Followers

Tuesday, December 9, 2014

நவீன நள புராணத்தின் சுப முடிவு…!


9.12.14
நவீன நள புராணத்தின் சுப முடிவு…!


 
மறுபடியும் ஒரு நேர்முகத் தேர்வு. இதற்கு நண்பர் எப்படி வினை செய்தார் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமானேன். நண்பர் தொடர்ந்தார்.
“அந்தக் கல்லூரி திண்டுக்கல்லில் இருந்து எரியோடு செல்லும் வழியில் இருந்தது. அது ஒரு தனியார் கல்லூரி. GTN Arts College என்பது. முற்றிலுமாக ஆண்களுக்கான கல்லூரி. பின்னால் அது  Co education college ஆக மாறிவிட்டது என அறியவந்தேன்.
திண்டுக்கல்லை வந்தடைந்து எரியோடு செல்லும் பேருந்தை பிடித்து கல்லூரி வாசலிலேயே இறங்கினேன். எனக்கு முன்னரே பலர் வந்தடைந்திருந்தனர். ஏறக்குறைய ஒரு முப்பது பேர் இருந்திருப்பர். நானும் அவர்களது வரிசையில் சென்றடைந்தேன். வந்திருந்தவர்களில் பழைய முகம் ஏதேனும் தெரிகிறதாவெனப் பார்த்தேன். யாரும் காணவில்லை. எல்லோருக்கும் வேலை கிடைத்திருக்குமோ அல்லது என்னைப் போலவே மனமொடிந்து ஒதுங்கிவிட்டிருப்பார்களோ.. மனம் சிறிது கலங்கியது.
நேர்முகத் தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் மற்றும் மூன்று மூத்த பேராசிரியர்கள் இருந்தனர். சான்றிதழ்கள் ஒப்பீடு முடிந்ததும் அனைவரையும் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆங்கிலம், வணிகவியல் ஆகிய துறைகளிலும் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆட்கள் தேவைப்பட்டது போலிருந்தது. அவர்களுக்கும் நேர்முகத் தேர்வு முடிந்தது. முடிந்தவுடன் மதியச் சாப்பாட்டிற்கு பிறகு தேர்ந்தெடுத்தவர்களைத் தவிர மற்றையோரை செல்லலாம் எனச் சொல்லி அனுப்பி விட்டனர். நல்ல வேளை இங்கு மற்ற கல்லூரிகளைப் போல சாதிப் புராணம் படிக்கவில்லை.
எனது துறையில் காலியாக இருந்த ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னிடம் சற்று காத்திருந்து பணி ஆணையை பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள்
நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் எனக் கேட்டதும் மரத்துப் போன என் மனதில் எந்த ஒரு உணர்வுகளும் எழவில்லை. பணி ஆணைக்காக அலுவலகத்தில் காத்திருந்தேன். நான் தொலைவிலிருந்து வந்ததனால் என்னை முதலில் அனுப்பும்படியாக எனது பணி ஆணையை தயார் செய்து கொண்டிருந்தார் தலைமை எழுத்தர்.
தனியார் கல்லூரி என்பதால் சம்பளம் எப்படிக் கொடுப்பார்கள் என ஒரு சந்தேகம் எழவே, தலைமை எழுத்தரிடம் சென்று, “அய்யா, எனக்கு பணியில் சேர்ந்தால் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உடனே கிடைக்காதப்பா.. இது பல்கலைக் கழகத்திற்குப் போய் அங்கீகரிக்கப் பட்டதற்குப் பின்னர்தான் உங்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதற்கு ஒரு எட்டு மாதங்களாவது ஆகலாம்.” என்றார்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
பதறிப்போய், “அப்படியென்றால் எனக்கு இந்த வேலை வேண்டாம்” என்றேன்.
நான் சொன்னதைக் கேட்டு தலைமை எழுத்தரும் திகைத்துப் போனார். “ஏன்? ஏன் வேண்டாமென்கிறீர்கள்?”. அவரது திகைப்பு வார்த்தைகளிலே வெளிப்பட்டது.
“என்னால் சம்பளம் இல்லாமல் வேற்றூரில் காலம் கடத்த முடியாது சார்…”
“எட்டு மாதங்கள் கூடவா சமாளிக்க முடியாது.?”
“இல்லை சார். ஒரு மாதம் கூட முடியாது. இப்போது நேர்முகத் தேர்வுக்கே வழிப்பயணச் செலவை எனது பேராசிரியர் கொடுத்ததால்தான் வர முடிந்தது. அதனால்தான் சொல்கிறேன் …” என்று இழுத்தேன்.
நான் சொன்னதைக் கேட்டு யோசித்த தலைமை எழுத்தர், “அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சற்று காத்திருங்கள்.. இதோ வருகிறேன்.”, என்றபடி எழுந்து கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்தார். சற்று நேரம் கழித்து வெளியே வந்தவர், “பிரின்சிபால் உங்களை வரச் சொல்கிறார் அவரைப் போய் பாருங்கள்,” என்றார். நான் தயங்கியபடியே உள்ளே சென்றேன்.

