Followers

Saturday, October 25, 2014

அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.


25.10.14

அற்புதங்களும் அற்புத மனிதர்களும்.-1



நான், நமக்குப் புரியாத சில செய்திகளையும் நம் சூழல் நமக்குச் சொல்லும் சில அடையாளங்களையும் பற்றி பேசியிருக்கிறேன்.

எனது நண்பர், சென்னை வாசி, என்னிடம் பகிர்ந்துகொண்ட இந்தச் செய்தி உண்மையாலுமே என்னை யோசிக்க வைத்தது. நாம் சில முடிவுகளை எடுப்பதற்கு நமக்கு கிடைத்த அனுபவங்களே போதும் என்கிற சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாது நமக்கு ஒரு உதவி தேவைப்படும் போது வெறும் உண்மையை மட்டுமே நம்பியிருப்போருக்கு உதவி எத்திசையிலிருந்தும் வரும் எனக் காட்டியது எனது நண்பரது அனுபவம். அதை இன்றைய பேச்சாக அப்படியே அவரது வாய்மொழியில் கொடுத்துள்ளேன்.

“ சில நாட்களுக்கு முன் விஜய் tv யில் வந்த நீயா நானா TALK SHOW வில் தற்காலத்தில் இருக்கும் டாக்டர்களைப் பற்றியும் அவர்களது தொழில் தர்மத்தைப் பற்றியும் மக்களது பார்வையை விவாதப் பொருளாக வைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலார் டாக்டர்கள் பணத்தை மட்டுமே குறியாக வைத்து தங்கள் தொழிலை நடத்துவதாகவும், தொழில் தர்மத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை எனவும் பேச்சு நகர்ந்தது.

இது குறித்து எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் சொல்லியாக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கு தாடையில் வலது காதின் கீழ் ஒரு கட்டியைப் போல வந்தது. அந்த இடத்தில் நினநீர் சுரப்பி (LYMPHATIC GLAND) இருப்பதால் அது நினநீர் சுரப்பியின் வீக்கம் என நினைத்து சாதாரணமாக இருந்து விட்டேன். நாட்கள் செல்லச் செல்ல கட்டி சற்று பெருக்கவே எனது மனைவி பயந்து விட்டாள். பின்னர் டாக்டரிடம் போய் காட்டியே ஆகவேண்டும் என வற்புறுத்தி அருகில் இருந்த SMF (Sundaram Medical Foundation) ல் appointment fix செய்து ஒரு ENT டாக்டரின் opinion பெறச்சென்றோம். நாங்கள் பார்த்தது Dr.  கிருஷ்ண குமார், ENT specialist. என்னை பரிசோதித்த டாக்டர் எல்லாச் சோதனைகளையும் எழுதித் தந்தார். ஏற்கனவெ நான் audiogram எடுத்திருந்ததனால் அது வேண்டாமே என்றேன். அதைக் கேட்டு டாக்டர் சிரித்துக் கொண்டார். மேலும் CT Scan எடுக்கவும் எழுதிக் கொடுத்தார்.

எனக்கு விருப்பமில்லையெனினும் என் மனைவியின் வற்புறுத்தலுக்காக வேண்டி அத்துனை சோதனைகளையும் செய்து முடித்தோம். கட்டி இருந்த இடத்தில் வலி இல்லாததால் நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என நினைத்தேன். ஆனால் டாக்டருடைய கருத்து வேறாக இருந்தது.


எனது மருத்துவ சோதனைகளது முடிவுகளைப் பார்த்த டாக்டர், “ இதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்” எனச் சொல்லி மறுபடியும் வந்து பாருங்கள் என்றார்.

அத்தோடு சரி. நான் என் மனைவி மீது கோபம் கொண்டு “ஒன்றுமில்லாததை பெரிதாக்குகிறாய். இது தானாகவே சரியாகிவிடும். அல்லது வேறேதேனும் மாத்திரை கொடுத்து சரி செய்யும் டாக்டரை பார்த்துக் கொள்ளலாம்” என்று இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

நாட்கள் நகர்ந்தன. நானும் அலுவலக வேலையில் மூழ்கிவிட்டேன். என் மனைவியும் பணிக்கு சென்று வந்தபடி இருந்தாள். ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென ஒரு நாள் அந்த வீக்கம் இருந்த இடத்தில் வலிக்க ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல வலி அதிகரிக்கவே டாக்டரை இன்று பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து எனது மனைவிக்கு தொலைபேசியில் நிலமையைத் தெரிவித்தேன். அப்போது நேரம் மதியம் இரண்டு மணி.

செய்தியைக் கேட்ட என் மனைவி பதறிப்போய் உடனே தொலைபேசியில் டாக்டரை தொடர்பு கொண்ட போது டாக்டர் கிருஷ்ண குமார் தற்போது SMF க்கு வருவதில்லை என்று தகவல் வந்தது. டாக்டர் கிருஷ்ண குமாருக்குத்தான் case history தெரியும் என்பதால் எங்களுக்கு வேறு டாக்டரை பார்க்க மனமில்லை. டாக்டர் கிருஷ்ண குமாரை ஒருவழியாக தேடிப் பிடித்ததில் அவர் அப்போது அடையாரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் பணியில் இருப்பது தெரிந்தது. உடனே என் மனைவி இது குறித்து எனக்கு தகவல் அளித்து அலுவலகத்திலிருந்து அப்படியே ஆட்டோ பிடித்து மருத்துவ மனைக்கு வரச்சொன்னாள். அது போலவே செய்தேன். என் மனைவியும்  அலுவலகத்திலிருந்து மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தாள்.

