Followers

Tuesday, February 1, 2011

நாம் வாழ்வைச் சுவைக்கிறோமா அல்லது சாவைச் சுவைக்கிறோமா?

1.2.11
நாம் வாழ்வைச் சுவைக்கிறோமா அல்லது சாவைச் சுவைக்கிறோமா?



இது ஒன்றும் புதிய செய்தியல்ல. பழய செய்திதான். ஆனால் புது விளைவுகளை எதிர் நோக்கி இப்போது எல்லொரது முன்னமும் வைக்கப்படுகிறது. வேறொன்றுமல்ல நம்மை, நமது இளைஞர்களை பீடித்துக் கொண்டிருக்கும் சில தீய பழக்க வழக்கங்களின் விளைவுகளைப் பற்றித்தான் இன்றைய பேச்சு. அதிலும் முக்கியமாக இந்த பழக்கத்தால் பாழாகும் மக்களின் வாதத்தில் உள்ள முரணைப் பற்றித்தான் பேச்சு.


பொதுவாகவே இந்த பழக்கத்தின் பிடியில் சிக்குபவர்கள் பெரும்பாலும் தன்னுடன் உள்ள நட்புறவுகளின் வாயிலாகவே இந்த புகை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அறிமுகமாகிறார்கள்.     இதற்கும் மேலே சிலர் போதைப் பழக்கத்திற்கும்அடிமையாகின்றனர்.    இதைக் கைக்கொள்ள  அவர்கள் சொல்லும் ஒரு வாதம் ‘ இதையெல்லாம் அனுபவிக்காத வாழ்வு ஒரு வாழ்வல்ல’ என்பதுதான்.

இது எனக்கு நேர்ந்த சொந்த அனுபவம். நான் கல்லூரியில் படிக்கும்போது புதிதாய் பணிக்குச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் எனக்கு நண்பரானார். அவர் மணமாகாதவராக இருந்ததால் ஒரு அறை எடுத்து தங்கி வந்தார். நான் அவரது அறைக்குச் சென்று பாடங்களைப் பற்றி விளக்கங்கள் கேட்குமளவுக்கு எங்களது நட்பு வளர்ந்தது.  அவர் ஒரு தொடர் புகையாளர். எனக்கோ புகை வாடையே ஆகாது. இப்படி இருக்கையில் எங்களிடையே இருந்த பழக்கத்தை வைத்து ஒரு நாள்  துணிச்சலுடன் ,  ‘ சார் இப்படி தொடர்ந்து புகை பிடிக்கிறீர்களே, உடலுக்கு கேடல்லவா..” என்று கேட்டேன்.


அவர் உடனே சிரித்து, “ அடேய்! வாழ்க்கையை அனுபவிக்காமல் 80 வயது வரை வாழ்வது வீணடா.. அதை விட வாழ்க்கையை அனுபவித்துவிட்டு 30 திலேயே போய்விடுவது மேல் ‘ என்றார்.


எனக்கோ குழப்பமாகி விட்டது. உண்மையில் சொல்லப்போனல் இங்கு நடந்தது ஒரு role reversal . அவர் சொல்ல வேண்டியதை நானும், நான் சொல்ல வேண்டியதை அவரும் சொல்லியிருக்கிறோம். ஆசிரியரல்லவா எனவே நான் மேற்கொண்டு விவாதிக்க வில்லை. ஆனால் எனக்குள் கேள்விகள் எழுந்தது.

இதற்குப் பின் நான் இதைப் பற்றி, அதாவது கேடான பழக்கங்களை நாம் ஏன் தொடரவேண்டும் என்பதைப் பற்றி, பல முறை நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன்.  அப்போதெல்லாம் எனக்கு கிடைப்பது பதிலல்ல மாறாக கேள்விகளையே பதிலாகப் பெற்றேன். அதில் சில இங்கு.

‘ நீ எத்துனை நாட்கள் உயிரோடு இருக்கப் போகிறாய்?’

“ இதையெல்லாம் அனுபவிக்காதவர்கள் இறப்பதே இல்லையா?”

“ இறப்பு நிச்சயம் என்ற பிறகு நீ முன்னால், நான் பின்னால் அல்லது நான் முன்னால், நீ பின்னால் தானே ஒழிய இறப்பை ஒதுக்கியவர் யாரும் கிடையாது.”

