Followers

Monday, December 1, 2014

நவீன நள புராணம் (அ) கை விடாத ஆண்டவர்!!!


1.12.14

நவீன நள புராணம் (அ) கை விடாத ஆண்டவர்!!!





 

ஏழரைச்சனியின்  பிடியிலிருப்போர் நள புராணம் கேட்டால் நல்லது என்பார்கள். வரும் இடர்கள் தங்களை மனம் தளர விடாது விருப்பு வெறுப்பின்றி, வருவதை எதிர் கொள்ள ஒருவரை தயார் படுத்தும் வகையில் நள புராணம் இருக்கும்.  நண்பரது கதையும் ஒரு நவீன நள புராணம் போலவே இருந்தது.

தொடரும் சோகமாக இருந்தது நண்பருடைய கதை. இந்த நிலையிலிருந்து எப்படி மீண்டார் என்று எனது மனதில் எழுந்த கேள்வி அவரது உரையாடலை சுவராசியப் படுத்தியது. மிகுந்த ஆர்வத்தோடு கவனிக்கலானேன். நண்பர் தொடர்ந்தார்.

“வெண்நுரை தள்ளிய கடலைப் பார்த்து நின்றுகொண்டிருந்த நான் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இனிமேல் இந்தப் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்தேன்.

தற்கொலை முடிவு கோழைத் தனமானது என்பதில் உறுதியாய் இருந்தேன். அதுமட்டுமல்ல எனக்குள் ஒரு லேசான ஆர்வமும் கிளம்பியது. நான் முடிவாக நினைத்ததெல்லாம் முடிவல்லவென்றால் எனக்காகக் காத்திருக்கும் முடிவுதான் எது? என்பதுதான் அது.

மணலில் அப்படியே உட்கார்ந்து யோசித்தேன். இரவு ஊர் திரும்ப வண்டி ஏறுவதற்குள் என்னுள் ஏற்பட்ட குழப்பத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர யோசித்தேன்.

தீவிரமாக யோசித்ததில் எனது வாழ்க்கையில் எனது முயற்சிகள் மட்டுமல்லாது வேறேதோ ஒன்று கூடவே இயங்கி வந்திருப்பது புரிந்தது.

It was obvious that an un accounted factor was playing a bigger role in my life and I was stupid enough to ignore it or un recogonise it. Now after coming to know that, I was feeling a little bit calm and I tried to make every attempt to understand that factor. I have also decided not to be in conflict with the force or the factor that has played a role in directing my course of life.


அமைதியாய் எனக்கிருக்கும் கடமைகளை நினைவுக்கு கொண்டுவந்தேன். எனது வயதான பெற்றோர் மற்றும் மணமாகாத என் தங்கை. இந்தப் பொறுப்புகளுக்கு முதலில் ஒரு வழிசெய்ய வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு இரவு ஊருக்குத் திரும்பினேன். பயணத்தின் போது எழுந்த சிந்தனைகளில், வெறும் 50 செண்ட் விளை நிலத்தை வைத்துக் கொண்டு என்னையும் என் தங்கையையும் படிக்கவைத்த எனது தந்தையாரின் உழைப்பு மிகப் பெரிது என்று எனக்குத் தோன்றியது. நான் ஒரு முதல் தலைமுறை படிப்பாளி (First generation learner ) என்பதைத் தவிர வேறொன்றும் இதுவரை சாதிக்கவில்லை என்பதும் புரிந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் எனது தாயார் மிகுந்த ஆவலோடு எனக்கு வந்திருந்த ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் இருந்த அரசு முத்திரையும் தபால்காரரது விளக்கமும் எனது தாயாரின் ஆர்வத்தை அதிகரித்திருந்தது. தபாலை பிரித்துப் பார்த்தவன் உள்ளிருந்ததைப் பார்த்தவுடன் வாய் விட்டு சிரித்து விட்டேன். அது ஜனவரியில் நடந்து முடிந்த UPSC யின் Assistant Conservator of Forests தேர்வுக்கான ஹால் டிக்கட். இந்தத் தேர்வுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக என்னை கடுமையாக தயார் செய்து வைத்திருந்தேன்.

ஒன்றுமில்லாத பொங்கல் வாழ்த்துக் கடிதங்களெல்லாம் தவறாமல் கையில் கிடைத்தபோது இது இரண்டுமாதங்கள் தாமதமாக என் கைக்கு கிடைத்திருக்கிறது. நான் முன்பு போல இருந்திருந்தால் மிகவும் நொந்துபோய் வருந்தியிருப்பேன். ஆனால் இப்போதோ மனம் அலை பாயவில்லை. கையிலிருந்த கடிதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பெற்றோரை அருகில் அழைத்துப் பேசத் தொடங்கினேன்.

“அப்பா, என்னைப் பற்றி கவலைப்படவேண்டாம். நான் எனது படிப்பை வைத்து என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன். இருக்கும் சொத்தை விற்று தங்கையின் திருமணத்தை முடியுங்கள். மீதி உள்ள பணத்தை உங்கள் பெயரில் வங்கி இருப்பில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் உங்களது பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்…” நான் சொல்ல ஆரம்பித்ததுமே ஏதோ புரிந்தவராக எனது தாயார் உடைந்துபோய் அழ ஆரம்பித்தார். “ஏனப்பா அப்போ உன் கல்யாணம்…” தேம்பலுக்கிடையே என் தாயார் விசும்பியது என் மனதை நொறுக்கியது.

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நான் சொன்னபடி தங்கையின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு முகம் திருப்பி என்னை வேறு பணியில் ஆழ்த்திக் கொண்டேன்.

