Followers

Friday, June 19, 2015

வீணாய்ப் போன வருடங்கள்…


19.6.15

வீணாய்ப் போன வருடங்கள்…

 
RESTORE THE DESOLATE YEARS POSTER BY STACEE LEE
 
கடந்து வந்த வாழ்க்கையை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தோமானால் ஒன்றுக்கும் உதவாத சங்கதிகளுக்காக எத்துனை கவலைப் பட்டிருக்கிறோம் என்பது புரியும். சில நேரங்களில் சல்லி பெறாத காரணங்களுக்காக மற்றவர்களது மனதிற்கும் பொருளிற்கும் நமது சுய நலம் கருதி கேடு விளைவித்தது நினைவிற்கு வரும்போது நமது மனம் வெட்கத்தால் கூனிப் போகும்.

இது தான் வாழ்க்கை.

வாழ்க்கையைக் கடக்கும் போது எதுவுமே முக்கியமில்லை - நமது character மற்றும் நமது integrity யைத் தவிர. நமது அனுபவங்கள் இதனை நமக்குக் கற்றுத் தராவிட்டால் நாம் வாழ்க்கையை இழந்தவர்களாவோம். அது மீட்டெடுக்க முடியாத ஒரு இழப்பாகும்.

ஆனால் நான் சொன்ன character மற்றும் integrity யை இழக்காமல் நமது வாழ்வில் நாம் இழப்பது அத்தனையும் இழப்பாகாது. அவையத்தனையும் மீட்டெடுக்கப்பட்டு விடும்.

இதனை விளக்க நான் ஒரு உண்மை நிகழ்வைச் சொல்லப்போகிறேன். இதுவும் நண்பர் சொன்னதுதான். இதையும் அவர் வாய்மொழியாகவே பகிர்ந்து கொள்கிறேன்.

“ நான் ஏற்கனவே எனது நண்பர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த பறவைக் கூட்டம் போல ஒன்றாக இருந்தது தீய பழக்கங்கள் எனும் பருந்திடம் இருந்து எங்களது பதின் வயதில் எங்களை காத்தது.

எங்களில் ஒருவர். பெயர் கிருஷ்ணமூர்த்தி. நாங்கள் அவரை மூர்த்தி என்று அழைப்போம். கணிதத்தில் இளநிலை பட்டப் படிப்பு படித்து முடித்திருந்தார். அந்தக் காலத்தில் கணிதத்திற்கு மிகுந்த தேவை இருந்தது. ஆனாலும் ஏனோ அவர் முது கலை படிப்பைத் தொடரவில்லை. எங்களில் ஒவ்வொருவராக வேலை கிடைத்து பிரிந்து சென்றுகொண்டிருக்கையில் இவர் சொந்தத் தொழிலில் தனது முயற்சியை தொடங்கியிருந்தார்.

அவருடன் இருந்தவர்கள் அவர் அவ்வாறு தொழிலில் இறங்கக் காரணம் அவருடைய மைத்துனர் என்று சொன்னார்கள். இவர் அவரது மைத்துனரை மிகவும் நம்பினார்.

பெற்றோர்கள் வாயில்லாப் பூச்சிகள். இரண்டு தமக்கையர் மற்றும் இரண்டு தம்பிகள். இவர்தான் குடும்பத்திற்கு மூத்தவர்.

என்னவாயிற்றோ தெரியவில்லை தொழில் முடக்கம் கண்டது. அது மட்டுமல்ல நட்டமும் ஏற்பட்டது. சோர்ந்து போனார்.

அதுவரை கூட வந்த உறவுகள் தொழில் நட்டம் கண்டவுடன் விலக ஆரம்பித்தனர். தம்பிகள் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி சொன்னது அவரை மனம் நோகடித்து விட்டது. அதுவரை அந்தக் குடும்பக் கப்பலுக்கு கேப்டனைப் போல தன்னை பாவித்தவர் இந்த மாறுதல்களைக் கண்டதும் நொந்து போனார்.

தொழிலில் நட்டம் கண்டதும் கூட்டுறவுத் துறையில் அப்போது கிடைத்த வேலை தனது கல்வித் தகுதிக்குக் கீழான வேலையாய் இருந்தபோதிலும்  சொற்பமாகக் கருதாமல் பணியில் சேர்ந்தார். அவரது பெற்றோர்கள் அவருக்கு பெண் பார்த்து மணம் முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பார்த்து விட்டு வந்த ஒரு பெண் ஆசிரியப் பணியில் இருந்தார். இருவருக்கும் மணப் பேச்சு முடியும் தருவாயில் இவருடனே இருந்த மிகுந்த நம்பிக்கைக்கு உரிய ஒருவர் பெண்வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

நண்பர் மனமொடிந்து போனார்.

இதற்குள் அவருடன் இருந்த மற்றையோர் நல்ல பணி கிடைத்து தங்களது வாழ்வைத் துவங்கியிருந்தனர். அவரது வாழ்வின் முக்கியமான வருடங்கள் செல்லரித்த சித்திரமாய் வீணாய்ப் போனது.

இறுதியாக சென்னையிலிருந்த ஒரு நண்பர் மூலமாக ஒரு பெண் அமைந்தது. பெண்வீட்டார் திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை சென்னையில்தான் தங்கியிருக்க வேண்டுமென்றனர். அதற்குச் சம்மதம் தெரிவித்து இருந்த வேலையை விட்டு விட்டு திருமணத்திற்குப் பின்னர் சென்னை வந்து செட்டிலானார்.

