29.3.11
நமது விருப்பங்கள் மட்டுமே நம் வாழ்வின் மேன்மையைத் தருகின்றனவா?
பொதுவாகவே, சுய மேன்மை மற்றும் மேலாண்மையை குறித்துச் சொல்லும்போது நாம் நமக்கு விருப்பப்பட்ட துறையினை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தினோமானால் அந்தத் துறையில் நாம் மேம்படுவதோடு மட்டுமல்லாது சிறக்கவும் செய்யலாம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொண்ட ஒன்று என்பதோடு மட்டுமல்லாது நிரூபிக்கப் பட்ட ஒன்றாகவும் சொல்லப் படுகிறது.
ஆனால் நானறிந்த மட்டில் இத்தகைய கோட்பாடு, சூழல் குறித்த நமது பார்வையின் நெகிழ்வுத் தன்மையை மாற்றி நமது தகவமைத்துக் கொள்ளும் திறனை குறைத்து விடுவதாகவே கருதுகிறேன். கவனிக்கவும். இங்கு நான் , ஒருவர் விருப்பமின்றி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதையோ அல்லது விருப்பின்றி ஒரு செயலைச் செய்வதையோ ஊக்குவிக்கவில்லை.
எந்த ஒரு செயலையும் விருப்பத்துடன் செய்யும் போது மன நிறைவும் மகிழ்வும் கிடைக்கிறதென்பது மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் நாம் பெறும் இந்த மன நிறைவும் மகிழ்வும் கூட நமது அனுபவங்களின் முதிர்ச்சிக்குட்பட்ட மாறுதலுக்குரியதொன்று எனும்போது, நாம் அடையும் மனநிறைவையும் மிஞ்சி நமது வாழ்வின் சிறப்பு அல்லது நாம் பெறும் சமுதாய அங்கீகாரத்தின் மேன்மையே நமது வாழ்வின் குறிக்கோளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை நாம் மறக்கலாகாது.
இந்தக் கருத்தை ஒரு நடந்த நிகழ்வை வைத்துச் சொன்னால் சரியாகப் புரியுமென்று எண்ணுகிறேன்.
அது எழுபதுகளின் காலம். கல்வித்துறையில் தனியார் புகாத பொற்காலம். நான்கு நண்பர்கள் அரசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தனர். பள்ளிக் கல்வியில் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின்படி அவரவர் வளர்த்துக் கொண்ட விருப்பத்திற்கேற்ப பாடங்களைத் தேர்வு செய்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் தற்போதுள்ளதுபோல் பரந்த வழிகாட்டுதலுக்கான வாய்ப்பில்லை. பெரும்பாலும் முதல் தலைமுறைக் கல்வி பயில்வோர்தான் அதிகம்.
நான் மேற்சொன்ன நான்கு நண்பர்களில் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த இருவர் கணிதப் பாடத்தை தேர்ந்தெடுத்தனர். மற்றொருவர் விலங்கியல் பாடத்தையும் இன்னுமொருவர் புவியமைப்பியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்தனர். இதில் புவியமைப்பியல் பாடத்தை தேர்ந்தெடுத்தவருக்கு விலங்கியல் படிக்க விருப்பம். ஆனால் பள்ளியிறுதித் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக இருந்ததனால் அதிக போட்டியில்லாத புவியமைப்பியல் (Geology) பாடம் மட்டுமே அவருக்கு கிடைத்தது.
இதில் அந்த நான்காவது நண்பரது வாழ்க்கைதான் சுவராசியமானது. அதுமட்டுமல்ல நமக்கு இப்போது வாழ்க்கையைப் பற்றிய புரிதலில் மற்றுமொறு பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இவர் தனது விலங்கியல் படிக்கும் நண்பரைப்பார்த்து ஏற்கனவே தனக்கிருந்த curiosity about life ஐ அதிகமாக்கிக் கொண்டார். அதிக நேரம் விலங்கியல் துறையிலேயே செலவழித்தார். தவளை, பல்லி, ஓணான் என்ற பல விலங்கினங்களைப் பிடித்து அதன் எலும்புச் சட்டங்களை நுணுக்கமாக உருவாக்கினார். இவரது ஆர்வத்தைப் பார்த்த விலங்கியல் துறைப் பேராசிரியர் இவரை ஊக்குவித்து” you have best interest in Zoology and Museology “ என்று சொல்லி “ நீ ம்யூசியத்தில் curator ஆக முழுத் தகுதியும் உனக்கிருக்கிறது. உன் ஆர்வத்தினை தொடர்ந்து கடைப்பிடி “ என்று சொன்னார். இதைக் கேட்டவுடனே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிறைய விலங்கினங்களை பதப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.
