Followers

Friday, June 26, 2015

ஒரு உண்மை ஒயிஜா போர்ட் அனுபவம்…


26.6.15
ஒரு உண்மை ஒயிஜா போர்ட் அனுபவம்…
 
ஆரம்பத்திலேயே ஒரு செய்தியைச் சொல்லி விடுவது அனாவசிய சர்ச்சையை விலக்கும்.
இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல வருவதும் சொல்லாமல் விடுவதும் ஒன்றுமில்லை.
இது ஒரு அனுபவம். நடந்த நிகழ்வு. அவ்வளவுதான். என் நண்பர் பகிர்ந்து கொண்ட உண்மை அனுபவத்தை அப்படியே தருகிறேன். அவ்வளவே.
தற்செயலாய் 'எங்கள் பிளாக்கில்' திரு ஸ்ரீ ராம் எழுதியிருந்த “ஒயிஜா போர்டும் ஓஹோவென ஒரு இரவும்” என்ற பதிவைப் படித்தவுடன் என் நண்பர் என்னுடன் பகிர்ந்துகொண்ட அனுபவம் என் நினைவுக்கு வந்தது. இனி வருவது எனது நண்பரது அனுபவம் அவரது வாய் மொழியில்.
எனது நண்பர் வெகு வருடங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் பணியிலிருந்தார். பணிச் சுமை காரணமாக நேரடி சந்திப்பு அதிகம் கிடையாது. பார்த்து வெகு வருடங்களாகியிருந்தது.
வந்தவரை உபசரித்து பேசத் துவங்கினேன்.
“என்னது இத்தனை தூரம். அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து,” என்றேன்.
“ஒன்றுமில்லை உன்னை பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன்,” என்றார். அப்போதுதான் கவனித்தேன் அவரது கையில் ஒரு பிரபல கடையிலிருந்து வாங்கிவந்த ஒரு இனிப்பு பாக்கெட் இருந்தது.
நண்பர் நார்மலாக இல்லை. சற்று நேரம் கழித்து அவர் பேசத் துவங்கினார்.
“உனக்குத்தான் தெரியுமே..1978ல் நான் திருச்சியில் படித்தேன் என்று..” என்று ஆரம்பித்தார்.
நண்பர் அவரது முதுநிலை அறிவியல் படிப்பை திருச்சியில் உள்ள ஒரு பிரபல இஸ்லாமியக் கல்லூரியில் படித்தார். அவர் அந்தக் கல்லூரியில் சேரும்போது அவருக்கு அந்தக் கல்லூரி விடுதியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த திருச்சி தியாகராஜ பாகவதர் பங்களாவில் அரசு நடத்திவந்த merit students hostel ல் இடம் கிடைத்தது. அங்கிருந்தோருக்கெல்லாம் free boarding and lodging. ஆனால் ஆட்சி மாறியவுடன் அந்த விடுதி மூடப்பட்டு விட்டது. எம். ஜி. ஆர் ஆட்சியில் மூடப்பட்டது என நினைக்கிறேன்.
அதற்குப் பிறகு அவர் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களுக்கென ஒரு தனியார் நடத்திவந்த விடுதியில் தங்கி தனது படிப்பை முடித்தார். அது திருச்சி சிந்தாமணியின் பின்புறம் இருந்தது. அந்த விடுதியில் அவர் பெற்ற அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.
“அந்த விடுதியில் நான் தான் வயதில் மூத்தவன். மற்றையோரெல்லாம் முதலாம், இரண்டாம், மூண்றாமாண்டு மாணவர்கள். அதைவிட PUC மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். வயது குறித்து என்னுடன் மற்றவர்கள் சற்று மரியாதையுடன் தான் பழகுவர்.
எங்கள் பிளாக்கில் யூஜின் என்று ஒரு PUC மாணவர். எப்போதும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார். அவர் இருக்கும் இடத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். சிறு பிள்ளையை வம்புக்கிழுப்பதுபோல் வம்புக்கு இழுத்து அவருடன் விளையாடுவார்கள்.
ஒருநாள் டின்னர் முடித்துவிட்டு வந்த மாணவர்கள் அடுத்த நாள் கல்லூரி இல்லையென்பதால் கூடி விவாதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இது என் அறை வாயிலில் நடந்தது. அப்போது திடீரென ஒயிஜா போர்டைப் பற்றி பேச்சு வந்தது. அவரவர் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். திடீரென ஒரு மாணவர் தனக்கு ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேசத் தெரியும் என்றார்.
சொன்னதோடு மட்டுமல்லாமல் என் அறைக்குள் நுழைந்து தரையில் சாக்குக் கட்டியால் ABCD…Z எழுத்துக்கள் மற்றும் 0123..9 எண்கள் இதைத் தவிர்த்து இரண்டு கட்டம் கட்டி ஒரு கட்டத்தில் YES என்றும் இன்னொரு கட்டத்தில் NO என்றும் எழுதி முடித்து யூஜினை கூப்பிட்டு அந்த எழுத்துக்களின் முன்னால் அமரச் சொன்னார்.
யூஜின் மிகுந்த பயத்துடனும் சங்கடச் சிரிப்புடனும் மறுக்க முடியாமல் அந்த எழுத்துக்களுக்கு முன்னால் உட்கார்ந்தான். கச முச வென்ற சப்தம் சட்டென்று அடங்கிப் போனது. யாரோ லைட்டை அணைத்தார்கள். மற்றொருவர் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தார்கள். போர்டைச் சுற்றிலும் மாணவர்கள். அவர்களது முகங்களுக்கு எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி சுடரின் ஆட்டத்தில் இருளும் ஒளியும் மாறி மாறி ஒரு அமானுஷ்ய பாவத்தைக் கொடுத்தது.
ஆளாளுக்கு ஒரு கேள்வி கேட்டார்கள். பலருக்கு கேள்வி கேட்கத் தெரியாததால் இதனை லீட் செய்த மாணவன் ‘YES’ ‘NO’ வரும்படி கேள்விகளை திருத்தம் செய்து கேட்டுக் கொண்டிருந்தான்.
கேள்விகளுக்கு தகுந்தபடி யூஜின் தன் விரலால் தொட்டுக் கொண்டிருந்த தம்ளர் நகர்ந்து பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தது. யூஜினின் முகம் மட்டும் சற்று வித்தியாசமாக சிரிப்பில்லாமல் ஒரு ரிமோட் லுக் கில் இருந்தது.
ஆனால் யாரும் அதை சீரியசாக எடுத்துக் கொண்டமாதிரி தெரியவில்லை. ஆளாளுக்கு அந்தக் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
இந்தச் சூழலில் ஒரு மாணவர் நான் ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்திருந்தவர், “டேய் சார் எப்ப Ph.D டிகிரி வாங்குவார்னு கேள்டா..” என்றான்.
நான் சிரித்தபடியே அமைதியாய் நின்றிருந்தேனே தவிர எனக்குள்ளும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ள இப்போது தம்ளரை கவனித்தேன்.
அது மெதுவாய் நகர்ந்து 1998 என காட்டி முடித்தது. எல்லோரும் ஓ வெனக் கத்தினர். அது 1978ம் வருடமானதால் அதிலிருந்த ஜோக் மிகவும் பட்டவர்த்தனமாக தெரிந்தது. ஆனால்…” என்று சொல்லி நிறுத்தினார் நண்பர்.
“ஆனால் என்ன.. நீதான் ஆராய்ச்சிப்படிப்பில் சேராமலேயே பணிக்குச் சேர்ந்து விட்டயே..” என்றேன்.
“அது உண்மைதான். ஆனால் பணியில் சேர்ந்ததற்கப்புறம் நான் பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தது உனக்குத் தெரியாது..”
இப்போது நான் நண்பரை கூர்ந்து கவனித்தேன்.
“ஆமாமப்பா… எனக்கு Ph.D அவார்ட் ஆயிருக்கு.. போனவாரம் தான் வைவா  முடிஞ்சது. அதான் இந்த ஸ்வீட்..” என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. நண்பருக்கும் அதே உணர்வு வந்ததென்பதை என்னால் உணர முடிந்தது.
நண்பர் இதை என்னிடம் பகிர்ந்து கொண்டு ஸ்வீட் கொடுத்தது 1998 ம் வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம்.
இதை நம்பினால் நம்புங்கள். இன்று வரை என்னாலேயே நம்பமுடியவில்லை.
 