 
கல்லூரி முதல்வர் என்னைக் கண்டதும் வரவேற்று அமரச் செய்தார். பிறகு சற்று நேரம் அமைதி. அதற்குப் பிறகு மெதுவாக, “ உங்களால் பணி ஏற்க இயலாதென தலைமை எழுத்தர் வந்து சொன்னார். காரணத்தை நான் அறியலாமா?” என்றார். நான் என்னை சற்று நிதானித்துக் கொண்டு,”அய்யா, நான் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். First generation learner. நான் தான் மூத்த பிள்ளை. எனது பெற்றோர் மிகவும் வயதானோர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உதவியாய் இருப்பதனால் என்னை சுமையாக கருத வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை விட்டு இங்கு தனியே வருமானம் ஏதுமின்றி இருக்கும்போது அவர்களுக்குச் சுமையாய் இருப்பேன். மேலும் இந்த வயதிலும் அவர்களை சிரமப்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான்.” என்றேன்.
“உங்களுக்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும்?’
“அதிகமாக ஒன்றும் வேண்டாம் அய்யா. எனது சாப்பட்டுச் செலவு மற்றும் எனது துணிகளை வெளுக்க சோப்புச் செலவு அவ்வளவுதான்”.
“அவ்வளவுதானே.. நான் உங்களுக்கு மாதம் உரூபாய் அய்நூறு தரச் செய்கிறேன். இப்போது பணியேற்கச் சம்மதமா?” என்றார். இதைக் கேட்டதும் எனக்கு கண்களில் நீர் வந்துவிட்டது. கையெடுத்துக் கும்பிட்டேன். நாத்தழுதழுக்க, “ அய்யா இந்த உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்.” என்றேன்.
உடனே ப்யூனை அழைத்து “ கோபாலன் சாரை வரச் சொல்.” என்றார். கோபாலன் சார் வேதியியல் துறையில் பணிபுரியும் ஒரு மூத்த பேராசிரியர். அவர் தான் ஹாஸ்டல் வார்டன். கோபாலன் சார் வந்ததும் அவருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்து ஹாஸ்டலில் என்னை அக்காமடேட் செய்யச் சொல்லி சொன்னார்.
அந்தப் பணி நியமன ஆணை என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டது.
எனது திறமைகளை கல்லூரி முதல்வர் மிகுந்த கவனத்துடன் கவனித்தார். எனது வகுப்பிலிருந்த பிள்ளைகள் நான் பேச ஆரம்பித்தாலே உற்சாகமடைந்தனர். மாத முடிவில் என் கையில் கிடைத்த அய்நூறு உரூபாய்களை வெறித்து நோக்கினேன். எனக்கு என்னவோ மனம் துள்ளவில்லை. எனது வயதில் அந்தப் பணத்தைப் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகள் எனக்கு ஏற்படவில்லை.
எனது எட்டு வருடங்களின் கடுமை பணத்தைப் பற்றிய ஆசை, அதைப் பார்க்கும் போது ஏற்படும் ஒரு மகிழ்வு ஆகியவைகளை சுத்தமாக பொசுக்கியிருந்தது. இனிமேல் இந்த உணர்வுதான் எனது வாழ்வை வழிநடத்தப் போகிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. பிற்காலத்தில் நான் முக்கியமான அரசுப் பணி வகிக்கும்போது எனது பணியில் எத்துனை பணத்தைக் காட்டியும் என்னை அசைக்க முடியாத ஒரு நிலையை, ஒரு தெளிவை, ஒரு திட மனதை எனக்கு இந்தக் கடுமையான காலங்கள்தான் பரிசளித்தது என்பதை என்னால் உணர முடிந்தது. அதற்கு இன்றுவரை நான் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு உதவியாக அய்நூறு உரூபாய்கள் அளிக்கப் பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இதுவரை G T N சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நிகழ்வு என வியந்தனர். ஹஸ்டல் வார்டன் கோபாலன் சார் எனக்கு மெஸ் பில் கட்டவேண்டியதில்லை பின்னால் உங்கள் சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்றார். நான் அதனை மறுத்து விட்டு பில்லைக் கட்டினேன். அந்தக் காலத்தில் மெஸ் பில் நூறு உரூபாய்களைத் தாண்டவில்லை.
அதற்குப்பிறகு ஒரே மாதத்தில் மற்றுமொரு மாற்றம் நடந்தது.
ஹாஸ்டலில் இருந்த resident warden ஒரு இள வயதுக் காரர். அவரால் பேச்சைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒருமுறை விடுதிப் பணியாளர்களிடம் (விடுதிப் பணியாளர்கள் பக்கத்திலிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விடுதியும் கிராமமும் ஒன்றாய் இருந்ததனால் அவர்களுக்கு பணி செய்ய வசதி ) மிகையாய் வாயைக் கொடுக்க அது முற்றி அந்தக் கிராமத்திலுள்ளோரெல்லாம் resident warden க்கு எதிராய் வேல்கம்பு, கட்டைகளுடன் விடுதியைச் சூழ்ந்து கொள்ள கொஞ்சம் விட்டால் பெரும் சாதிப் பிரச்சனையாக வெடித்துவிடக்கூடிய சூழல் உருவாகிவிட்டது.
அந்த நேரத்தில் என்னையறியாமலேயே நான் இடையே புகுந்து பேசி ஒற்றை ஆளாய் அனைவரையும் சமாதானப் படுத்தி பிரச்சனையைத் தீர்த்துவைத்தேன். நடுங்கிப்போய் விடுதி அறைகளை பூட்டிக் கொண்டிருந்த பிள்ளைகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அடுத்த நாள் இந்த நிகழ்வை கேள்விப்பட்ட கல்லூரி முதல்வரும் கோபாலன் சாரும் அந்த resident warden ஐ நீக்கி விட்டு என்னை resident warden ஆக நியமித்தனர். அந்த மாதத்திலிருந்து மெஸ் பில்லும் எனக்கு இல்லை. கிடைத்த பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி வைத்தேன்.
அடுத்த சில மாதங்களிலேயே எனக்கு எனது கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசுப் பணிக்கு நேர்முகத்தேர்வு வந்தது. பணியும் கிடைத்தது. அதற்குப்பின் என் திருமணத்திற்கு பெற்றோர் முயற்சி செய்ய நான் எனது பெற்றோரிடம், “திண்டுக்கல் காந்தி கிராமத்தில் இருக்கும் பெண்களில் ஆதரவற்றோர் மற்றும் அனாதைகள் எத்துனையோ பேர் நன்கு படித்திருக்கின்றனர். எனது கல்லூரி முதல்வரிடம் சிபாரிசுக் கடிதம் பெற்று அத்தகைய ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன்”, என்றேன். என்  பெற்றோர்கள், இத்தகைய முற்போக்கான எண்ணங்களுக்கு பழக்கப் படாதவர்களானதால், பதறிப்போய் “அப்படியெல்லாம் வேண்டாம். உன் படிப்பையும் உத்தியோகத்தையும் இந்த துண்டுச் சீட்டில் எழுது. எங்களால் ஒரு மாதத்திற்குள் எந்தப் பெண்ணையும் பார்க்க முடியவில்லையென்றால் நீ சொன்னபடி செய்து கொள்ளலாம்.” என்றனர். நானும் அப்படியே செய்தேன்.
அன்றே என் தந்தையார் வீட்டைவிட்டு கிளம்பினார். அதற்கப்புறம் இருபது நாட்கள் கழித்து ஒரு பெரியவருடன் என்னை எனது அலுவலகத்தில் சந்தித்தார். வந்த பெரியவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு,” Your father stays with me. Please come after your office hours to our house. You can have your tea and get him with you.” என்று சொன்னார்.


