Followers

Monday, February 17, 2014

விலையில்லா மிக்சி, கிரைண்டர் வீட்டுக்கு வந்ததா?!!


17.2.14

விலையில்லா மிக்சி, கிரைண்டர் வீட்டுக்கு வந்ததா?!!

 
மிக முக்கியமான ஒரு மாறுதலைக் கண்டேன்.

இலவசங்கள் தவிர்க்கப் படக்கூடியவைகளில் மிக முக்கியமானதொன்று என்றாலும் சில சம்பவங்களை நெருங்கிப் பார்க்கையில் பார்வை வேறுபடுவதென்னவோ உண்மைதான். முப்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு மின் விசிறியே luxury item ஆக இருந்தது. இனிமேல் எல்லோரது வீடுகளிலும் மிக்சி, கிரைண்டர் மற்றும் ஃபேன் அத்தியாவசியப் பொருளாக கட்டாயமாக தரிசனம் தரும். ஒரு வகையில் இது வரவேற்கத் தகுந்த ஒன்றுதான். வசதிகளின் தரிசனம் பரவலாக்கப் படுதல் நிச்சயமாக வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

சமீபத்தில் எனது நண்பனது அழைப்பில் அவனுடன் சென்றேன். ‘நீதான் என்னமொ எழுதுறேங்கிறயே என் கூட வந்து பார்த்துட்டு இதையும் எழுது’. என்றான். பொழுதைப் போக்கவும் மக்களின் மனப்போக்கை அறியவும் அவனுடன் சென்றேன். அவனுக்கு இந்தக் கட்சிகளில் சிலர் சொல்வதைப் போல ஒரு ஃப்ளோ (Flow) உண்டு. வட்டம், மாவட்டம், என எல்லா ஜியோமெட்ரியிலும் ஒரு பரிச்சயம் உண்டு. ஒரு ஆர்வத்தில் அவன் பின்னே சென்றேன்.

என்நண்பனைக் கண்டதும் அந்த வட்டத்துள் நிறையவே வரவேற்பு இருந்தது. சிலர் நாற்காலிகளை நகர்த்தி அமரச் சொன்னார்கள். ‘இல்லப்பா. இவரு கொஞ்சம் கூச்ச சுபாவம். எதிலயும் கலந்துக்க மாட்டார். நான் தான் இழுத்துட்டு வந்தேன். இப்படியே நிக்கிறோம்.’ என்று சொல்லி ஒரு ஒரத்தில் என்னை இழுத்து நிறுத்திக் கொண்டான். அங்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் ஃபேன் வினியோகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

அதில்தான் ஒரு பெரிய மாறுதல். இது ஏதோ ஒரு official distribution போலத்தான் நடந்ததே ஒழிய இதில் கட்சியின் தலையீடு இருப்பதாக கொஞ்சமும் தெரியவில்லை. ஒரு கலவையான ஜனத்திரள். இலவசம் என்றாலே முட்டி மோதிக்கொண்டு இருக்கும் கும்பலைப் போலல்லாமல் மிக இயல்பாக மக்கள் வந்தனர். Eligibility criteria வாக பச்சை நிற ரேஷன் கார்டு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. கார்டு கொண்டு வந்தவர்களெல்லோரும் ஒரு ஒழுங்கு வரிசையில் நின்று அரசு அலுவலரிடம் காட்டி, கையொப்பமிட்டு டொக்கனைப்  பெற்றுக் கொண்டு சென்றனர்.

நான் நண்பனைக் கேட்டேன். ‘வழக்கமா இந்த மாதிரி வாங்கறதுக்கு கவுன்சிலரை கேட்கணும், கட்சி கார்டை காட்டனும்னு சொல்வாங்களே இப்ப அது மாதிரி இல்லையா? என்றேன். ‘அம்மாவோட ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்சன். எல்லாருக்கும் போய்ச் சேரனும்னு. அந்தக் கோல்மாலெல்லாம் கிடையாது.’ என்றான். வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் என் கண்முன்னே வந்து நின்றது. ஒரே ஒளிமயம் தான். மெதுவாக சிரித்துக் கொண்டேன்.

ஆரவாரமில்லாமல் பகிர்மாணம் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் இது கற்பனையா என்று கூட தோன்றியது. மெதுவாக அங்கே இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். அவர் சொன்னார்.’ நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா இங்க ஒரு டிசிப்ளினா டிஸ்டிரிபியூட் பண்றாங்க. இல்லைனா நானே இங்கு வந்து நிக்க மாட்டேன்.’ என்றார். இது நான்காம் நாளாம். இரண்டு நாளைக்கப்புறமாத்தான் நம்ம அப்பர் மிடில் கிளாஸ் தைரியமா ரேஷன் கார்டை கொண்டு வந்திருக்காங்கா.

