Followers

Wednesday, June 15, 2011

மக்களாட்சியில் நாம் மன்னரைத் தேர்ந்தெடுக்கிறோமா?

15.6.11

மக்களாட்சியில் நாம் மன்னரைத் தேர்ந்தெடுக்கிறோமா?



மன்னர் கொடுங்கோலாட்சி செய்யும்போது அவரைக் கேள்வி கேட்க முடியாது என்பதாலும், சில சமயங்களில் அது மன்னரைத் தவிர மற்றவரது வாழ்வின் நலனில்  மனம் கொள்வதில்லை என்பதாலும் மன்னராட்சியை வெறுத்த மக்களுக்கு தற்போதுள்ள சனநாயகம் ஒரு வரப்பிரசாதமாகத் தெரிந்தது. இந்த சனநாயகம் மக்களை மக்களே ஆளும்படிக்கு இருக்கிறதென்பதால் இதனை மக்களாட்சி என்றும் சொல்லி வந்தனர்.  ஆனால் தற்போதைய நிலைமை இதனை கேள்விக்குறியாக்கி நம்மை கவலைக்குள்ளாக்குகிறது.

மக்களாகிய நாம் நம்மை ஆள நம்மைத் தொலைவு படுத்தாத மக்களைத் தேர்ந்தெடுக்கிறோமா அல்லது யாருமே கேள்வி கேட்க முடியாத சுயநலம் மிகுந்த மன்னரைத் தேர்ந்தெடுக்கிறோமா?

நான் அரசியலில் நாட்டமில்லாதவன். ஆனால் தற்போதைய அரசியலின் போக்கு கவலையையும் அச்சத்தையும் பெருக்குகிறது. ஒரு சாமானியனின் உரிமைகளையும் பாதுகாப்பையும் பறிகொடுக்கும் நிலை உண்டாகுமோ என்ற பதைப்பு ஏற்படுகிறது.  இது நமது மாநில அளவிலும் மற்றும் தேசீய அளவிலும் பொருந்தும்.



இங்கே அய்யாவின் தவறைச் சுட்டிக் காட்டினால் ‘அம்மா ஒழுக்கமா?’ என்கிறார். அம்மாவின் பிழை குறித்துக் கேட்டால் ‘அய்யா பிழையற்றவரா?’ என்கிறார். மாற்றே இல்லை என்பதால் பொதுசனமும் போக்கற்றுக் கிடக்கிறது. இரு சாரரும், தன்னைச் சார்ந்தவர்களும் தன் கட்சியைச் சார்ந்தவர்களும் வளம் பெறவே இந்த சன நாயகம் என்றும் இதனை மாறி மாறி அனுபவிக்கவே தாம் இருப்பதாகவும், பொது சனம் தேர்ந்தெடுக்கவே அன்றி கேள்வி கேட்க இல்லையெனவும் உறுதிபட நம்புகின்றனர்.

அது சரிதான். மக்கள் தங்கள் பலமறியாத  வெறும் பட்டத்து யானைதானே. மாலை போட்டு மன்னரைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவரைச் சுமக்க வேண்டியது மட்டுமே அதன் பொறுப்பு. அதைத் தவிற வேறெதையும் நினைப்பது ராஜ  துரோகம் அல்லவா?



இத்தனைக்கும் மேலே எக்காரணம் கொண்டும் மக்கள் சிந்தித்து விடக்கூடாதெனஅவர்களை   இன வெறி, மத வெறி மற்றும் மொழி வெறியில் ஆழ்த்தி மக்களை மீளொன்னா போதைக்குள்ளாக்கி வைத்திருப்பதொன்றே தம்மையும் தமது அரசியல் வாழ்வையும் காக்கும் மந்திரம் என்பதையும் தெளிவுபட அறிந்துள்ளனர் இந்த அரசியல் வித்தகர்கள்.

இனம், மதம், மொழி இதெல்லாவற்றையும் விட ஒழுக்கம் மேம்பட்டதல்லவா? ஒழுக்கம் ஒன்றே மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வல்லது என்பதை சொல்லியா தெரிய வேண்டும். தன்னை நம்பிக்கையுடன் அரியணை  ஏற்றிய மக்களுக்கு துரோகம் செய்வது ஒழுக்கக் கேடல்லவா. பொதுச்சொத்தை பேராசையுடன் கொள்ளையடிப்பது இழுக்கல்லவா? மனிதனாக இருக்கும் தகுதியை முற்றிலும் இழந்த பின் ஒருவன் மொழி பற்றியோ, இனம் பற்றியோ அல்லது மதம் பற்றியோ பேசி என்ன பயன்?



