Followers

Monday, January 24, 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

24.1.11
எனக்கு மட்டும் ஏன் இப்படி?
எனக்கு மட்டும் ஏன் இப்படி? உங்களுக்கு என்றேனும் இப்படித் தோன்றியதுண்டா? இன்றைய பேச்சில் இந்த சுய பச்சாதாபத்தின் விளைவைப் பற்றி பேசப்போகிறோம்.

இந்த சுய பச்சாதாபம் ஒருவனை நிச்சயமாய் நொறுக்கிப் போடும். பொதுவாகவே இந்த சுய பச்சாதாபம் என்பது அண்டிக் கெடுக்கும் நட்பைப் போல. அதுவும் கருணை பொழியும் பாசத்துடன் மிக அக்கறை கொண்ட நட்பைப் போல் நமக்குள் இருந்து நெஞ்சை வருடிவிட்டு நம்மை அழித்துவிடும் செயலை இது சத்தமின்றி செய்துவிடும்.

நம்மை இது சிந்திக்கவே விடாது. நமது சூழலையும் ஆராய விடாது. ஆக நமது சூழலில் இருக்கும் சாதகமான காரணிகள் எவையும் கண்ணில் படாது மாறாக பாதகமான காரணிகளாக நாம் கருதுபவைகள் மட்டுமே நம்மை அச்சுறுத்திக்கொண்டு பூதாகர வடிவெடுப்பதோடு மட்டுமல்லாது நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கையை சுத்தமாய் உறிஞ்சி இழுத்து நம்மை செயலிழக்கவும் செய்துவிடும்.மேலும் நமக்குள் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாது உலகமே நமக்கு எதிராக இருக்கிறது என்னும் நினைப்பையும் நம்முள் வளர்த்துவிடும்.இந்த சுய பச்சதாபம் - self pity - என்பது நம்மை ஏறக்குறைய ஒரு பக்கவாதம் தாக்கியவரைப்போல நம்மை கிடத்தி நாம் எப்போதும் மற்றவரது உதவியையே நாடி இருக்கும் படி செய்வதோடல்லாமல் மன ரீதியாக நாம் இப்படி இருப்பதும் மற்றவர்கள் நமக்கு உதவி புரிவதும்சரி என்று காரணம் கற்பிப்பதோடல்லாது நமது இந்த நிலைக்கு காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்தானே தவிர நாம் அல்ல என்னும் மாயையினை உருவாக்கி மற்றவர்களை விரொதிகளைப்போல நம்மை பார்க்கத் தூண்டி சமுதாயத்திற்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளியை உருவாக்கிவிடும்.

இப்படி ஒருவரை தனிமைப்படுத்தும் இந்த சுய பச்சாதாபம் உள்ளிருந்து பெருகி வெறுப்புக் குவியலாய் சமயம் கிடைக்கும்போது வெடித்து வெளிப்படும். இந்த வெறுப்பு தனக்கெதிராகவோ அல்லது தன்னைச் சுற்றி இருப்பவர்க்கு எதிராகவோ கிளம்பும்போது அது மிகப் பெரிய பின்விளைவுகளை விளைவிக்கும் . எனவேதான் இதைக்குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய சுயபச்சாத்தாபம் நிறைந்தவர்களை சாதரணமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்ட  நான் ஊடகங்களில் படித்தறிந்த ஒரு கதையை கீழே சொல்லியிருக்கிறேன்.

ஒரு தனவந்தன் தனக்குப் பிறந்த இரு பிள்ளைகளிடமும் மிகுந்த வேறுபாட்டைக் கண்டான். அது, மூத்த பிள்ளை எப்போதும் மிகுந்த மகிழ்வுடனும், வாழ்வை அனுபவிக்கும் தாகத்துடனும் இருக்க இளையவனோ எப்போதும் ஒருவித சோகத்துடனும், தன்னைக் குறித்து ஒரு சுய பச்சாத்தாபத்துடனும் இருந்ததோடு மட்டுமல்லாது எல்லாச் சூழலிலும் தான் இரக்கமின்றி கொடுமைக்கு உள்ளாக்குவதைப்போல் மிகுந்த துயரத்துடனே வாழ்வைப் பார்த்தான்.