டாக்டருக்கு என் நிலைமை குறித்து அந்த மருத்துவ மனையின் வரவேற்பாளர் மூலமாக செய்தி சொன்னோம். வழக்கமாக மாலை 7.30 மணிக்கு வருபவர் அன்று என்னைக் குறித்த செய்தி கிடைத்ததும் மாலை 6.30 க்கே வந்து விட்டார். வந்தவர் என்னைச் சோதித்துப் பார்த்து உடனே அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். நாங்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்க சிறிது நேரம் கேட்டோம். இங்கேயே வரவேற்பறையில் அமர்ந்து ஆலோசியுங்கள் என்றார்.

கையில் பணம் இல்லை. இருவரிடமும் ஒற்றை அய்ம்பது உரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது. பணம் இருப்பில் இருந்தாலும் எங்களிடம் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்துக் கொள்ளும் பழக்கமில்லை. பணம் எடுக்க வேண்டுமென்றாலும் அல்லது எங்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் மனம் படைத்தோரை சந்திக்க வேண்டுமென்றாலும் எங்களுக்கு 24 மணி நேரம் தேவைப்பட்டது. இப்போதைக்கு வீட்டுக்கு வர  ஆட்டோ சார்ஜ் மட்டும்தான் கையிருப்பு. இதை எல்லாம் யோசித்தோம். அடுத்த நாள் மாலை மருத்துவ மனையில் அட்மிட் ஆகலாம் என முடிவெடுத்தோம்.

எங்களது முடிவை டாக்டரிடம் சொன்னோம். வலி உயிர் போகிறார்போல் இருந்தாலும் எங்களது தவிர்க்க முடியாத சூழலில் இந்த முடிவெடுக்க வேண்டியதாயிற்று.


எத்துனையோ நோயாளிகள் காத்திருந்த போதும் எங்களது முடிவை அமைதியாகக் கேட்டார் டாக்டர். என் மனைவி, “ டாக்டர், நாங்கள் இன்று வீடு சென்று தயாராகி நாளை வந்து அறுவைச் சிகிச்சைக்கு அட்மிட் ஆகிறோம்..” என்று டாக்டரிடம் கூற அதற்கு அவர்,

“என்னம்மா தயாராக வேண்டும்..”

“இல்லை.. துணி மணிகளை எடுத்துக் கொண்டு….”

“துணி மணிகளெல்லாம் வேண்டாமே..”

“இல்லை… பணம் ஏற்பாடு செய்து கொண்டு…”

“பணத்தைப் பற்றி இப்போது கவலை வேண்டாமே…”

“இல்லை.. நாங்கள் இங்கு வந்ததே யாருக்கும் தெரியாது.. எல்லோருக்கும் சொல்லிவிட்டு…

“அதை போன் பண்ணிச் சொல்லிவிடம்மா…

“இல்லை டாக்டர். நீங்கள் சொல்லும் குளோபல் மருத்துவமனை இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவு. அங்கு செல்ல ஆட்டோ சார்ஜ் கூட இப்போதைக்கு எங்களிடம் இல்லை…”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாமம்மா..போன் போட்டுச் சொல்வதானால் வரவேற்பறையிலுள்ள போனை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்..”

“ஆபரேஷனுக்கு எவ்வளவாகுமெனத் தெரியவில்லை…”

“அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்…”

உரையாடல் நேரத்தைக் கடத்தக் கடத்த டாக்டர் மிகவும் கவலைப்பட்டார். ஒருவழியாக நாங்கள் சம்மதம் சொல்லித் தலையாட்டினோம். அதற்காகவே காத்திருந்ததைப் போல மருத்துவமனை வாசலில் நின்றிருந்த ஆம்புலன்சின் ஓட்டுனரை வரவழைத்தார். தனது லெட்டர் பேடில் ஏதேதோ எழுதினார். அதைக் கவரில் போட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கொடுத்தவர்,

“இவர்களை பத்திரமாக ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்து அட்மிட் செய்து வரவேற்பாளரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து எல்லா பார்மாலிடீசையும் முடித்த பிறகு இவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நீங்கள் கிளம்பி வரவேண்டும்” என்றார். அவருடைய ஒவ்வொரு செயலிலும் ஒரு அவசரமும் பதட்டமும் இருந்தது.

எங்களை மருத்துவமனை வாசலுக்கு வந்து ஆம்புலன்சில் ஏற்றி விட்டார்.

ஆம்புலன்சில் நானும் என் மனைவியும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். வெளியே மழை கொட்டியது என் மனைவியின் முகத்தில் கலவரம். என்னையே பார்த்துக் கொண்டு வந்தாள். அவளது பார்வையும் ஆம்புலன்சின் வேகமும், வண்டியின் அசைவுகளுக்கு ஆடியபடி நாங்கள் ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் எங்களிடையே இருந்த ஆயிரம் கேள்விகள் ஓலத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.


அந்தப் பயணம் நான் வாழ்வில் கொண்டிருந்த அபிப்பிராயங்களில் மிக முக்கியமான இரண்டை மாற்றியது.

அது என்னவென்று அடுத்த பேச்சில் பார்ப்போம். 

அன்பன்,

வேதாந்தி.

 இதன் தொடர்ச்சிக்கு: வெறும் கட்டியா அல்லது கேன்சரா?

 

 

 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...