Followers

Wednesday, October 29, 2014

வெறும் கட்டியா அல்லது கேன்சரா?





29.10.14


வெறும் கட்டியா அல்லது கேன்சரா?


அற்புதங்களும் அற்புத மனிதர்களும் - 2


 
நண்பர் தொடர்ந்தார். “நானும் எனது மனைவியும் வெளியில் மழை கொட்டிக்கொண்டிருக்க வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சில் எதிரெதிரே உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹாஸ்பிடல் வந்து சேரும் வரை மௌனமாகவே பயணத்தை முடித்தோம். வழியெல்லாம் அவள் ஜெபம் செய்தபடி வந்தது எனக்குப் புரிந்தது.

வாசலில் வந்து நின்ற ஆம்புலன்சைக் கண்டதும் ஹாஸ்பிடல் பாய்ஸ் வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்தனர். நான் எவ்வளவோ மறுத்தும் வீல் சேரில் அமர்த்தி நகர்த்திக் கொண்டு உள்ளே சென்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வரவேற்பாளரிடம் டாக்டர் கிருஷ்ண குமார் கொடுத்த கடிதத்தை கொடுத்தார். உடனே என்னைச் சுற்றி இரண்டு செவிலியர்கள். என்னை அங்கிருந்த ஒரு படுக்கையில் படுக்கவைத்தனர். உடனடியாக எனக்குச் சொல்லியிருந்த பரிசோதனைகளை எடுக்க ஆரம்பித்தனர். எனக்குச் சற்று கலவரமாகியது. என் மனைவி வரவேற்பாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் எனது உடைகளை கழற்றி மருத்துவ மனை உடையை அணியச் செய்தனர். இரத்த மாதிரிகள் எடுத்தனர். இதயத் துடிப்பை அளக்கும் கருவியை எனக்குப் பொருத்தினர்.

சற்று நேரம் கழித்து என்னிடம் வந்த என் மனைவி, ‘டாக்டர் அறுவைச் சிகிச்சைக்கு உங்களை தயார் செய்யத் தேவையான மருத்துவ சோதனைகளை உங்களுக்குச் செய்யச் சொல்லியிருக்கிறார். அனஸ்தடிசியனுக்கும் நியூரோ சர்ஜனுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறாராம் கிடைத்துவிட்டால் காலை ஆறு மணிக்கே ஆபரேஷன் ஃபிக்ஸ் பண்ணச் சொல்லியிருக்கிறாரம். ஆபரேஷன் தியேட்டரையும் காலை ஆறு மணிக்கே தயாராக இருக்கும் படிக்கு வைக்கச் சொல்லியிருக்கிறார். அனேகமாக இன்னும் இரண்டு மணி நேரத்தில் நமக்கு ஒரு அறை கிடைக்கலாம். மற்றபடி எந்த ஒரு செய்தியையும் தன்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி அறிவுறுத்தியிருக்கிறார்..’ என்று சொன்னாள்.

ஒரு அரை மணி நேரத்திற்குள் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர் எங்களிடம் வந்து, “உங்களுக்கு சாப்பிட வேண்டுமென்றால் கேண்டீனில் அறை எண்ணைச் சொல்லி சாப்பிட்டுக் கொள்ளுங்கள். காலையில் டாக்டர் வந்து உங்களைச் சந்திப்பார். இதைத் தவிர உங்களுக்கு வேறேதேனும் வேண்டுமா?” எனக்கேட்டு எங்களுக்கு ஏதும் தேவைப்படாது என்பதை உறுதி செய்தபின்னரே விடை பெற்றுச் சென்றார்.


அன்றிரவு எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. என் மனைவியும் தனக்கு ஒன்றும் வேண்டாமென்றாள். அவள் பட்டினி கிடக்கக் கூடாதென்பதால் நான் இரண்டு இட்டிலிகள் வாங்கிவரச் சொன்னேன். அவளுக்கும் இரண்டு இட்டிலிகள். இரவை நகர்த்துவது கடினமாயிருந்தது.