ஆனால் அவருக்கு பெண்வீட்டார் மூலமாக கிடைத்த மார்கெட்டிங் வேலை பிடிக்கவில்லை. வாய்பேசி பொருளை விற்பதில் அவருக்கு மனமும் இல்லை. மறுபடி தன் சொந்த ஊருக்கே திரும்பினார்.

இப்போது ஏற்கனவே இருந்த வேலையும் இல்லை. கையில் ஒரு பெண் பிள்ளை வேறு. தனக்குத் தெரிந்த தொழிலையும் செய்ய முடியாதவாறு மனக் குழப்பம். எந்த வேலையும் கிடைக்காது நண்பர் ஆட்டிறைச்சி விற்கும் கடையில் இறைச்சி வெட்டும் கூலித் தொழிலுக்குச் சென்றார்.

இதைக் கேள்விப்பட்ட நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். தீவிர வள்ளலார் பக்தரான நண்பர் இறைச்சிக் கடையில் வேலை பார்த்தது அரிச்சந்திர மன்னன் வெட்டியான் வேலை பார்த்ததை எங்களுக்கு நினைவூட்டியது.

தனது சொந்தங்களே தன்னை கைவிட்டது, நம்பியவனே தன் வாழ்வை கெடுத்தது, மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கிய தொழில் நசிந்து போனது, புதிதாய்த் துவங்கிய வாழ்வும் சோபிக்காதது…. நண்பர் மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

ஏதேதோ உளற ஆரம்பித்தார். காளி தன்னுடன் பேசுவதாக மற்றவரிடம் சொன்னார். ரத்த வாடை நல்லது என சுவரெல்லாம் ரத்தக் கரையை அப்பினார். நண்பர் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகியிருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

பொருளாதாரச் சிக்கல் மற்றும் உறவுச் சிக்கலுக்கிடையே நண்பருக்கு இரண்டாவதாக பெண்குழந்தை. நண்பரது மனைவி நண்பரது நலனையும் பார்த்துக் கொண்டு தனக்குத் தெரிந்த தொழிலையும் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்தை தனியொரு பெண்ணாக நடத்திச் சென்றார். ஓலைக் குடிசையில் வாழ்வை நடத்த வேண்டிய சூழலிலும் அஞ்சாது, மனம் தளராது நண்பரது மனைவி வாழ்வை நகர்த்திச் சென்றது மிகுந்த பாராட்டுக்குரியது..

குடும்பத்தை தாங்கி நடத்திச் செல்லவேண்டிய நபர் குடும்பத்திற்கே பாரமாகிப் போன நிலை.

குடும்பமே செல்லரித்த சித்திரமாகிப் போனது.

மேற் சொன்னவைகளெல்லாம் நான் நண்பரைப் பற்றி பிறர் சொல்லி கேள்விப்பட்டது. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைத்தது.

நண்பரது விலாசம் கிடைத்து அவரை பார்க்கச் சென்ற நான் கடவுளின் அற்புதத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

அவரது இரண்டு பிள்ளைகளில் ஒருவர் மென்பொருள் பொறியியற் கல்வி படித்து முடித்து ஒரு பிரபல MNC கம்பெனியில் பணியிலிருந்தார். இன்னொரு பெண் வணிகவியல் முடித்து அவரும் ஒரு MNC யில் பணியிலிருந்தார். நண்பர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றத்துடன் காணப்பட்டார்.

நண்பரை பார்த்து அகமகிழ்ந்து போனேன். நம்பிக்கையோடு குடும்பத்தை முன்நடத்திக் கொண்டுவந்த அவரது மனைவியின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டிவிட்டு வந்தேன்.

நண்பரது குடும்பத்தினருடன் அளவளாவி விட்டு வீடு திரும்பின என் மனதில் விவிலியத்தில் வரும் JOEL 2 : 25-27 வாசகங்கள் நினைவுக்கு வந்தன.

(I will restore to you the years that the swarming locust has eaten…My people shall never be put to shame. “
~Joel 2:25-27)

இதை உங்களிடம் சொல்லும்போதே எனது உடல் புல்லரிக்கிறது..”

உணர்ச்சி வயத்தால் நண்பரது வார்த்தைகள் தழுதழுத்தன. நம்பிக்கையுடன் இருந்தால் வீணாய்ப்போன வருடங்களையும் விளைச்சலையும் கடவுள் கண்டிப்பாக திரும்பத் தருவார் என்பது நண்பர் சொன்ன நிகழ்விலிருந்து எனக்கும் புரிந்தது.

இன்னமும் பேசுவோம்.
அன்பன்,

வேதாந்தி.

6 comments:

 1. தாய் (நண்பரது மனைவி) அவர்களின் நம்பிக்கையும் மன உறுதியும் தான் கடவுள்...

  ReplyDelete
 2. தங்கள் நண்பரின் மனைவி பாராட்டுக்குறியவர் வாழ்க வளமுடன்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 3. கடவுள் அவர் தான், அவராலே எல்லாம் சரியாயிற்று, வாழ்க அவர்கள். தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 4. மனம் வாட வைத்த பதிவு.
  Thank God now “they have plenty to eat, until they are full”
  இனி வருங்காலங்களிலும் அந்த அருமை நண்பரும், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும், எல்லா நலமும், வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ஐயா.

  ReplyDelete
 5. அவரது நல்லூழ் அத்தகைய இல்லாள் வாய்த்தது

  ReplyDelete
 6. இங்கே கடவுள் ஏன் வருகிறார் ? அவருடைய மனைவியின் அயராத உழைப்புக்கு கிடைத்த கூலி ,இன்றைய வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும் !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...