மீண்டும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
 
 

8 comments:

  1. சிரமம் தான்... நம்புவதை சொல்கிறேன்... (நான்)

    ReplyDelete
  2. இது போன்ற நிகழ்வுகளை விளக்க முடியாது.என் சிறு வயதில் நான் பிளான்செட் வைத்து ‘விளையாடிய’ அனுபவம் நினைவு வருகிறது.பதியட்டுமா?!

    ReplyDelete
  3. கண்டிப்பாக சார்.. பதிவெழுதுங்கள்.

    அனுபவப் பகிர்வுகள் ஒரு அலாதி இன்பமே..

    ReplyDelete
  4. நேற்று ஒரு கருத்து,இன்று ஒரு கருத்தெல்லாம் என்னிடம் கிடையாது ...நேற்று எங்கள் பிளாக்கில் போட்ட கருத்தே இப்போதும் >>>ஒய்.விஜயா ராங் நம்பரில் வந்தாலும் நம்புவேன் ,ஒய்ஜா போர்டில் ஆவியா ,நோ சான்ஸ் :)

    ReplyDelete
  5. //“ஒயிஜா போர்டும் ஓஹோவென ஒரு நாளும்”//

    ஒரு இரவும்!

    //எங்கள் பிளாக்கில் யூஜின் என்று ஒரு PUC மாணவர்.//
    ஹிஹிஹி... இது வேற எங்கள் ப்ளாக்!

    .ஹா...ஹா...ஹா.... தற்செயலா? இல்லை சரியாகவே சொல்லி இருக்கிறதா? ஆச்சர்யம்தான்!

    ReplyDelete
    Replies
    1. அடாடா.. நாளை இரவாக திருத்திவிட்டேன்.

      தங்கள் வரவுக்கு நன்றி

      Delete
  6. உண்மை அனுபவம் என்பதால், உங்கள் நண்பரின் கூற்றை நம்பவும் இயலவில்லை, நம்பாமல் ஒதுக்கவும் இயலவில்லை ஐயா.

    ReplyDelete
  7. உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...