எத்தனை நேரம் யோசித்தபடி விழித்திருந்தோமோ தெரியவில்லை. அப்போதுதான் அயர்ந்தோம். காலை அய்ந்து மணிக்கு செவிலியர் வந்து எங்களை எழுப்பினார். கூடவே ஒரு ஆண் செவிலியரும் வந்தார். அறுவைச் சிகிச்சை தாடையில் என்பதால் மழிக்கவேண்டும் என்றார். கலக்கத்தோடு அமர்ந்து முகத்தைக் காட்டினேன்.

மட மடவென குளித்துவிட்டு மருத்துவமனை உடைக்கு மாறினேன். Stretcher ல் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு தள்ளிக் கொண்டு சென்றனர். அங்கு தியேட்டரின் இன்னொரு பகுதியில் டாக்டர்கள் மூவரும் டிஸ்கஷனில் இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. செவிலியர் என்னை அதே இடத்தில் இருத்திவிட்டு உள்ளே சென்றார். முப்பது நிமிடங்கள் கழிந்திருக்கும் பின் செவிலியரும் ஒரு டாக்டரும் வந்தனர். வந்தவர் சிரித்துக் கொண்டே என் பெயர் என்னவென்று கேட்டுக்கொண்டே செவிலியருக்கு சைகை காட்ட செவிலியர் எனது இடது கையில் vein ஐ தேடி  I V tube ஐ சொருகினார். பின்னர் சலைன் பாட்டிலில் ஒரு ஊசியை சொருகி மருந்தைச் செலுத்தினார். டாக்டர் என்னைப் பார்த்து “will you count, please..” என்றவுடன் நான், ஒன்று, இரண்டு, மூன்று என்ற போதே Black out  ஆகி விட்டது. நினைவு தப்பினேன்.

அவ்வளவுதான்.

அடுத்து நான் கண் விழித்தது மூன்று மணி நேரம் கழித்துத்தான். கண்ணாடிக் கதவுக்கு வெளியே என் மனைவி கலக்கத்துடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சுத்தமாக நினைவு திரும்பி ஆபரேஷன் தியேட்டரை விட்டு அறைக்கு வரும்போது மணி இரண்டாகி இருந்தது.

தாடையில் பெரிய கட்டு. தாடையை பெரிதாய் அசைக்க முடியவில்லை. அன்றைய பொழுது சலைன் பாட்டிலோடு ஓடியது.

மறுநாள் காலை என்னை வீல் சேரில் வைத்து டாக்டர் இருந்த இன்னோரு கட்டிடத்திற்கு என்னை தள்ளிச் சென்றனர். சிரித்த முகத்தோடு என்னை வரவேற்றவர், “ How do you feel now?” என்றார். மெதுவாக சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். கட்டை அவிழ்த்து தாடையில் அறுவைச் சிகிச்சை செய்த இடத்தை பரிசோதித்தவர் தாடையை அசைக்கச் சொன்னார். பின்னர் முகத்தை சாடை காட்டும் பாணியில் முகத் தசைகளை அசைக்கச் சொன்னார். பின்னர் அங்கிருந்த பயிற்சி டாக்டரிடம், purging done. facial nerve intact ..என்றபடி ஏதேதோ சொல்ல அந்த பயிற்சி டாக்டர் குறிப்பெடுத்துக் கொண்டார். அதற்குப் பின் தாடையில் சிறியதொரு கட்டைப் போட்டு அறைக்கு அனுப்பி வைத்தார்.


என்னை அறைக்கு கொண்டு வந்து சேர்த்த செவிலியர்,  சாப்பாடு வேண்டுமென்றால் கேண்டீனில் வாங்கி சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். என் நிலையைப் பார்த்து என் மனைவி சாப்பாட்டுடன் ரசம் கலந்து கேண்டீனில் மிக்சியில் அடித்துக் கொண்டு வந்தாள். ஒவ்வொரு ஸ்பூனாய் சாப்பாட்டை உள்ளே தள்ளினேன். டாக்டரின் குறிப்புப் படி செவிலியர் நேரத்திற்கு வந்து மருந்து கொடுத்து ஊசி போட்டுச் சென்றார்.

