Followers

Wednesday, December 1, 2010

நெறிப்படுத்தும் குற்ற உணர்வுகளின் அடிப்படைகளை வழிப்படுத்துவதெப்படி?

29.11.10

நெறிப்படுத்தும் குற்ற உணர்வுகளின் அடிப்படைகளை வழிப்படுத்துவதெப்படி?குற்ற உணர்வுகள் நெறிப்படுத்தவே என முன்னர் பேசினேன். ஆனால் இந்த குற்ற உணர்வுகள் எதன் அடிப்படையில் தோன்றுகின்றன என்பதையும் அதனை சரியான வழியில் எப்படி வழிப்படுத்தி மனிதனின் மேம்பாட்டிற்கு அவனுடன் இறுதிவரை இருந்து அவன் நெறிப்பட உதவச் செய்வதென்பதையும் இன்று பேசுவோம்.குற்ற உணர்வுகளின் அடிப்படை மனிதர்களது sense of right and wrong.  இந்த சரியா தவறா உணர்வுகளின் அடிப்படைகளை ஒரு மனிதனுக்குள் உருவாக்குவதில் அவனது வளர்ப்பு முறை, அவன் வளர்க்கப்படும் சமுதாய சூழல், அவனது வளர்ப்பில் ஈடுபடும் அவனது பெற்றோர் மற்றும் அவனைச்சுற்றி அன்பு காட்டும் பெரியோர், இதைத்தவிர சமுதாய வளர்ச்சிக்கு உதவும் கருவிகளான ஊடகங்கள், அதில் வரும் செய்திகளோடு மற்றையவரின் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் கருத்து அலசல்கள் ஆகியவை பெரும் பங்காற்றுகின்றன. இவைகள் மனிதனின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தங்களது பங்காற்றுகின்றன.

இதில் முதன் முதலில் தனது ஆளுமையைச் செலுத்துவது பெற்றோரின் வளர்ப்பு முறைகளே. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனத்துடன் வளர்க்கும் போது ஏறக்குறைய பெருமளவில் சமுதாய சிக்கல்கள் தீர வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதற்கு பெற்றோர்களின் தெளிவான மனநிலை அவசியப்படுகிறது.இவர்கள் ஒரு wrong set of morals or ethics ஐ தங்களிடம் கொண்டு அதையே தங்கள் பிள்ளைகளிடம் திணிக்க முற்படும் போது பிள்ளைகளும் தவறான அடிப்படைகளுடன்தான் வளர்வர். பெற்றோர் எப்போதுமே தங்களது எண்ணங்களையோ அல்லது விருப்பங்களையோ பிள்ளைகளின் மீது திணிக்க முற்படக்கூடாது. அது அவர்களை வளர விடாது. This kind of forcing of one’s own  thoughts  upon the children will definitely arrest their self learning which is more important for their adaptation or acclimatisation  of the changes in the society.உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் பெற்றோர்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் உண்டென்றால் அவர்களது பிள்ளைகள் தெய்வநம்பிக்கையோடுதான் வளர்ப்பார்கள். ஆனால் இதே பிள்ளைகள் சற்று வளர்ந்து பள்ளி செல்லும் பருவத்தில் அங்கு வேறு வித வளர்ப்பில் வந்த பிள்ளைகளை சந்திக்க நேரிடலாம். அவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாதும் இருக்கலாம். இத்தகைய பிள்ளைகளுடன் கருத்துப் பறிமாற்றம் ஏற்படும்போது அவர்களுக்குள் கேள்விகள் நிச்சயமாய் எழும். இதை பிள்ளைகள் தங்களது பெற்றோரை அணுகி வெளிப்படுத்தும் போது பெற்றோர்கள் இது குறித்து ஒரு திறந்த மனதோடுதான் பிள்ளைகளின் சுய சிந்தனையை வளர்க்கும் போருட்டு வழிகாட்டுதல் நடத்த வேண்டுமே தவிர பிள்ளைகளை பயமுறுத்தியோ அல்லது அடக்கி வைத்தோ அவர்களின் சிந்தனைகளை கொன்றுவிடலாகாது.


