Followers

Friday, June 3, 2011

நம் பிறப்பிலே பயனுண்டா?

3.6.11
நம் பிறப்பிலே பயனுண்டா?





(இது ஒரு அலசல். மற்றும் இதில் சொல்லியிருப்பவைகள் தற்போதுள்ள கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் ஆகிய எவைகளையும் சார்ந்தோ எதிர்த்தோ சொல்லப் பட்டவைகளல்ல.)

இந்தக் கேள்வி பலரும் சொல்வது போல நாம் பிறருக்கு பயன்பட வாழ வேண்டும் என்ற சமூகவியலுக்கு பொருந்திவரும் கோட்பாட்டினை ஒத்து கேட்கப்பட்ட கேள்வியல்ல . மாறாக நம் பிறப்பு ‘ நமக்கு’ பயனளிக்கிறதா அல்லது இந்தப் பிறப்பாலே ‘நாம்’ பயனுறுகிறோமா என்று உள்நோக்கிக் கேட்கப்பட்ட ஒரு ஆன்மீக வினாவாகும்.

இந்த ‘நாம்’ என்பதும் நம்மைக் குறித்த புற அடையாளங்களையோ அல்லது இந்தப் பூவுலகில் நமது நிலைவடிவைக் குறித்தோ சொல்லப்பட்ட ஒன்றல்ல. மாறாக அதற்கும் மேலே, நமக்கு உள்ளே இருக்கும் ஒன்றைப் பற்றிச் சொன்னதாகும்.

இந்த நான் என்பது ஒரு திரித்துவம் போல உடல், மனம் மற்றும் ஆன்மாவைக் கொண்டதென்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  உடலைப் பற்றி எல்லோரும் அலசி ஆராய்ந்து அதனை மேம்படுத்தி நல் வாழ்வுக்கு வழிகோலும் படிக்கு பலரும் பல வகையில் எழுதியிருக்கின்றனர். மனம் குறித்தும் பல மனவியல் வல்லுனர்கள் பல வகையிலும் எழுதி நமது நல்வாழ்வுக்கு மனதின் மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தி யிருக்கின்றனர். இந்த ஆன்மாவைக் குறித்த வெளிப்பாடுதான் மிகுந்த வகைப்பட்டுக் கிடக்கின்றது.

ஆன்மாவைக் குறித்துப் பேசுவது பெரும்பாலும் ஆன்மீக வாதிகளே. இந்த ஆன்மீக வாதிகள் தாங்கள் மேற்கொண்டுள்ள மதத்தின் போதனைகளின் அடிப்படையில்தான் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

பொதுவாகவே என்னைப் பொருத்த மட்டில் மனிதர்களுக்கிடையே பிளவுகளையும்,  பிரிவுகளையும் உண்டாக்கும்படியான அனைத்துக்  கொள்கைகளும், சக்திகளும் வன்முறையை வளர்க்கும் ஒரு தீய நோக்கை மட்டுமே உட்கொண்டுள்ளவைகளாக கருதப்பட வேண்டிய ஒன்றாகும்.  இந்த ஆன்மா என்பது மேற்சொன்ன ஆன்மீக வாதிகளால் விளக்கப் படுவதாலேயே இது விலக்கப் பட வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.

ஆனால் இந்த ஆன்மா என்பது ஒரு மனிதனை மேம்படுத்தக் கூடியதொன்றாகும். ஆன்மீக வாதிகளால் கையாளப் படுவதாலேயே  மேம்பட்ட இந்த ஆன்மாவைப் பற்றிய அறிவு புறக்கணிப்பிற்குள்ளாவது மனிதனுக்கு ஒரு பெரு நட்டம்.  இதுவோடல்லாது இந்த ஆன்மீக வாதிகள் இந்த ஆன்மாவைப்பற்றிய பொருளின்மேல் வைக்கும் பற்றைவிட தான் மேற்கொள்ளும் மதம் மற்றும் கடவுளரது மேல் பற்றுக் கொள்வதால் இவர்களது விளக்கம் அவர்களது பார்வைக்கேற்றவாறு திரிக்கப் படுகிறது என்றே எண்ணுகிறேன்.



எனவே இந்த மதச்சார்பற்ற மற்றும் கடவுளரின் வகை சார்பற்ற கோணத்தின் இந்த ஆன்மாவை அலசுவதால் நமக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தை மேற்கொண்டே இந்தப் பேச்சு.

மேற்சொன்னவைகளை வைத்துக் கொண்டு நான் கடவுள் மறுப்புக் கொள்கையான நாத்திகத்தை வைத்து இந்த ஆன்மாவை விளக்க முற்படுகிறேன் என்று எண்ணக் கூடாது. மாறாக நான் எடுத்துக் கொள்ளப்போவது ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் என்கிற ஏக பிதா தத்துவத்தை. என்னைப் பொருத்த மட்டில் இந்த ஏக பிதா தத்துவமே குருடர்கள்  யானையைப் பார்த்த கதையாய் பல கடவுள்களாகவும், பல மதங்களாகவும் பிரிந்து கிடக்கிறதென எண்ணுகிறேன்.