 
அவரது சரளமான ஆங்கிலம் மற்றும் மற்றைய பக்குவப்பட்ட நடத்தை அவரை வித்தியாசப் படுத்திக் காட்டியது. எனது தந்தை நான் எழுதிக் கொடுத்த சீட்டை வைத்துக் கொண்டு தேனியில் எனக்காக பெண்தேடி அலைந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு திருமண வீட்டில் சந்தித்த ஒரு பெரியவரிடம் இந்தச் சீட்டைக் காண்பிக்க அவர் உடனே என் தந்தையை உபசரித்து, உடனே சென்று இவரைப் பாருங்கள் என்று சொல்லி விலாசம் தந்து வண்டி ஏற்றிவிட எனது தந்தையும் அதுபடியே செய்ய பிறகுதான் தெரியவந்தது அவரது பெண்ணுக்கு தகுந்த வரனை தேடிக்கொண்டிருக்கிறார் என்று. தன்னைத் தேடி வந்த என் தந்தையை வரவேற்று உபசரித்து பின் இருவரும் என்னைப் பார்க்க எனது அலுவலகம் வந்திருக்கின்றனர்.
அவரது அழைப்பின்படியே அவரது வீட்டிற்கு என் தந்தையை அழைத்துவரச் சென்றேன். அப்போதுதான் அவர், ஒரு பிரபல கல்லூரியில்  உதவிப் பேராசிரியராக பணி புரியும் தன் மகளை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். ஏறக்குறைய அது ஒரு informal பெண்பார்க்கும் படலமாகவே நடந்தது.
 பிறகென்ன. என் பெற்றோருக்கு பெண்ணையும் பெண் வீட்டாருக்கு என்னையும் பிடித்துப் போக அடுத்த மூன்று மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது.
இத்தனையும் எப்படி நடந்ததென இப்போது நினைத்தாலும் வியப்பாய் இருக்கிறது. என் வாழ்க்கையில் நடந்தவைகளே நான் என் பணிக்காலத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் எதற்கும் பயந்து கொண்டு யாருக்கும் வளைந்து கொடுக்காமலும் இருக்கும்படிக்கு என்னை உறுதிப்படுத்தியது.
 