If I die , I die rich with experience but if you die , you die poor with heart full of longings..”

இப்படிப் பல.

ஏதோ வேதாந்தப் பள்ளியிலிருந்து மேற்படிப்பு படித்துவிட்டுவந்ததைப்போல் பேசினார்களே ஒழிய யாரும் தீய பழக்கங்கங்கள் தேவையற்றவை என்பதை புரிந்துகொள்ளத் தயாராயில்லை.

இவைகளையெல்லாம் நான் ஏற்றுக் கொண்டிருந்தேனானால் நானும் இவர்களைப் போலவே ஆகியிருப்பேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் follow up இல்லாத case study போல ஆகிவிட்டனர். ஆனால் என்னுடன் நண்பரைப் போல இருந்த விரிவுரையாளருடன் எனது பழக்கம் தொடர்நததால் நான் கண்ட அவரது வாழ்வையே ஒரு case study ஆக இங்கு கொடுத்திருக்கிறேன்.

தனி மனிதனாக இருந்த அவர் சில மாதங்களில் திருமணம் புரிந்து கொண்டார். ஆனாலும் தான் கொண்டிருந்த புகைப் பழக்கத்தினை விடவில்லை. நல்ல மணைவி. ஆண்டுகள் சென்றன. இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை பிறந்தன. பிள்ளைகள் வளர வளர அவரது போக்கில் ஒரு மாறுதலைக் கண்டேன். அவருக்கு வாழ்வைப் பற்றிய கவலை லேசாக பீடிக்க ஆரம்பித்தது. அதிகம் உழைக்க வேண்டும், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தை மேல் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்தது. இந்த நிலையில் சாவைப் பற்றி யாரேனும் பேசினால் கூட அதை அப சகுனமாய்க் கருதினார். ஆனால் நிலைமை மோசமாகியது. அவரது 45 வயதில் அவருக்கு நீரிழிவு வந்தது. மனிதர் மிகவும் நொந்து போனார். ஆனாலும் அவர் புகையை விடவில்லை.  ‘ அய்யா, இப்போதாகிலும் இந்தப் பாழாய்ப் போன பழக்கத்தை விடக்கூடாதா,என்று நான் கேட்டேன்.  எனது கேள்வியை எதிர் பார்த்தவராய், “ அட நான் விட நினைச்சாலும் இந்த சனியன் என்னை விட மாட்டேங்கிறதுடா..” என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.



ஆனால் இப்போது முன்னர் இருந்த தோரணையும் தொனியும் இல்லை. மாறாக ஒரு பயம் தென்பட்டது. பிள்ளைகள் நன்கு படித்துக் கொண்டிருந்தனர். குடும்பமே இவரது வருவாயை மட்டுமே நம்பியிருந்தபோதுதான் அது நடந்தது. அவர் படுக்கையில் வீழ்ந்தார். தொடர்ந்த புகை அவரை வீழ்த்தியது. பெரிய பெண் திருமணத்திற்கு வரன் கூடியிருந்தது, சின்னவளுக்கு மருத்துவப் படிப்பு மூண்றாம் ஆண்டு, கடைசிப் பையனுக்கு Agricultural Engineering ல் சேர்க்கை கிடைத்தது..மொத்தக் குடும்பமே அவரை எதிர்பார்த்திருந்த சூழலில் அவர் இறந்து போனார்.

அவர் இறக்கையில் நான் அருகில் இருந்தேன். இப்போது நினைத்தாலும் வயிற்றைப் பிசைகிறது. அவரது கால் பாதங்கள் இரண்டும் கருத்துப்போய் மரத்து சதை உறிந்து சீழ் வடிந்துகொண்டே இருந்தது.  தாங்க முடியாதபடிக்கு அவைகளில் இருந்து துர் நாற்றம் வேறு. டாக்டர்கள் ஏதோ ‘காங்கரீன்’ என்றனர். புகை கொண்டுவந்த எமன் என்றனர். இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவரது முகத்தில் ஒரு பதட்டம் தென்பட்டது. குடும்பத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நினைத்திருப்பார் போலும். இறுதியில் இறக்கும் போது தனது மனைவியின் பெயரைச் சொல்லிக் கொண்டே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிய பிள்ளைகளையும் மனைவியையும் கைகளால் தடவிக்கொண்டே உயிரை விட்டார். என்னால் அந்தக் காட்சியை இப்போது கூட நினைவிற்கு கொண்டுவரும் சக்தியில்லை. அனைவரையும் தவிக்க விட்டு அவரும் தவித்து உயிரை விட்டது மிகக் கொடுமையான நிகழ்வு.
சாவு தவிர்க்க முடியாததொன்றென்றாலும் இத்தகைய அகால மரணம் நாமாக வரவழைத்துக் கொள்வதல்லவா?