நான் பார்த்துக் கொண்டே இருக்கும் போது ஒருவர் Ford Esteem காரில் வந்து இறங்கி டோக்கன் வாங்கிக் கொண்டு சென்றார். டொக்கன் கொடுத்த இடத்தில் ‘ இது என் அப்பாவோட கார்டு. அவர் சீனியர் சிட்டிசன். நான் அவருக்கு பதிலா வந்திருக்கேன். நன் கையேழுத்து போடலாமா?’ என்று அழுத்தம் திருத்தமாக கேட்டார். அங்கிருந்த அலுவலரோ,’ பரவாயில்லை சார். Family member யார் வேணா போடலாம் சார்’ என்று சொல்லிக்கொண்டே டோக்கனை கிழித்துக் கொடுத்தார்.

நான் கவனித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்ததும், ‘இல்லை சார். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்றார். என் ரைட்டை நான் ஏன் விட்டுக் கொடுக்கனுன்றார். கொண்டுபோய் மூலைல போட்டுட்டா அவர் மனசு திருப்தியாகும். அவ்வளவுதான்.” என்றார். என்னால் அந்த முதியோரின் மன நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. பிள்ளையின் மன நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவிலிருந்து ஒரு நடுத்தட்டைச் சேர்ந்த முதிய பெண்மணி இறங்கினார். கூடவே அவரது பணிப்பெண்ணைப் போன்ற ஒருவரும் இறங்கினார். அவர் டோக்கனை வாங்கி அந்தப் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.

சிலரது முகத்தில் மகிழ்ச்சி. பெரும்பாலும் முதியோர்களே அதிகம் நின்றிருந்தனர். எல்லாமே ஒரு ஒழுங்கில் நடந்ததால் இந்த நிலை போலிருக்கிறது. இல்லையென்றால் கரை வேட்டிகளும் கூச்சலும் இவர்களைத் துரத்தியிருக்கும்.

ரேஷன் கார்டில் மண்டல உதவி வருவாய் அலுவலரது கையொப்பத்தில் ஒரு stamp அடித்து வழங்கப் பட்டது என கையொப்பமிட்டிருந்தனர்.டோக்கனை வாங்கிப் பார்த்தேன். அரசு முத்திரை, கீழே வழங்கு அலுவலர் கையொப்பத்திற்கு எதிரே குடும்பத் தலைவி என்று அச்சிடப்பட்டிருந்தது.

ஒருவேளை குடும்பத் தலைவர் போருளை வீடு கொண்டு போய்ச்  சேர்ப்பாரோ மட்டாரோ என்ற சந்தேகம் அரசுக்கே வந்திருக்குமோ எனத் தெரியவில்லை. பத்திரமாய் பொருளை குடும்பத் தலைவியிடம் கொடுத்ததற்கான ஒப்புகைச் சீட்டு அது. அரசு குடும்ப விஷயத்தில் மிகுந்த ஞானத்துடனும் அக்கறையுடனும் நடந்து கொள்கிறது என்பது இதிலிருந்து தெரிந்தது.

அது சரி. இப்படிப் போனால் டாஸ்மாக் வருமானம் அடிபடாதோ..?

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

3 comments:

 1. இங்கும் ஒவ்வொரு வார்டாக பிரித்து அமைதியாகத் தான் விநியோகம் நடக்கிறது...

  ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் எல்லாமே இரண்டிரண்டு...!

  இயங்க மின்சாரம்...?

  அதிகரிக்கும் சோம்பேறித்தனம்...?

  ReplyDelete
 2. இப்படிப் பட்ட இலவசங்கள் வோட்டைக் குவிக்கும் என்று தோன்றவில்லை ,ஏனென்றால் சென்ற முறை எல்லா நிற ரேசன்கார்டுக்கும் டிவி வழங்கினார்கள் ,முடிவுதான் உங்களுக்கும் தெரியுமே !
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி.
   டிவி அப்படி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த இலவசங்கள் மிகக் கவனமாக வழங்கப் படுகிறது. வழங்கும் இடத்தில் no arguments or questions. அது மட்டுமல்ல, வழங்கியது revenue officials. ஒரு ஒழுக்கம் தெரிந்தது. இலவசங்கள் வரவேற்கப்பட வேண்டியவை அல்ல வென்றாலும் இந்த திடீர் 'ஒழுக்கம்' ஒரு கேள்வியை எழுப்பியது. அவ்வளவே.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...