இதைப்போலவே பெற்றொர்கள் தங்களின் right and wrong sense ஐ அப்படியே rigid ஆக பிள்ளைகளிடம் புகுத்துவது மிக ஆபத்தில் முடியும் ஒன்றாகும். இத்தகைய வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகள் பிற்காலத்தில் சுயமாய் செய்திகளை அலசி ஆராயும் பக்குவமில்லாது தான் பெற்றோர்களிடமிருந்து பெற்ற right and wrong sense ஐ மட்டுமே கொண்டிருக்கும்போது தங்களது வாழ்விலோ அல்லது தாங்கள் உள்ள சமுதாயத்திலோ நடக்கும் மாறுதலுக்கு ஒத்துப்போகாது தங்களது மனப்போக்கில் பெரும் குழப்பத்திற்கு- conflicts - ஆளாகி மனப்பிறழ்வுகளுக்கு ஆட்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இதைச் சற்று விளக்கமாக அறிய ஒரு நடந்த நிகழ்வைச் சொல்ல விரும்புகிறேன். இதில் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மையில் எழுபதுகளில்  நிகழ்ந்தது.

கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்த பிள்ளை. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. சைவர்கள். சிவனை வழிபடுபவர்கள். மிகுந்த பய பக்தியோடு இருப்பான். நன்கு படிக்கின்ற பிள்ளை. பெற்றொர்களை தவிர்த்து மற்றைய அனைத்துமே நம்பத்தகுந்த ஒன்றல்ல எனும் போக்கில் வளர்ந்தான். இருபத்தியோராம் வயதில் தனது பட்ட மேற்படிப்பிற்காக ஆண்கள் கல்லூரியில்  விடுதியில் சேர்ந்து படிக்க நேர்ந்தது. விடுதியில் பல்வேறு குடும்பத்திலிருந்தும் பல்வேறு நம்பிக்கைகளிலிருந்தும் வந்த பிள்ளைகள். ஆனால் இவனோ யாரிடமும் பழகாது தானுண்டு தன் புத்தகங்களுண்டு என இருந்தான். படிப்பில் முன்னனியில் எப்போதும். இப்படி இருக்கையில் திடீரென ஒருநாள் அவனைக் காணோம். எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டனர். ஆள் அகப்படவில்லை. காவல் துறையினர் விடுதி மாணவர்களை விசாரித்தும் ஒரு துப்பும் கிடைக்க வில்லை. பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறினர். ஒரு பயனும் இல்லை. தாரை தாரையாய் கண்ணீர் வழிய விடுதி அறையில் இருந்த அவனது பொருட்களை அள்ளிக் கொண்டு சென்றனர். அத்தோடு சரி.அய்ந்து வருடங்கள் கழித்து அந்தப் பிள்ளையை சிதம்பரம் கோயில் வாயிலில்  உருத்தெரியாமல் மாறி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கண்டனர்.  பிள்ளையைத் தேடி ஏங்கி உருத்தெரியாமல் மாறியிருந்த பெற்றோரும், அவர்கள் யாரென்றே அறியாத நிலையில் பிச்சைக் கோலத்தில் பராரியாய் பிள்ளையும் கட்டிக்கொண்டு அழுதது ஊரையே கலங்கடித்தது.

அவனுக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் அவனது அறையில் இருந்து எடுத்துச் சென்ற அவனது டயரி மூலமாக நடந்தது என்ன வென்று ஒருவாறு ஊகிக்க முடிந்தது.

வேறொன்றுமல்ல. மிகவும் கண்டிப்பான சூழலில் வளர்ந்தவன் விடுதிச் சூழலுக்கு வந்ததும் அதற்கு அவனால் ஒத்துப் போக முடியவில்லை. மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு நாள் இவன் அந்த நகரத்தில் அமைந்திருந்த பல்கலைக்கழக மைய நூலகத்தில் படித்துக் கொண்டிருந்திருக்கும் போது அதே நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த சில பெண்கள் அந்த நூலகத்திற்கு வந்துள்ளனர்.  அந்தப் பெண்கள் சிரித்துப் பேசி தங்களது வயதிற்கே உரிய சேட்டைகளுடன் இருந்திருக்கின்றனர்.  இதுவரை நடக்காத ஒரு மாற்றம் அவனுள் நிகழ்ந்திருக்கிறது. அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் இவனது கவனத்தை ஈர்த்திருக்கிறாள். இது நியாயமானதுதானே? ஆனால் இந்த ஈர்ப்பும் தனக்குள் நடக்கும் மாற்றங்களும் தனது வயதுக்கான இயல்புஎன்பது கூட இருபத்தியொரு வயதான அவனுக்கு தெரியவில்லை. அவனுக்குள் நடந்த இந்த மாற்றங்களை பெருங்குற்றமாக கருதி அவன் கடுமையாக தனக்குள் இந்த மாற்றங்களை எதிர்த்திருக்கிறான்.  மனப் போராட்டம் அங்குதான் தொடங்கியிருக்கிறது. இத்தனைக்கும் அவன் ஒரு உயிரியல் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவன்.