யானை இருப்பது உண்மை. ஆனால் நமக்குள் இருக்கும் இந்த பார்வை வேறுபாடுகள் அல்லது பார்வை முரண்கள் இந்த யானையையே மறுக்கச் செய்யுமளவுக்கு நாத்திகத்தை ஊக்கப் படுத்துகிறது என்பதுதான் எனது கருத்து. இதைப் பற்றி மேலும் பேசுவது இன்றைய நமது பேச்சை திசை திருப்பிவிடும் என்பதால் இதைப் பற்றி மற்றுமொருமுறை பேசுவோம்.

நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது நமது பிறப்பால் பயனுண்டா? என்பது குறித்து. நான் முன் சொன்னவைகளுக்கே வருகிறேன். உடல் , மனம் மற்றும் ஆன்மா.  Body, Mind and Soul.  இந்த மூன்றிலும் அழியக் கூடியது உடல் மற்றும் அதைச் சார்ந்த மனம் ஆகிய இரண்டுதான். ஆனாலும் அழியாத ஆன்மாவுக்கு அழியக்கூடிய இந்த உடல் மற்றும் அதைச்சார்ந்த மனம் ஆகிய  இரண்டும் இப் பூவுலகில் ஆதாரமாக  இருக்கின்றன.

இது குறித்து விளங்காத சிலவும் இருக்கின்றன.




உடல் அழியும் போது அதனுடன் அருவமான மனமும் தொலைகிறது. ஆனால் இந்த பூத உடல் ஒரு மறுசுழற்சியாகி மறுபடியும் மற்றொரு பூத உடலுக்கு ஆதாரமாகிறது. இது, நமது உடல் கார்பன் மற்றும் நைட்ரஜன் ஆகியவைகளை உள்ளடக்கிய ஒன்று எனும் காரணத்தாலும் மறுபடியும் மக்கிய இந்த கார்பன் நைட்ரஜன் ஆகியவைகளை உயிரிகள் தனக்குள் எடுத்துக் கொண்டு வளர்ந்து, வாழ்ந்து இனப்பெருக்கம் செய்வதாலும் இந்த மறுசுழற்சிக் கருத்து அர்த்தமுள்ளதாகிறது.

மனமானது இந்த உடலை ஆதாரமாகக் கொண்டு எழுவதால் ஒரு virtual thing போல இருந்தும், மறைந்தும் போகிறது.

சரி. அப்படியானால் இந்த ஆன்மா? அதுவும் ஒரு virtual thing ஆ? இங்குதான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. மனதைப் போல ஆன்மாவும் ஒரு virtual thing  - மாயப் பொருள் - என்றால் இது ஒரு ஆன்மா மறுப்புக் கருத்தாகிறது. ஆன்மா மறுப்புக் கருத்தை ஏற்றுக் கொள்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையைச் சார்ந்த நிலையை எடுத்துக் கொள்கிறார்.  இது சற்று யோசிக்க வேண்டியுள்ளதாகிறது.

கடவுள் மறுப்புக் கொள்கை சமுதாயத்தில் பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக எழுந்த ஒன்று எனும் கோணத்தில் பார்த்தால் ஆரோக்கியமானதொன்றுதான். ஆனால் இது கடவுளையே மறுக்கும் பட்சத்தில் இந்தக் கொள்கை நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக உள்ள பொளதீக நிலைகளைக் குறித்த விளக்கத்தை ஒரு அளவிற்கு மேல் தரத் தவறி விடுகிறது.  இதனால் இந்தக் கடவுள் மறுப்புக் கொள்கை நமது தேடலை பூர்த்தி செய்கிறதில்லை. எனவெ இதை ஏற்றுக் கொள்வது  இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய நமது பார்வையை விரிவு படுத்தாது.

ஆக இந்த ஆன்மா ஒரு மாயப் பொருளல்ல என்பதையும் கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாலேயே சில கருத்துக்கள் புரிபடலாம் என்பதாலும் இவை இரண்டையும் ஏற்றுக் கொண்டு பிறப்பின் பயனைப் பற்றி மேலே பேசுவோம்.

எல்லா கடவுள் கொள்கைகளும் இந்த உலகின் அனுபவங்கள் நம்மை மேம்படுத்தி நம் ஆன்மாவை பேரொளியாகிய இறவனிடம் சேர்ப்பிக்கின்றது என்றே கருத்தினையே மையமாகக் கொண்டுள்ளன.

இது குறித்தே இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


1 comment:

  1. ///எல்லா கடவுள் கொள்கைகளும் இந்த உலகின் அனுபவங்கள் நம்மை மேம்படுத்தி நம் ஆன்மாவை பேரொளியாகிய இறவனிடம் சேர்ப்பிக்கின்றது என்றே கருத்தினையே மையமாகக் கொண்டுள்ளன.///

    அது சரிதான்.இதுதான் சரியான இந்திய, இந்து, கீழை நாடுகளின் பார்வை.
    ஆப்பிரஹாமிக் மதங்களும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டால் அப்புறம் மதச் சண்டையே இல்லை.நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...