இதற்கிடையே அவர் மூன்றாமாண்டு புவியமைப்பியல் படிக்கையில் அதற்குண்டான பாடத்திட்டத்தில் கனிமப் படிமங்கள் மற்றும் paleontology ஆகியன பற்றி படிக்க நேர்ந்தது. அதில் வரும் பண்டைய விலங்கினங்களின் பிரம்மாண்டம் அவரைக் கவர்ந்தது. டைனோசார், ட்டிரிப்டொசாரஸ் என அவைகளின் வாழ்க்கையைப் பற்றி ஆர்வம் காட்டத் தொடங்கினார். விலங்கியலிலும், museology யிலும் அவரது ஆர்வம் குறையத் தொடங்கியது. மூண்றாம் ஆண்டு படிப்பு முடிந்ததும் பட்ட மேற்படிப்பு அதே புவியமைப்பியலில் படிக்க ஆர்வம் கொண்டார், நண்பர்.
இவரைப் பற்றி இன்னுமொரு தகவல். நண்பர்கள் மூவரும் முதல் தலைமுறைக் கல்வியினர். ஆனால் இவர் அப்படியல்ல. இவரது தந்தை ஒரு வழக்குரைஞர். அவர் ஓகோ வென பிரபலம் அடைய வில்லையென்றாலும் ஏதோ வென தொழில் செய்து கொண்டிருந்தார். இதுவரை மகனது படிப்பைப் பற்றி கவனம் கொள்ளவில்லை என்றாலும் மகன் பட்டப் படிப்பு முடித்தவுடன் அவனை சட்டப் படிப்பில் நுழைக்க விரும்பினார். ஆனால் நண்பருக்கோ சட்டப் படிப்பில் சிறிதும் நாட்டமில்லை.
தந்தை மகன் இருவரது விருப்பமும் முரணாகவே, பெருங்குழப்பம் உருவாகியது. ஆனால் பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று இரு படிப்பிற்கும் விண்ணப்பித்தார் நண்பர். நண்பரது தகப்பனார் சிபாரிசு பிடித்து சட்டப் படிப்பிற்கு சேர்க்கைக்கான அனுமதியை முதலில் பெற்று விட்டார். மகனுக்கோ சட்டப் படிப்பு எட்டியாய்க் கசந்தது. சில நாட்களுக்குப் பிறகு நண்பருக்கு அவர் விண்ணப்பித்திருந்த பட்ட மேற்படிப்பிற்கும் பல்கலைக் கழகத்திலேயே சேர்ந்து படிக்க அனுமதி கிடைத்தது.
நண்பருக்கு மனதில் குடைச்சல். அவரது தகப்பனாரோ மிகவும் பிடிவாதமாய் இருந்தார். ‘நான் அரும் பாடுபட்டு இந்த சீட்டை வாங்கியிருக்கிறேன் எனவே அவன் சட்டப் படிப்புதான் படிக்க வேண்டும்’ என்றார். இறுதியில் இன்னமும் காலம் தாழ்த்தினால் இரண்டு படிப்புகளுக்கும் சேர்க்கை அனுமதி ரத்தாகுமென்ற சூழல். இந்த நேரத்தில் இவருடன் இருந்த நண்பர், நன்கு பேசக் கூடியவர், துணிந்து தனது நண்பருக்காக அவரது தகப்பனாரிடம் வாதிட்டார். ஒரு பிள்ளையின் விருப்பமறிந்து செயல் படுவதுதான் ஒரு தந்தையின் கடமை என்று தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஏதேதோ வாதங்களை சூடாக முன் வைத்தார்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நகத்தைக் கடித்தபடி என்ன நடக்குமோவென்று மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
வயது மற்றும் தகுதி வித்தியாசம் பார்க்காது தன் முன் வைத்த வாதத்தின் அடிப்படையில் மட்டுமே சிந்தித்த நண்பரின் தந்தை மிகுந்த பாராட்டுக்குரியவர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பிறகு அவரே ஒரு தீர்வையும் தந்தார். “ சரி. அவன் விருப்பப் படியே பட்ட மேற்படிப்பு படிக்கட்டும். ஆனால் ஒரு நிபந்தனை. இப்போது கிடைத்திருக்கும் சட்டப் படிப்பையும் படித்து முடிக்க வேண்டும்’ என்றார். நண்பருக்கோ திகைப்பு மற்றும் மகிழ்ச்சி.
