Followers

Saturday, June 6, 2015

பாலுணர்வு கொள்தல் பாபமா..?


6.6.15

பாலுணர்வு கொள்தல் பாபமா..?

இதில் நான் ஆண்மீகம் பேச வில்லை.

நாம் பிள்ளைகளுக்கு பாலுணர்வைப் பற்றி என்ன போதிக்கிறோம் என்பதில் கவனம் காட்டவில்லையென்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தே இன்று பேசப்போகிறேன்.

இதில் ஒரு உண்மை நிகழ்வையும் சொல்லப் போகிறேன். வழக்கம் போலவே எனது நண்பர் கூறிய அவரது அனுபவக் கதைதான்.

பொதுவாகவே பிள்ளைகளுக்கு பாலுணர்வைப் பற்றிய அறிவை இயற்கையே கொடுத்து விடுகிறது. இதில் முக்கியமாக பங்கெடுத்துக் கொள்ளும் காரணிகள் அவர்களது சூழல், நண்பர்களது வட்டம், அனுபவம், காண்பது, கேட்பது மற்றும் வாசித்தறிவது ஆகியவைகள் பிள்ளைகளின் பாலுணர்வு பற்றிய அறிவிற்கு வழிகளாக அமைகின்றன.

இந்தக் காரணிகளும் செம்மையாக அதனதன் செயல்களை செய்து முடித்து பிள்ளைகளை பாலுறவுக்கு தயாராக்கி விடுகின்றன. இது இயற்கையில் நடப்பது. ஆனால் சில பெற்றொர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கிடைக்கும் இத்தகைய அறிவின் பெருமையை அறியாது பாலுணர்வைப் பற்றிய செய்திகளோ அல்லது அவை  பற்றிய கேள்விகளோ எழுவதே பாபம் என்று சொல்லி பிள்ளைகளை கட்டுக்குள் வைக்கிறார்கள்.

இத்தகைய கட்டுப்பாடு பிள்ளைகளை தங்களது adolescent stage ஐ பத்திரமாக கடத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற வாய்ப்பு உண்டு என்கின்ற விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இல்லை.

இப்படி இயற்கையான வழியில் வரும் பாலுணர்வு அறிவு கிடைக்காத பிள்ளைகள் தங்களது பெற்றோர்களின் அறிவுரைப்படியே நடந்து கொண்டு தங்களது பதின் வயதை பத்திரமாகக் கடந்தாலும் பின்னாளில் அவர்கள் திருமண வாழ்வை எதிர் கொள்ள முடியாமல் திணறும் அபாயம் உள்ளது.

பாலுறவுச் சிக்கலினால் நிறைய திருமணங்கள் முறிவில் முடிந்து விடுகின்றன.

பெண் தன் கணவனிடம் எதிர் பார்ப்பது கிடைக்காமல் போகும் போது, ‘அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் அம்மா கோண்டு..’ என மிக எளிதாக ஆணை விலக்கி விடுவாள். அதே போல் எதிர் பார்ப்புகளுடன் நெருங்கும் ஆணோ தனக்கு மாறாக ஒரு பயத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்து,’அவளை எனக்குப் பிடிக்கவில்லை அவளுக்கு ஏதோ மனக் கோளாறு’ எனக் கூறி அவளை விலக்கி விடுவான்.

இது மட்டுமல்ல. சில நேரங்களில் பாலுணர்வு தவறென போதிக்கும் பெற்றோர்களின் கட்டுக்குள் இருக்கும் பிள்ளைகள் தங்களின் உடலில் இயற்கையில் எழும் பாலுணர்வு அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் வெளிப்படுத்தவும் முடியாமல் ஒரு conflict உருவாகி sexual selection இல் பிறழ்வு செய்து விடுகின்றனர்.

இது போல் மற்ற பிற பாலுணர்வுப் பிறழ்வுகள் குறித்து இன்னமும் பல நாட்கள்  பேசலாம். ஆனால் ஒருவரது வாழ்வில் முறையாக, இயற்கையாக கிடைக்கக் கூடிய ஒரு பாலுணர்வுக் கல்வியை ஆற்றுப்படுத்தாமல் நாம் நமது சமுதாய சங்கடங்களைக் கருதி திசை திருப்பி விடுவதால் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதைக் குறித்து எனது நண்பர் என்னிடம் சொன்ன ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கு அவரது வாய் மொழியாகவே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“அது 1978ம் வருடம். திருச்சியில் ஒரு  பிரபல இஸ்லாமியக் கல்லூரியில் முதுகலை அறிவியல் படிப்பு விலங்கியல் துறையில் சேர்ந்திருந்தேன். அது படிப்பின் முதல் வருடம். அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தைக் கொண்டிருந்தனர். அதில் அதிகமாக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருந்தனர்.

