29.9.10
முக்கிய தருணங்களில் முடிவெடுப்பது எப்படி?
முடிவெடுப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அது நமது வாழ்வின் பாதையை நிர்ணயிப்பது. சில முடிவுகள் நமது வாழ்வின் திசையையே மாற்றலாம். எனவே முடிவெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டவேண்டும். இது நான் இதுவரை பேசியதில் உள்ளபடி சூழல் சொல்லும் செய்திகளை அறிந்த பின் அதனை தனது வாழ்வில் பொருத்தி தனது முன்னேற்றத்திற்கு சூழல் சொல்லும் செய்திக்கேற்ப தனது நோக்கினை நிச்சயிக்கும் நிலைதான் இந்த முடிவேடுக்கும் நிலை.
பெரும்பாலான சமயங்களில், சூழல், ‘உண்டு அல்லது இல்லை’ என்ற தொனியில் ( Yes or No) முடிவெடுக்க நமக்கு சந்தர்ப்பங்களை அளிப்பது கிடையாது. உற்றுக் கவனித்தோமானால் சில இடைப்பட்ட நிலையில் முடிவேடுக்கும் விருப்பங்களும் ( Gray area choices ) மறைந்திருப்பது புரியும்.
முதலில் நாம் முடிவெடுத்தே ஆகவேண்டுமா என உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த முடிவெடுக்கும் உரிமை தன்னை மட்டும் சார்ந்ததா அல்லது மற்றவரையும் சார்ந்ததா என பார்க்க வேண்டும். மற்றவரையும் சார்ந்ததென்றால் மறுக்காமல் அவரது ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அவைகளையும் நமது முடிவேடுக்கும் வழிக் காரணிகளாக கொள்ளவேண்டும். முடிந்தால் முடிவெடுக்கும் உரிமை தன்னிடம் மட்டுமே இருந்தாலும் கூட நமது முடிவால் பாதிக்கப் படக்கூடிய, நமது முடிவுகளின் விளைவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை உணரக்கூடிய நம் நலம் விரும்பிகளின் கருத்துக்களையும் கொள்ள வேண்டும். இறுதியாய் சொன்ன இது முடிவெடுத்த பின்னராகக் கூட இருக்கலாம். இது ஏறக்குறைய தான் எடுத்த முடிவினை அலசும் நோக்கில் கூட இருக்கலாம். இந்தக் கருத்து அலசலின் போது ‘தான்’ என்ற நிலைப்பாடும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ‘மூடிய மனமும், ( closed mind ) இல்லாது இருத்தல் மிக முக்கியம். முடிவெடுத்தலின் போது தனக்குத் தெரியாமல் விட்டுப்போன காரணிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறியவே இந்த கருத்து அலசல்.
இந்தக் கருத்து அலசல்கள் ஒரு Loud discussion போல. இது நமது பார்வையை விரிவு படுத்தும். இதுமட்டுமல்லாது மற்றவரது கருத்துக்கு நமது முடிவெடுத்தலில் நாம் கொடுக்கும் இந்த அங்கீகாரமும, நமது ‘தான்’ என்ற அகந்தையற்ற அனுகுமுறையும் நமது மதிப்பை மற்றவர்களிடையே உயர்த்தி மற்றவரை நம்மீது மிகுந்த அன்பு கொள்ளச் செய்யும். மிக முக்கியமாக குடும்பச்சூழலில் இந்த முடிவெடுக்கும் முறை மிகுந்த நேர் மறை விளைவுகளை ஏற்படுத்தி குடும்ப உறுப்பினர்களிடையே நம் மீது மிகுந்த நம்பிக்கையை வளர்த்து, குடும்ப ஒற்றுமையை காப்பாற்றும். இது மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களுக்கும் தெளிவான முடிவெடுக்கும்முறை குறித்து ஒரு அனுபவத்தையும் உண்டாக்கி அவர்களை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்ள தயார் படுத்தும்.
சரி. முடிவெடுப்பது எப்படி?
நான் ஏற்கனவெ பேசியபடி முடிவெடுத்தலில் சூழல் காட்டும் அல்லது சூழல் சொல்லும் செய்தியிலிருந்து நாம் பெற்ற வழிகளை ( options ) ஒரு வெள்ளைத் தாளில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். இதில் Gray area choices ம் அடங்கும். பின்னர் ஒவ்வொரு வழியையும் ஒரு தனி வெள்ளைத்தாளில் எழுதி அதன் கீழே ஒரு அட்டவணையை உருவாக்குங்கள். இந்த அட்டவணை அந்தத் தாளில் சொல்லப்பட்ட வழியைத் தேர்ந்தெடுத்தோமானால் உண்டாகின்ற நேர் மறைப் பயன்கள், எதிர்மறைப் பயன்கள் மற்றும் சிறப்புப் பயன்கள் ஆகியவைகளைக் கொண்டதாய் இருக்க வேண்டும்.
இந்தப் பயன்கள் பொருளாதாரம் சார்ந்ததாகவோ அல்லது மனம் சார்ந்ததாகவோ இருக்கலாம். மேலும் இந்தப் பயன்கள் நேரிடையான பயன்களாகவோ அல்லது மறைமுகப் பயன்களாகவோ இருக்கலாம். இந்தப் பயன்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பொருத்து இவைகளை வரிசைப் படுத்தலாம். இன்னமும் சொல்லப் போனால் வரிசைப்படுத்திய இந்தப் பயன்களுக்கு நமது பயன் தேவைகளைப் பொருத்து அவைகளுக்கு ஒரு ஊக மதிப்பும் - மதிப்பெண்ணும் - தரலாம். இது இன்னமும் தெளிவானதொன்று. பிறகு நாம் பட்டியலிட்ட வழிகளில் எந்த வழி மிகக் குறைவான எதிர்ப்பயன் கொண்டுள்ளதோ அல்லது எந்த வழி மிக அதிகமான நேர்ப்பயன் கொண்டுள்ளதோ அதனைத் தேர்ந்தேடுத்து நமது நலம் விரும்பிகளுடன் விவாதித்து முடிவு செய்யலாம்.
இத்தகைய முடிவெடுத்தல் மனதிற்கும் உறவுகளுக்கும் ஆரோக்கியமான ஒன்றாகும். மேலும் இத்தகைய முடிவெடுத்தல் நமது சிந்தனைத் தெளிவை வளர்த்து வாழ்க்கைச் சிக்கல்களை நாம் பார்க்கும் பார்வையை கூர்மையாக்கி நமது தன்னம்பிக்கையையும் உறுதியாக்கும்.
மேலும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
No comments:
Post a Comment