என்னை ஒருக்காலும் ஆண்டவர் கைவிடவில்லை என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்டேன். இனியும் கைவிடமாட்டார் எனவும் நம்புகிறேன்….”
நண்பர் முடிக்கவும் நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.
 
இன்னமும் பேசுவோம்.
 
அன்பன்,
வேதாந்தி.
 
 

5 comments:

 1. எட்டு ஆண்டுகள் உங்கள் நண்பர் பட்டத் துன்பங்களில் இருந்து இறுதியில் விடை பெற்றுக் களிப்புற்றார் என்பதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே. அடுத்து அவருக்கு அரசு வேலை, நல்ல மனைவி, அவர் பெற்றோர்களின் கனவு அனைத்தும் கிடைத்தது இறைவன் செயல். என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் அவருக்கு என்றும். தங்களின் அழகான பதிவு சாலச் சிறந்தது.நன்றி.

  ReplyDelete
 2. சுப முடிவு மனதில் சந்தோஷம் தந்தது..வாழ்த்துகள்..

  ReplyDelete
 3. மனம் நெகிழ்ந்து விட்டது... இதில் உள்ளபடி எனது வாழ்வில் நடந்துள்ளது...

  துன்பம் / அழுகை ஏற்படும் பொது தான் வாழ்வின் உண்மை நிலை புரியும் என்பது உறுதி ஆகிறது இப்பதிவின் மூலம்....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...