அதற்குப் பிறகு விடுதிக்கு வந்தும் அந்தப் பெண்ணின் சிரிப்பும், நினைவும் இவனை விட்டு விலக்காது அலைக்கழித்திருக்கிறது. இது இரவில் இன்னமும் அதிகரித்து அவனை ஆட்டிவைத்திருக்கிறது. இரவில் அந்தப் பெண்ணின் நினைவால் உந்துண்டு உறக்கத்தில் விந்து தானாகவே வெளியேற , இந்த  nocturnal ejaculation - இரவில் தூக்கத்தில் விந்து வெளியாவது ஆண்களுக்கு நடக்கும் ஒரு இயல்பான நிகழ்வு என்பது கூட அவனுக்குத் தெரியாமல் ,  அவனுள் குற்ற உணர்வு அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தும் அந்தப் பெண்ணின் நினைவாலும், தானாக இரவில் விந்து வெளியாதலின் விளைவாலும்  குற்ற உணர்வால் வெகுவாக பாதிக்கப்பட்டவன் , யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் விடுதியை விட்டுக் கிளம்பி சிவன் கோவிலான சிதம்பரம் சென்று பிச்சை எடுத்துண்ணத் தொடங்கிவிட்டான். தான் யாரென்ற நினைவையும் இழந்து விட்டான்.

ஒருவேளை அவனது பெற்றோர், பாலுணர்வே மிகத் தவறானது எனும் நோக்கில் வளர்த்திருப்பரோ என்னவோ. இந்த இயல்பான பாலுணர்வு தூண்டிய குற்ற உணர்வால் அவனது வாழ்க்கையே சீர்கெட்டுவிட்டது.

இதற்கு யார் பொறுப்பேற்பது? எனவேதான் சமுதாயத்தில் உள்ள அனைவருமே பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அடிப்படைக் கொள்கைகளான உயிரின் சுதந்திரத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மற்ற கோட்பாடுகள் எழவேண்டிய நிர்ப்பந்தம் இதனாலேயே உண்டாகிறது.

மீண்டும் பேசுவோம்.

அன்புடன்,

வேதாந்தி.

5 comments:

 1. நல்ல டாபிக். இது வெட்டி பேச்சல்ல. நீங்க "வேதாந்தி" என்றே உங்கள் ப்லாக்குக்கு பெயர் வச்சு இருக்கலாம்.

  ReplyDelete
 2. ||இதைப்போலவே பெற்றொர்கள் தங்களின் right and wrong sense ஐ அப்படியே rigid ஆக பிள்ளைகளிடம் புகுத்துவது மிக ஆபத்தில் முடியும் ஒன்றாகும். இத்தகைய வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகள் பிற்காலத்தில் சுயமாய் செய்திகளை அலசி ஆராயும் பக்குவமில்லாது தான் பெற்றோர்களிடமிருந்து பெற்ற right and wrong sense ஐ மட்டுமே கொண்டிருக்கும்போது தங்களது வாழ்விலோ அல்லது தாங்கள் உள்ள சமுதாயத்திலோ நடக்கும் மாறுதலுக்கு ஒத்துப்போகாது தங்களது மனப்போக்கில் பெரும் குழப்பத்திற்கு- conflicts - ஆளாகி மனப்பிறழ்வுகளுக்கு ஆட்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.||

  அருமை...

  sensible post...

  ReplyDelete
 3. @ chitra..

  @ கலகலப்ரியா..

  தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 4. தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சரியான புரிதல் என்பது குறைந்து வருகிறது. தலைமுறை இடைவெளி என்பது தவிர்க்க முடியாதது என்று சப்பைக்கட்டு கட்டுவதை விடுத்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேச முயல வேண்டும். குறிப்பிட்ட விஷயம் தான் என்றில்லாமல் சகல விசயங்களிலும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்கிடையே நிலவும் இறுக்கம் தளர்த்தப்பட்டாலே பாதி பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
  ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டினாலே பல பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.

  ReplyDelete
 5. @ இந்திரா...

  அருமையான கருத்து..தலைமுறை இடைவெளியைப் பற்றி தனியே எழுத இருக்கிறேன்..

  தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...