முதல் செமஸ்டர் முடிந்தது. எங்களில் ஒருவர் எல்லா பேப்பர்களிலும் (O) out standing வாங்கியிருந்தார். அவர் கரூரைச் சேர்ந்தவர். அனைவரும் ஆச்சரியப் பட்டோம். அவர் மற்றையோர்களிடம் அதிகமாக பழகவில்லை. கல்லூரிப் பிள்ளைகளுக்கே உரிய குறும்புத்தனம், சேட்டை மற்றும் பெண் பிள்ளைகள் பால் ஈர்ப்பு ஆகியவை அவரிடம் காணப்படவில்லை. அவர் ஹாஸ்டலில் தங்கி யிருந்தார். அங்கும் யாருடனும் பேசுவதில்லை. கல்லூரி அல்லாத விடுமுறை நாட்களில் அங்கிருந்த University study centre library க்கு சென்று (இப்போது அதுதான் பாரதி தாசன் பல்கலைக் கழகம்) படிக்க ஆரம்பித்து விடுவார். அவரை அங்குதான் அதிகமாக பார்க்க முடியும்.

மற்றவர்கள் எல்லோரும் குழுவாக சேர்ந்து கொண்டு திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரியை (அப்போது  மலைக் கோட்டையிலிருந்த Holy Cross) வலம் வருவோம். சிலருக்கு பெண் நண்பர்களும் கிடைத்தனர். இப்படி எல்லோரும் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்தோம்.

அடுத்த செமஸ்டர் தேர்வில் கரூரைச் சேர்ந்த நண்பர் தனது Grade இல் இருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் மற்றையோர் எப்போதும் போலவே இருந்தனர். கரூர் நண்பருக்கு நண்பர்களே இல்லாததால் அவருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் வகுப்பில் மிகவும் சோர்ந்தபடியே காணப்பட்டார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் நண்பர் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அவரைப் பற்றி வினவினர். அவர் விடுதியிலும் காணவில்லை. ஆனால் விடுதியில் அவரது உடமைகள் அப்படியே இருந்தது. எனவே நாங்களாகவே அவர் பெற்றோரைக் காண சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம் என முடிவு செய்தோம்.

ஒரு வாரமாயிற்று. ஒரு ஆசிரியர் சந்தேகம் கொண்டு அவரது பெற்றோரை தொடர்பு கொண்டபோதுதான் அவர் அங்குமில்லை எனத் தெரிந்தது. பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு கல்லூரிக்கு வந்தனர். அவரை சமதானம் செய்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி செய்தனர் ஆசிரியர்கள்.

மூண்று மாதங்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரது தாயாருக்கோ பித்தே பிடித்து விட்டது. தந்தை கலங்கிப்போனார்.

அய்ந்தாம் மாத இறுதியில் அவரது  இருப்பிடம் பற்றி காவல் துறையினர் கண்டறிந்தனர்.

முகமெல்லாம் அடையாளம் தெரியாது தாடி மீசையோடு உடல் மெலிந்து வெடவெடவென விரைத்து நின்ற அழுக்குத் துணிகளோடு சிதம்பரம் நடராசர் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நண்பரை காவல் துறையினர் மீட்டு வந்தனர்.

அவரைப் பார்க்கும் போதே வயிற்றைப் பிசைந்தது. அவரை பெயர் சொல்லி அழைத்தவர்களை வெகுநேரம் கழித்தே தலை நிமிர்ந்து நோக்கிவிட்டு தலை குனிந்து கொள்வார். யாருடனும் பேசவில்லை.

அவரது தாயார், அவரைக் கட்டியணைத்து “ராசா…ராசா..” எனக் கதறியழுது அழைத்துச் சென்றது எங்களை கண் கலங்க வைத்தது.

பின்னரே அவர் எப்படிக் கிடைத்தார், ஏன் சென்றார் என்பது குறித்து மற்றவர்களிடம் விசாரித்தோம். யாருக்கும் ஒன்றும் தகவல் தெரியவில்லை. ஆனால் காவல் துறையினர், நண்பரது விடுதி அறையை சோதனையிட்டபோது கிடைத்த நண்பரது உடமைகளில் ஒரு டைரி கிடைத்ததாகவும் அதில் என்னவெல்லாமோ எழுதியிருந்தார் என்றும் கேள்விப்பட்டோம்.

பிறகு நண்பர்களை வைத்து காவல் துறையினரிடம் விசாரித்தபோதுதான் தகவல் கிடைத்தது.