இதைக் கண்ட தனவந்தன் இவர்களது குணங்களை மாற்றும் எண்ணத்துடன் ஒருநாள் பிள்ளைகள் அறியாதவாறு மூத்த மகனது அறையை  குதிரைச்சாணக் குவியலாலும்  இளைய மகனது அறையை விளையாட்டு பொம்மைகளாலும் நிரப்பிவிட்டு அடுத்த நாள் அவர்களது நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தான்.தனவந்தன், தனது இளைய பிள்ளை மகிழ்வுடன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான் எனவும் மூத்த பிள்ளை குதிரைச்சாணக் குவியலைக் கண்டு மனம் வெறுத்து அதை சுத்தப் படுத்தும் வேலையில் இருப்பான் எனவும் நினைத்தான். ஆனால் நடந்ததோ இவனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது.

இளைய பிள்ளை மிகுந்த வருத்தத்துடன் இருந்தான். இவனைக் கண்டதும், “ பாருங்கள் யாரோ எனது அறையில் பொம்மைகளை நிரப்பி வைத்திருக்கின்றனர். யார் இத்தனை பொம்மைகளுக்கும் சாவி கொடுத்து இயக்குவது? இவைகளுக்கு சாவி கொடுத்து இயக்கி மாளாது போலிருக்கிறதே.. யாருக்கும் என் மேல் இரக்கமே இல்லை..” என்று சொல்லி அழுதானாம்.மூத்த பிள்ளையோ இவனைக் கண்டதும் மிக்க மகிழ்வுடன், “ எத்துனை அதிசயம் பாருங்கள். என் அறை நிறைய குதிரைச்சாணம் இருக்கிறது. இதைப் பார்க்கும் போது இங்கேதான் எங்கேயோ ஒரு குதிரைக் குட்டி இருப்பதாகத் தெரிகிறது. நான் எப்படியும் இன்று மாலைக்குள் அந்தக் குதிரைக் குட்டியைத் தேடிப்பிடித்து அதன் மீது சவாரி செய்து விளையாடப் போகிறேன் ..” என்றானாம்.இப்படித்தான் நமது பார்வைகள் நமது வாழ்வை மாற்றக்கூடிய சக்தி படைத்தவைகள். அப்படிப்பட்ட வல்லமை கொண்ட  பார்வைகளையே திருகலாக்கி நமது வாழ்வைக் கெடுக்க வல்லன நாம் கொள்ளும் சுய பச்சாத்தாபம். எனவே இத்தகைய வாழ்வைக் கெடுக்கும் மன நிலையை விட்டு வெளிவந்து நமது வாழ்வை வளம் பெறச்செய்ய வல்ல ஒளியைக் காண்போம், சிறக்க வாழ்வோம்.

இன்னமும் பேசுவோம்..

அன்பன்,

வேதாந்தி.


11 comments:

 1. லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் ...

  ReplyDelete
 2. இன்னமும் பேசலாமே

  ReplyDelete
 3. @ sakthistudycentre-கருன்..

  @ A.சிவசங்கர்..

  தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 4. @ சி.பி.செந்தில்குமார்..

  தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 5. நமக்குள் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாது உலகமே நமக்கு எதிராக இருக்கிறது என்னும் நினைப்பையும் நம்முள் வளர்த்துவிடும்.

  அழகான கதை விளக்கம்.... நீண்ட நாள் கழித்து பதிவு செய்தாலும்,அருமையான பதிவு...
  தொடர்ந்து உங்கள் வெட்டிப்பேச்சின் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்
  .. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. மிகவும் நல்ல பதிவு

  ReplyDelete
 7. Self pity is not good.
  Very nice post. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. @ ரேவா..
  @ Lakshmi..
  @ Chitra..

  தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 9. தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடம் இந்த எண்ணம் மேலோங்கி இருக்கிறது. எதையுமே சகஜமான நிகழ்வுகளாக எடுத்துப் பழகிக்கொண்டால் இந்த எண்ணம் உருவாகாது.

  பதிவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படுவதைத் தவிர்த்து தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 10. @ இந்திரா..

  தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...