இறுதியில் முதலில் இரு படிப்புகளுக்கும் பணம் செலுத்தி அனுமதியை உறுதி செய்தபின் பட்ட மேற்படிப்பு இரு வருடங்கள் படிப்பதென்றும் அதன் பின்னர் சட்டப் படிப்பை தொடர்ந்து முடிக்கவேண்டுமென்றும் முடிவாகியது. நண்பருக்கு தான் விரும்பும் படிப்பைப் படிக்க அனுமதி கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரைப் பொறுத்த மட்டில் தான் எக்காரணம் கொண்டும் தனக்குப் பிடிக்காத வழக்குரைஞர் தொழிலைச் செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாயிருந்தார். அதைக் குறித்து அவரது தந்தையும் கட்டாயப் படுத்தக் கூடாது என்றும் தீர்மானமாகியது. அவரது தந்தைக்கோ தன் பிள்ளை M.Sc., B.L பட்டங்கள் பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. பிள்ளை வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுவதைக் குறித்து பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சமாதானமானார்.
இங்குதான் நாம் ஒரு சுவராசியமான கட்டத்திற்கு வருகிறோம்.
நண்பர் சென்னை வந்து பட்ட மேற்படிப்பு படித்தார். பட்ட மேற்படிப்பு படித்து முடித்த பின்னர் சட்டப் படிப்பினையும் முடித்தார். படித்து முடித்த பின்னர், அவரது தந்தை, “ இதோ பார், உனக்கு வேலை கிடைக்கும் வரையில் எனக்கு உதவியாக இரு” என்று தன்னுடனே நீதி மன்றங்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். தந்தைக்கு உதவியாய் இருந்து சில பல நுணுக்கங்களை தெரிந்து கொண்டார். நண்பர் தனது பட்ட மேற்படிப்பிற்கான தகுதிக்கு சரியான வேலை கிடைக்க காத்திருக்க வேண்டியதாயிற்று. அதுவரை ஏனோ தானோ வென்று பார்த்த வழக்குரைஞர் தொழில்தான் சோறு போட்டது.
நீதி மன்றங்களுக்குச் சென்றவர் அங்கு வந்த ஏழைக் குற்றவாளிகளின் பரிதாப நிலை கண்டு அவர்களது வழக்கில் பணம் எதிர்பார்க்காது வாதாடி நீதி பெற்றுத்தர ஆரம்பித்தார். அதற்குப் பின்னர்தான் இவரது கவனத்திற்கு நமது சட்டம் மற்றும் காவல் துறையினரின் ஏகபோகத்தனம் தெரிய ஆரம்பித்தது. தனது தொழிலில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பின்னர் மனப்பூர்வமாக செய்யத் தொடங்கினார்.
தற்போது நண்பர் ஒரு நீதியரசர்.
சட்டப் படிப்பே பிடிக்கவில்லை என்று சொன்னவர், எக்காரணம் கொண்டும் வழக்குரைஞர் தொழிலைச் செய்யமாட்டேன் என்று சொன்னவர் இப்போது விரும்பி ஏற்றிருப்பது நீதி காக்கும் நீதியரசர் பதவி.
தான் ஆரம்பத்தில் விரும்பிய museology படிப்பெங்கே, curator தொழில் எங்கே தற்போது ஏற்றிருக்கும் நீதியரசர் பதவி எங்கே?