நண்பர் university library க்கு சென்று படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சில பெண்களை பார்த்திருக்கிறார். அப்போதெல்லாம் அவருக்கு அவருடைய வயதுக்கு உரித்தான உடலியல் எழுச்சியும் கிளர்ச்சியும் நடந்திருக்கிறது. ஆனால் அதை நார்மலான ஒன்றாகக் கருதாமல் குற்ற உணர்வால் பீடிக்கப் பட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் விலங்கியல் மாணவர். ஆனாலும் அவரது வீட்டிலோ அல்லது அவரது வட்டத்திலோ சொல்லிவைத்திருந்த sex is a taboo என்கின்ற ஒரு கட்டுப்பாடு அவரை conflict க்கு ஆளாக்கியிருக்கிறது.

அதற்கப்புறம் விடுதியில் இரவில் தூக்கத்தில் அவருக்கு நடந்த மிக இயற்கையான விந்து வெளியான நிகழ்வுகள் அவரை மிகுந்த குழப்பத்திற்குள்ளாக்கி கடுமையான guilt complex க்கு தள்ளப்பட்டு விடுதியை விட்டு வெளியேறி கோவில் வாசலில் தஞ்சமடைந்திருக்கிறார். குற்ற உணர்வால் பீடிக்கப் பட்டதனால் வீட்டிற்கோ அல்லது வேறெங்கோ செல்லாமல் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட நாங்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். பாலுணர்வுகளைப்பற்றி சரியான புரிதல் இல்லாததாலும் தவறான கோட்பாடுகளாலும் அவரது வாழ்வே சிதைந்து விட்டது.

அதற்குப் பின்னர் அவரைப்பற்றி தகவல் தெரியவில்லை. நாங்கள் படிப்பை முடித்து வெளி வந்து விட்டோம்.”

நண்பர் சொன்ன செய்தி பாலுணர்வின் புரிதலில் உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.

பிள்ளைகளுக்கு முக்கியமாக பாலுணர்வு குறித்து சரியான புரிதலை உண்டாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பாலுணர்வு தவறானதென்றோ அல்லது அது அசிங்கமானதென்றோ சொல்லி வைக்கக் கூடாது. இல்லையெனில் இது போன்ற கடுமையான குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி இயல்பான பாலுறவை அனுபவிக்க முடியாமலோ அல்லது இல்லற வாழ்வையே வெறுத்து ஒதுக்கும்படிக்கோ ஒரு extreme mentality க்கு தள்ளப் படுவார்கள்.

மீண்டும் பேசுவோம்.
அன்பன்,

வேதாந்தி.

 
 

5 comments:

  1. #அது 1978ம் வருடம்.#
    நீங்களே சொல்லி விட்டீர்கள் 1978 என்று ...இப்போ ,நமக்கு சொல்லித் தருவார்கள் நம்ம பசங்க :)

    ReplyDelete
  2. 1980க்கு முன்பெல்லாம் ஒரு பெண்ணை ஒரு ஆணோ அல்லது ஒரு ஆணை ஒரு பெண்ணோ சந்தித்து சாதாரணமாக படிப்பு சம்பந்தமாகப் பேசினாலேகூட, ஏதோ கொலைக்குற்றம் செய்ததுபோலவே சமூகமும் பெற்றோரும் கண்டித்து வந்தனர்.

    இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள். நல்லதும் கெட்டதும் மலிந்து போய் உள்ளன. இருப்பினும் அவரவர்களின் போக்கினை கண்காணித்து யோசித்து முடிவெடுக்க வேண்டிய நல்லதொரு ..... பதிவுதான், இது.

    ReplyDelete
  3. கவனமாக இருக்க வேண்டிய காலம் - பெற்றோர்களுக்கு + கண்காணிப்போடு...

    ReplyDelete
  4. இன்று ஊடகங்கள் எல்லாவற்றையும் கற்றுத்தந்து விடுகின்றன.இருப்பினும் அடிப்படைப் பாலுணர்வுக் கல்வி தேவையா இல்லையா என்ற கேள்வி என்றும் நிற்கிறது

    ReplyDelete
  5. //எக்காரணம் கொண்டும் பாலுணர்வு தவறானதென்றோ அல்லது அது அசிங்கமானதென்றோ சொல்லி வைக்கக் கூடாது. இல்லையெனில் இது போன்ற கடுமையான குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி இயல்பான பாலுறவை அனுபவிக்க முடியாமலோ அல்லது இல்லற வாழ்வையே வெறுத்து ஒதுக்கும்படிக்கோ ஒரு extreme mentality க்கு தள்ளப் படுவார்கள்.//
    குழந்தைகளின் வளர்ப்பு, கண்காணிப்பு, பெற்றோர்களின் பங்களிப்பு போன்ற பல கூறுகளை உள்ளடக்கிய பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...