என் பெற்றோரின் மன நிலையும் வேதனையும் எனக்கு நன்றாகவே புரிந்தது. எனக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றோரின் உணர்வுகளை மிகவும் நுணுக்கமாக அறிந்து கொள்ளும் அறிவை மிகைப் படுத்தியிருந்தது உண்மைதான்.

நான் வானத்தை நோக்கி முறையிட்டேன்.

“எனது முயற்சிகளை முடித்து விட்டேன். இனி நடக்கப்போவதற்கு நீதான் பொறுப்பு. என்னை கைதூக்கி விடுவதும், கழுத்தை இறுக்கி கதையை முடிப்பதும் இனி உன் கையில். நான் இனி உன்னிடம் சரணாகதி அடைந்தேன்…” என ஒரு சிறிய பிரார்த்தனையுடன் எனது முறையீட்டை முடித்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகுதான் அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன.

எனது தங்கையின் திருமணத்திற்காக என் தந்தை நிலத்தை அறுபதாயிரத்திற்கு விலை பேசியவுடன், எங்களது தோட்டத்திலேயே கல் கட்டிட வேலை செய்தவர், என் தந்தையின் மீது மிக்க மதிப்பு கொண்டவர், நாற்பதாயிரம் ரூபாய்களை கொண்டுவந்து கொடுத்து என் தந்தையிடம், “நிலத்தை விற்க வேண்டாம் விற்றால் நீங்கள் மறுபடி வாங்க முடியாது. இந்த பணத்தைக் கொண்டு பாப்பாவின் கல்யாணத்தை முடியுங்கள். நீங்கள் பணத்தை திருப்பித்தரும் வரை நிலத்தை உழுது அதில் வரும் விளைச்சலை எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

அறுபதாயிரத்திற்குப் போயிருக்க வேண்டிய நிலம் தப்பியது. அதே நிலம் பின்னாளில் பனிரண்டு லட்சத்திற்கு போனது.

என் தங்கையின் திருமணம் நடந்து முடிந்தது.

அதற்குப் பிறகு நான் எதைப் பற்றியும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் நாட்களை கடத்தப் பழகிக் கொண்டேன். எனது பெற்றோர்களும் அதே மன நிலையில் இருக்க பழகிக் கொண்டனர். இப்படி இருக்கையில் ஒருநாள் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கல்லூரியிலிருந்து எனக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வு வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கும் என்ற எனது முந்தைய அனுபவத்தில் நான் அதை தூரத் தள்ளி விட்டேன்.

எனது பேராசிரியரிடமும் இதைச் சொன்னேன். அவர் என்னைக் கடிந்து கொண்டார்.


“எப்போ எது மாறும்னு சொல்ல முடியாத ஒரு திரில்லர் தாண்டா வாழ்க்கை. இதை நீ எழுதுவது கிடையாது. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை நிர்ணயிக்கவோ அல்லது வடிவமைக்கவோ முடியும்னா எல்லாருடைய வாழ்விலும் வெற்றி மட்டும் தான் இருக்கும் வேறெதுவும் இருக்காது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம வெறும் கடமையைச் செய்வதுதான் நமது வேலை. எது வருதோ அதை ஏத்துக்கறதுன்னு நீ முடிவெடுத்ததுக் கப்புறம் முயற்சி செய்யறதுல நீ சுணக்கம் காட்டக் கூடாது. எனக்காக இந்த நேர்முகத் தேர்வை நீ அட்டெண்ட் பண்ற. அந்த பிரின்சிபால் எனது நண்பர்னு வெச்சுக்கோ. அவரை பார்த்துட்டு வரச்சொல்லி ஒரு வேலையா உன்னை திண்டுக்கல் அனுப்பறேன்னு வெச்சுக்கோ. உடனே கிளம்பு. வேறேதும் மனசுல போட்டு குழப்பிக்காதே…” என்று சொல்லி என் கையில் மூண்று நூறு உரூபாய்களை வைத்து அழுத்தினார்.

மனதில் எனது முந்தைய அனுபவங்களின் கசப்பு நெருட, கையில் அவர் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு திண்டுக்கல் போவதா வேண்டாமா என யோசித்தேன்..”

நண்பர் பேச்சில் சற்று இடைவெளி விட நானும் மிக ஆவலாக அவரது அடுத்த வார்த்தையை எதிர்பார்த்தேன்.

 

இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.

 

 

5 comments:

  1. வசந்த காலத்தின் வாயில் மெல்லத் திறந்தது மன நிறைவைத் தருகின்றது

    ReplyDelete
  2. தொடக்கம் முதல் அத்தனையும் உணர்சிகரமான வரிகள். தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு சிறந்த சுயமுன்னேற்ற புத்தகமாக உருவாகும் சாத்தியங்கள் தெரிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கூற்று உண்மைதான். இந்தப் பேச்சின் நோக்கமே நம்மை நோக்கி வரும் நன்மைகளை இனம் கண்டு கொள்வதும், மறுப்பில் மனமொடிந்து போகாமல் பார்வையைக் கூர்மையாக்கி வாய்ப்புகளுக்காய் பார்த்திருப்பதை வலியுறுத்துவதும் தான் அன்பரே.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

      Delete
  3. ஒவ்வொரு நாளும் திரில்லர் தான் வாழ்க்கை... எதுவென்றாலும் அனுபவிக்க வேண்டும்... அதில் தான் சுவாரஸ்யம், பாடம், மற்றும் எல்லாமே...

    திண்டுக்கல்லுக்கு எப்போது வருகிறீகள்...? ஹிஹி...

    ReplyDelete
  4. well changes have begun occuring to this man let him get wide experiences that would ultimately benefit him and to the society around him.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...