இப்படியே அடுத்த நாளும் கடந்தது.

ஆபரேஷன் முடிந்து மூன்றாம் நாள்.

டாக்டர் formal check up க்குப் பிறகு, ‘நாளை நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம். நான் எழுதிக் கொடுக்கும் மருந்தை தினமு உங்கள் அருகில் உள்ள டாக்டரிடம் கொடுத்து முப்பது நாட்களுக்கு ஊசி போட்டுக் கொள்ளுங்கள். என்னை அடுத்த வாரம் அடையாரில் வந்து பாருங்கள்.’ என்றார்.

எனது மைத்துனர் அன்றுதான் என்னை வந்து பார்த்தார். வெளியூரில் இருந்ததால் தாமதம். மருத்துவமனை பில்லை செட்டில் செய்ய வேண்டியிருந்தது. மொத்த பில் என்பதாயிரத்துச் சொச்சம். எனது மைத்துனர்தான் தன்னிடம் இருந்த credit card மூலமாக செலுத்தினார். என் மனைவி கையிலும் கொஞ்சம் பணம் கொடுத்துச் சென்றார்.

பில்லை செட்டில் செய்யும் போதுதான் தெரிய வந்தது. அந்த மருத்துவமனையில் குறைந்தது அய்ம்பதாயிரமாவது முன் பணம் கட்டினாலொழிய அட்மிட் செய்ய மாட்டார்களாம். டாக்டர் கிருஷ்ணகுமார் தனது சொந்த சிபாரிசிலேயே அட்மிஷன் நடந்து மற்ற சோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் எங்களை அவருக்கு பரிச்சயமில்லை. அது மட்டுமல்ல. மருத்துவ மனைச் செலவுகளை கட்டி முடிக்க எங்களுக்கு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியாது. எங்கள் பேச்சிலிருந்து நாங்கள் படித்தவர்கள் என ஒருவேளை யூகித்திருக்கலாம். அவ்வளவே. அவர் எங்களுக்குச் செய்த உதவி எத்துனை பெரிது!

அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆக தயாராகினோம்.

டிஸ்சார்ஜ் ஆக மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. என் மனைவி call taxi க்கு book செய்து பயணத்திற்கு தயாரானோம். Call taxi யில் ஏறி வீடு வந்து சேரும் வரை நாங்கள் மௌனமாகவே வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, எல்லாம் ஏதோ கனவு போல் இருந்தது. என் மனைவி முழங்காலிட்டு ஜெபம் பண்ணத் தொடங்கினாள். நான் மௌனாமாக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

எனது நிலையின் அசுரத் தன்மையே நான் அடுத்த வாரம் டாக்டர் கிருஷ்ணகுமாரை அடையாரில் சந்தித்தபோதுதான் புரிந்தது.

எங்களை வரவேற்ற டாக்டர் தன் கையிலிருந்த லேப் ரிப்போர்டுகளைக் காட்டி பேசத்தொடங்கினார்.

“நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். லேப் ரிப்போர்ட் உங்களது கட்டி கேன்சர் கட்டி இல்லையென்று சொல்கிறது. நான் நீங்கள் என்னை சந்தித்த போது கட்டி வலிக்க வில்லை என்று சொன்னபோதே கட்டி கேன்சராய் இருக்குமோ என சந்தேகப் பட்டேன். ஆனால் உங்களை தொடர்ந்து சந்திக்க முடியாததால் சிகிச்சையை தொடர முடியவில்லை. உங்களை அடையாரில் மறுபடியும் சந்தித்த போது கட்டி மிகவும் மோசமாக infection ஆகி இருந்தது. நின நீர் சுரப்பி அருகில் இருந்ததால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வில்லையென்றால் தொற்று மூளைக்கு சடுதியில் பரவி விடக்கூடிய அபாயம் இருந்தது. அதனால் தான் உங்களை அன்றே மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து அறுவை சிகிச்சை செய்து முடிக்க வேண்டியிருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் மாதிரியை biopsy க்கு அனுப்பி வைத்திருந்தேன். அதனுடைய ரிசல்ட்தான் இது. Tumor is not malignant. எனவே நீங்கள் இனி கவலைப் படவேண்டாம். அது மட்டுமல்ல. நானும் நீயூரோ சர்ஜனும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் கலந்து பேசி முகத்தில் வடு வராமல் இருக்க incision செய்யாமல் கட்டியை purge செய்து விட்டோம். இப்போது ஒரு சிறிய புள்ளிதான் உங்கள் தாடையில் இருக்கும். இந்தக் காயம் ஆறும் வரை முகச் சவரம் செய்யும் போது சற்று கவனமாக இருங்கள்…” என்றார்.

டாக்டர் சொல்லச் சொல்லத்தான் எங்களது நிலைமையின் அசுரத்தனமும், சமயத்தில் கிடைத்த உதவியின் தெய்வாதீனமும் புரிந்தது. எங்களுக்கு கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. கையெடுத்துக் கும்பிட்டோம். என் மனைவி அடக்க மாட்டாது தேம்பினாள்.

எத்தகைய ஆபத்திலிருந்து ஆண்டவர் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்!

எல்லா டாக்டர்களும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழில் செய்கின்றனர் என்கின்ற எனது அபிப்ராயம் அன்று மாறியது.


அது மட்டுமல்ல எதுவுமே என் மனைவிக்குத் தெரியாது. அவள் பெண் என்பதால் அவளுக்கு அனுபவமும் முதிர்ச்சியும் போதாது என்கிற இன்னுமொரு அபிப்ராயமும் மாறியது. எனது மனைவி ஆம்புலன்சில் என்னை ஏற்றி அமர வைத்ததிலிருந்து கால் டாக்சி பிடித்து வீடு வந்து சேரும் வரை என்னை ஒரு குழந்தை போல் பாவித்து பாதுகாத்து எல்லாச் சேவைகளையும் செய்து, கவுன்டரில் பில்லை செக் செய்து, இன்சூரன்ஸ் பற்றி வினவி அனைத்து முடிவுகளையும் எடுத்து, படுக்கைக்கு அருகிலேயே அடைகாக்கும் கோழி போல தூங்காமல் எனது ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து… அடாடா…It is such a beautiful thing to think over it again and again. She was so over protective and a definite decision maker. I was happy to see that. That has brought me an unfathomable peace to know that she is definitely a good decision maker to depend on.

என் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தைச் சொன்னாலும் நம்புவாரில்லை. ஊழலுக்கு பேர் போன எனது அலுவலகத்தில் அதற்கு எதிரான என்னை ‘பிழைக்கத் தெரியாதவன், நாளைக்கு காசில்லாமல் பட்டாத்தான் தெரியும்’ என்று பேசித் திரிந்தவர்களிடையே தன்னைச் சேர்ந்தவரை கைவிடமாட்டார் கடவுள் என்பதற்கு சாட்சியாக இன்றளவும் நான் இருக்கிறேன்..”

 

நண்பரின் நீண்ட பேச்சு என் சிந்தனையை மட்டுமல்ல கடவுளின் அற்புதத்தையும் அற்புத மனிதர்களின் இருப்பையும் நினைத்து கண்களில் கண்ணீரையும் கசியவிட்டது.

 

இன்னமும் பேசுவோம்.

 

அன்பன்,

வேதாந்தி.

 

 

1 comment:

  1. உங்கள் நண்பருக்கான கண்ணீரோடு நாங்களும் இணைகிறோம். பல அ.ற்புதங்கள் பதிவு உட்பட.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...