இது தான் வாழ்வின் அற்புதம். நமக்கு என்ன வாய்க்கப் போகிறது , நாம் எதில் சிறந்து விளங்குவோம் என்பது நமது விருப்பம் மட்டுமே முடிவு செய்கின்ற ஒன்றல்ல. நாம் திறந்த மனதுடனும், பரந்த எண்ணத்துடனும் வாழ்வை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தோமானால் மட்டுமே போதும் மற்றவைகளை வாழ்க்கை பார்த்துக் கொள்ளும்.
மீண்டும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
முதல் வணக்கம்..
ReplyDeleteஅவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல அலசல்..
ReplyDelete@#கவிதை வீதி # சௌந்தர்..
ReplyDelete@ வேடந்தாங்கல் - கருன்..
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteவித்தியாசமான அலசல்
ReplyDelete@ சி.பி.செந்தில்குமார்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
@ விக்கி உலகம்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
அவரை மனதார பாராட்டிகிறேன். காலமும் சூழ்நிலையும் மனித மன வடிவமைப்பை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றன..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே
@நிகழ்காலத்தில்..
ReplyDeleteதங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
கொஞ்சம் எளிதா புரிந்துகொள்ளும் நடையில் எழுதலாமே!!
ReplyDelete@ jayadev Das..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். இது எளிய நடைதானே.. ஒருவேளை நான் சொல்ல வந்தது சற்று கடினமானதோ என்னவோ.. இருப்பினும் தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
முதல் மூணு பத்தியைப் படிச்சு படிச்சு தலைதான் சுத்துதே தவிர அதுக்கு என்ன அர்த்தம்னு நிஜமாவே இன்னமும் புரிந்துகொள்ள முடியல. முன்னால் முதலமைச்சர் அண்ணாதுரை மேடையில் பேசும்போது, ஆஹா எவ்வளவு அழகாக பேசுகிறார் என்று எல்லோரும் வியப்பார்களாம், ஆனால் என்ன பேசினார் என்பது பலருக்கு புரியவே புரியாதாம்!! ஹா..ஹா..ஹா... என்னைப் போல எளியவர்களையும் மனதில் வைத்து எழுதலாமே!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ jayadev Das..
ReplyDeleteநண்பருக்கு..
1.நாம் விரும்பிய துறையில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே வெல்லமுடியும் என்பது சுய மேன்மை மற்றும் மேலாண்மையில் சொல்லப்பட்டிருக்கிறது.
2. ஆனால் நமது விருப்பங்கள் நமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுவது.
3. நமது விருப்பங்கள் பெரும்பாலும் நம்மை முன்னேற்றாத போது நாம் தடைபட்டு விடுகிறோம். we get ourselves blocked if our interests or wishes do not carry us forward. This rigid outlook about life hampers our flexibility and attitude thereby blinding our perception to look for other open options or oppurtunities.
4. நமது அனுபவங்கள் முதிர்ச்சியின் பொருட்டும் மற்றைய காரணிகள் பொருட்டும் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பது. இதைத் தொடர்ந்தே நமது விருப்பங்களும் மாறுதல் அடையக்கூடிய ஒன்று.
5. எனவே மாறுகின்ற காரணியான விருப்பத்தின் பொருட்டு வாழ்வின் குறிக்கோளை நிச்சயிக்காமல் மாறாமல் இருக்கும் சமுதாய அங்கீகாரங்கள் அல்லது இதைப் போன்ற சமுதாயக் காரணிகள் நமது வாழ்வின் குறிக்கோளை நிச்சயிக்க விடுவதே நமக்கும் நம்மைச் சார்ந்த சமுதாயத்திற்கும் நல்லது.
6.இது மட்டுமல்ல நமது எண்ணங்களின் வளர்ச்சியும் நமது அனுபவங்களோடு வளரும் என்பதால் எப்போதும் நம்மை வளர்த்துக் கொள்ளவும் நம்மை நமது சூழல் காரணிகள் மேம்படுத்தவும் நாம் அனுமதிக்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின் சாராம்சம்.
விளக்க வாய்பளித்தமைக்கு நன்றி நண்பரே.