமல்லாது sector wise ஆராய்ந்து சந்தைச் சூழல் சொல்லும் செய்தியினை சரியாக அறிந்து அதன் படி தங்கள் முதலீட்டை மாற்றிக் கொள்வார்கள்.
சரி. சந்தையில் இப்படி. நம் வாழ்வில் நாம் என்ன செய்ய?
வாழ்வில் நமது முதன்மையான நோக்கு என்பது வாழ்வது. அடுத்த நோக்கு நமது வெற்றி. இவைகளை நிறைவேற்றும் போது எக்காரணம் கொண்டும் சமுதாய நோக்கிற்கோ அல்லது தனி மனிதனது ஒழுக்கத்திற்கோ மாறான செயல்களைச் செய்யாதிருப்பது.
சரி. Portfolio management எப்படி?
நாம் நமது குறிக்கோள்களாக வழக்கமாக எதை நிர்ணயிக்கிறோம்? டாக்டர் ஆவது அல்லது இஞ்சினியர் ஆவது. அல்லது இதைப்போல ஒன்று.
நாம் இத்தகைய நோக்குகளை நிர்ணயிக்கும் போது நான் ஏற்கனவே கூறியது போல இந்த நோக்குகள் நமது திறனுக்குட்பட்டதா என ஆராய்வதில்லை. இப்படி ஆராயாமல் கொள்ளும் நோக்கு ‘நான் அம்பானியாவேன்’ என்பதுபோல பொத்தாம் பொதுவில் ஒருவன் கொள்ளும் ஆசை. இது பல நேரங்களில் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். ஒருவரது மனத் தெளிவினை கெடுக்கலாம். ஒப்பிடும் போக்கை வளர்க்கலாம். ஆகவே இது தவறு. இது எப்படியென்றால், ‘நான் reliance company யின் 50% பங்குகளை வாங்குவேன்’ என தன் தகுதியறியாது நோக்கினை நிர்ணயித்துக் கொண்டு பங்குச்சந்தையில் எதிர்பார்ப்புடன் இறங்குபவரைப் போல. சந்தேகமின்றி இவருக்கு வாழ்வில் ஏமாற்றமே மிஞ்சும். இதை விட்டு சந்தை காட்டும் வழி சென்று தன் வாழ்விற்கு செல்வம் சேர்ப்பவனே வெற்றிக்கு வழிகோலுவான்.
வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் சந்தர்ப்பங்களை, காட்டும் மாற்றங்களை, சொல்லும் செய்திகளை சரியாக புரிந்துகொண்டு, சரியாக பயன்படுத்திக்கொண்டு அது காட்டும் வழியே நமது சிறு சிறு நோக்குகளை நிர்ணயித்தபடி சந்தையின் செய்தியறிந்து தனது முதலீட்டை மாற்றிக் கொள்ளும் ஒரு கைதேர்ந்த சந்தை வல்லுனரைப்போல, காற்றடித்த திசையை பயன்படுத்திக் கொண்டு கரை சேரும் சிறந்த மாலுமியைப் போல வாழ்வில் வெற்றியை வென்றெடுப்போம், சிறக்க வழ்வோம்.
சந்தை மாற்றங்கள் முதலீட்டிற்குச் செய்தி சொல்வது போல வாழ்வின் மாற்றங்கள் நாம் கொள்ள வேண்டிய குறிக்கோள்களுக்கு சொல்லும் செய்தியை அறிந்து வாழ்வில் மேன்மை கொள்வோம்.
வாழ்க்கையைப் பற்றி, வாழ்வதைப் பற்றி இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
No comments:
Post a Comment