இதைப் பற்றி வெகு நாளாக யோசித்த போதுதான் ஒன்று தெளிவானது. நாம் நமது செயல்களை பெரும்பாலும் நமது சாவைக் கொண்டுதான் நிர்ணயிக்கிறோம். சாவின் நினைவு ஒன்று நம்மை நல்ல வழியில் வாழ வைக்கிறது அல்லது தீய வழியில் நம்மைத் துணிந்து நடத்துகிறது.



சாவின் நினைவு நம்மை நல்ல வழியில் நடத்தத் தூண்டுகையில் நாம் சாவின் நினைப்பில், நிலையாமையில் நிழலில்,  ஒவ்வொரு நாளும் பிறருக்கும் உதவி , நம்மைச் சார்ந்தோரையும் மகிழ்வித்து நம் நலனையும் காத்து  வாழ்வைச்  சுவைத்து வாழ்கிறோம். ஆனால் சாவின் நினைவு நம்மை தீய வழியில் நடத்தும் போது நாம் வாழ்வைச் சுவைப்பதாய் எண்ணி ஒவ்வொரு நாளும் சாவைச் சுவைத்து அதனை உரிமை கொண்டாடி வீணாய்ப் போவதோடு மட்டுமல்லாது நமது தீய பழக்கங்களால் உடல் நலம் கெட்டு பிணிக் கொடுமையில் நம்மை வருத்தி மிகவும் துன்புற்று நாமே சாவை விரும்பி வரவழைத்து உயிரையும் விடுவதோடு மட்டுமல்லாது நம்மை நம்பி இருப்பவர்களையும் நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறோம். இந்த அகால மரணமும், அதைச் சார்ந்த வலியும் நமக்கு நாமே வரவழைத்துக் கொள்வதல்லவா?

மேலும் நாம் தீய பழக்கங்களை அரவணைத்துக் கொண்டபடி சாவை விரும்பி அழைக்கும் போது அது வருவதில்லை. மாறாக அந்த அழைப்பு நாம் வாழத்துடிக்கும் போது, 'நீ தானே என்னை அழைத்தாய் ?' என்று மரணம் நம் முன் நிற்கையில்தான் உயிர் பெறுகிறது.

நாம் மாற வேண்டாமா? இந்த வாழ்வு இழத்தலுக்குரியதா? நிலையாமை நிலையானதென்றாலும் வாழும் வரை ஆரோக்கிய வாழ்வு வாழ்வது மட்டுமே நாம் வாழ்வைச் சுவைப்பதற்கொப்பாகும்.

எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து வாழ்வின் இனிமையை அனுபவிப்போம். வளமான உணர்வுகளால், நெஞ்சு நிறைந்த அனுபவங்களைக் கொண்டு வாழ்ந்து முடிப்போம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



11 comments:

  1. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்...

    ReplyDelete
  2. @ sakthistudycentre-கருன்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. தலைப்பே நிறைய சொல்கிறதே! நல்ல பதிவு.

    ReplyDelete
  4. @ Chitra..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. இந்த வாழ்வு இழத்தலுக்குரியதா? நிலையாமை நிலையானதென்றாலும் வாழும் வரை ஆரோக்கிய வாழ்வு வாழ்வது மட்டுமே நாம் வாழ்வைச் சுவைப்பதற்கொப்பாகும்.அருமையான பதிவு நண்பரே ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. என்னை மிகவும் யோசிக்க வைத்த கட்டுரை. கண்டிப்பாக இந்த பதிவினால் பெரும்பாலோர் நல் வாழ்க்கைக்கு திரும்புவர் எனும் நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
  7. @ரேவா..

    @SHANKAR..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு.நிறையவே என்னை யோசிக்க வைத்தது.

    ReplyDelete
  9. @"குறட்டை" புலி...


    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  10. @போளூர் தயாநிதி..

    தங்கள் வரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...