கோபம் ஒருவனது பலமா அல்லது பலவீனமா?
தென் ஆப்பிரிக்கவில் காந்தியடிகளின் மீது நடந்த இனவெறித் தாக்குதலால் காந்தியடிகள் அடைந்த கோபமே அவரை மகாத்மாவாக்கிற்று மற்றும் இந்தியர்களான நமக்கு விடுதலையும் பெற்றுத் தந்தது.
இதைப்போலவே கோபப்பட்ட எல்லொராலும் சாதிக்கமுடியவில்லை. தம் மக்களுக்கு விடுதலை பெற்றுத தர இயலவில்லை. ஏன்? மாறாக சிலரது கோபம் மிகுந்த மோசமான பின்விளைவுகளில் முடிந்திருக்கிறது. இது
எப்படி?
எப்படி?
கோபம் ஒரு எதிர்வினை. அகத்திலிருந்து புறப்படும் ஓரு மகா சக்தி. இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். இதனை அப்படியே வெளிப்படுத்தலோ அல்லது உள்ளடக்கிவைத்தலோ மிகக் கடுமையான பின் விளைவுகளை உண்டாக்கும்.
நாம் அகச்சூழல்களையும் புறச்சூழல்களையும் வெற்றிக்கு உரிய வகையில் கையாளுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். கோபம் என்பது அகச்சூழலை பாதிக்கக் கூடியஒரு முக்கியமான காரணி.
கோபம் கொண்டவன் நிதானத்தை இழக்கிறான். கோபம் ஒருவனைக் குருடனாக்கி, சிந்தையை மறைத்து, கள் குடித்த குரங்காய் தன்னிலை மறக்கச்செய்து தன் வினைகளால் தனக்கு மிகுந்த எதிரிகளை உருவாக்குவதோடல்லாமல் தானே தனக்கு எதிரியாகி தன்னை அழிக்கும் எல்லாச் செயல்களையும் செய்துவிடும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
சற்று நிதானமாய் யோசித்துப் பாருங்கள். இத்தகைய மாபெரும் சக்தியினை தனக்குச் சாதகமாக செயலாற்றும்படிக்கு அதை வளைத்துப் போடுபவன் எத்துனை புத்திசாலி?அதைப் பற்றித்தான் இன்றைய பேச்சு.
கோபத்தினை அடக்கிவைப்பது அதனை வெளிப்படுத்துவதைவிட பெரும் ஆபத்து. அது ஒருவனது மனதை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும்.
பின் என்னதான் வழி?
ஒன்று கோபப்படுவதை விட்டுவிடவேண்டும். அதாவது கோபத்தை உணரவே கூடாது. அல்லது இந்த மகா சக்தியை நம்மை நல்வழிநடத்தும்படிக்கு நாம் அதனை மாற்றிக் கொள்ளவேண்டும்.
இது எப்படி?
கோபம் முதலில் சிதைப்பது நம் நிதானத்தை. நாம் நம் நிதானத்தை கோபம் ஆள்வதைத் தடுத்து நிதானத்தால் கோபத்தை ஆளவேண்டும். ஆமாம். ஒருவன் கோபப்படும்போதுதான் மிகுந்த நிதானத்தோடு சிந்திக்க வேண்டும். தன் சூழலை கூர்மையாக ஆராய வேண்டும்.
எதைக்கண்டு கோபம் கொண்டோமோ அதை வெல்ல இந்தக் கோபத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கோபம் என்கின்ற பெருந்தீயை அப்படியே வெளிவிடாமல் தனது நோக்கினை வெல்ல தன்னை உந்தும் ஒரு சக்தியாக, motivational factor to achieve one’s goal ஆக மாற்றிக்கொள்ளவேண்டும்.இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பெற்ற அடியின் கோபமே அதனை உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக்கியது.
எனவே சரியாகப் பயன்படுத்தப்படும் கோபமே ஒரு ஆக்க சக்தியாக மாறி எல்லொருக்கும் பயன்படும். இதுவே ஒருவனுக்கு பெரும் பலம்.
மாறாக சரியாக பயன்படுத்தாத - ஆற்றுப்படுத்தாத- தன் சிந்தனையைத் தூண்டி தன் வெற்றிக்கோ அல்லது தன் சமுதாயத்தின் வெற்றிக்கோ ஒருவனைப் பாடுபடத் தூண்டாத கோபம் - தன் நிதானத்தினை கொன்று வெறியேற்றி தன்சிந்தனையை மதம் பிடிக்கச் செய்யும் கோபம், மிகுந்த பலம் கொண்ட சாத்தானைப் பொன்றது. இத்தகைய கோபம் ஒருதனிமனிதனின் பலவீனம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே கீழே தள்ளி அழிக்கச் செய்யும் தீய சக்தியும் கூட. ஹிட்லரின் ஆற்றுப் படுத்தாத கோபமே அவரையும் அழித்து, அவரது இனத்தார்க்கும் தீராப் பழியை உண்டாக்கியது.
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
நன்றாக எழுதுகிறீர்கள் , உங்கள் பதிவுகளை தமிழ்மணம் , இன்டலி , உளவு , தமிழ் 10 போன்றவற்றில் இணைத்தால் உங்கள் இடுக்கை இன்னும் அதிக சென்றடையும்
ReplyDeleteநன்றி
ReplyDeleteதிரட்டிகளில் இணைத்துள்ளேன். ஒருவேளை ஒட்டுப்பதிவு இல்லாததால் பிரபலமடையவில்லயோ என்னவோ.
எனது பதிவு தங்களைப் போன்ற நண்பர்களை பெற்றுத்தந்ததே மிக்க மகிழ்ச்சி.
தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மீண்டும் நன்றி.
அன்பன்
வேதாந்தி