இங்கு இப்படியென்றால் தேசீய அளவில் மிகப்பெரிய மாயாஜாலம் நடக்கிறது. வெளிப்படையாகவே சொல்கின்றனர் தேர்ந்தெடுத்தவர்களை எதுவும் கட்டுப்படுத்தாது என்று.  தேர்ந்தெடுத்தவர்களை தேர்ந்தெடுப்பவர்களே கட்டுப்படுத்தவேண்டுமென்றாலும் அய்ந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியது கட்டாயமென்றும் அதுவரை அவர்கள் செயல் குறித்து வாய் திறக்க யாருக்கும் அருகதை கிடையாதென்றும் சொல்கின்றனர்.  இதைச் சொல்லும் கால கட்டத்தைப் பாருங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுகொண்டிருப்பவர்கள் மத்தியில் மிகப்பெரும் கொள்ளையர்கள் இருப்பது வெளியான பிறகும், அந்தக் கொள்ளையர்களின் கொள்ளை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பெரும் அலசல் நடந்து கொண்டிருக்கும் போதும் மற்றும் சிலர் இந்தக் கொள்ளையின் காரணமாக தில்லி திகார் சிறையிலிருக்கும் போதும் சொல்கின்றனர், அவர்களை - தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களை - தேர்ந்தெடுத்த மக்களே கேள்வி கேட்கக் கூடாதென்கின்றனர். 

இதை விடக் கொடுமை ஊழல்  குறித்த குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையே ஏழு வருடங்கள் தானாம். ஊழல் செய்து சேர்த்த பணத்தை பறிமுதல் செய்ய வழியும் இல்லையாம். ஒரு சாமான்யன் கடின உழைப்பிலும் கூட ஏழு வருடங்களில் லட்சங்களின் மதிப்பில் அதிகம் சம்பாதிக்க முடியாது. ஆனால் ஊழல் புரிவதிலோ கோடிகளில் அதுவும் 300 லிருந்து 600 கோடிகள் குறைந்த பட்ச கொள்ளை.  இந்த வழியை சிறந்ததென தற்போதைய வழிப்பறிக் கொள்ளையர்கள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தால் - ஆரம்பித்தால் என்ன.. ஆரம்பித்தே விட்டார்கள் - சாமன்யனின் கதி என்ன? சாமான்யன் இந்த organised crime ஆல் தன் உரிமைகளையும் உடமைகளையும் பறி போவதைக் கண்டு கை கட்டி வாய் மூடி மௌனியாய் இருப்பதைத் தவிர வேறேதும் வழியில்லையா?



இந்தியாவின் அத்துனை கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து அவர்களது உரிமைகளை மீட்டுத்தர சாத்வீக முறையில் போராடிய  மகாத்மாவைப் பார்த்து நம்மை ஆண்ட வெள்ளையர் கூட இத்துனை புத்திசாலித்தனமாக கேட்கவில்லை - நீர் என்ன மக்களின் பிரதிநிதியா, என்று. ஆனால் இந்த சனநாயக நாட்டில் நம்பிக்கையோடு நம்மை ஆள நாம் தேர்ந்தெடுத்தவர்கள் நம்மைப்பார்த்து, நமது உணர்வுகளை புரிந்து கொண்டு நமது உரிமைகளும் உடமைகளும் பறிபோவதைக் கண்டு பதைத்து குரல் கொடுப்போரைப் பார்த்து, கேட்கின்றனர் , ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எம்மைக் கேள்விகேட்க நீவிர் யார்?’ என்று.



அதை விடக் கொடுமை சுயம்புவாய் தம்மை எதிர்த்துக் கிளம்பும் இந்த சக்தியினை வேரறுக்க சதிகள் வேறு மனம் கூசாமல் செய்கின்றனர்.  தம்மைக் கேள்வி கேட்போர் மத வாதிகள் என்கின்றனர். மக்களது அங்கீகாரம் பெற்றவர்கள் அல்ல என்கின்றனர். மற்றும் பொய்ப் புரளிகளைக் கிளப்பி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசிக்கின்றனர். இன்னமும்  ஏதேதோ சொல்கின்றனரே அன்றி தம்மிடம் உள்ள குறைகளைத் தீர்க்க ஏதும் செய்வாரில்லை. இப்படிப் பிரித்தாளும் சூழ்ச்சியை நம்மை ஆண்ட வெள்ளையர்கள் கூட இத்துனை சாதுர்யமாய்ச் செய்ததில்லை.

இந்த மண்ணிற்கே உரித்தான சாத்வீக அனுகுமுறையில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த மக்களை மழுங்கடிக்கப் பட்டவர்கள் என தவறாக எடை போடலாமா?



அய்யா, எனக்கு அரசியல் வேண்டாம். நான் ஒரு சாமான்யன்.  உழைத்துச் சம்பாதித்து சேமிக்க நினைக்கும் ஒரு நடுத்தரக் குடும்பவாசி. நான் உழைத்துச் சேர்க்கும் பணத்திற்கு நேர்மையாய் வரி கட்டுபவன். வரி கட்ட தாமதமானால் அதற்கு வட்டியும் கட்டுபவன்.  அரசிடம் இப்படிச் சேரும் நிதியை திறம்பட ஆளவும், நான் வாழும் சமுதாய மேம்பாட்டிற்கென செலவுசெய்யவும் -  நிதி நிர்வாகம் மற்றும் பணி நிர்வாகம்  திறனே செய்ய - சிலரைத் தேர்ந்தெடுத்தேன். இப்படித் தேர்ந்தெடுத்தபின் கண்ணெதிரே என் திரவியம் கொள்ளை போவதைப் பார்த்த பின்னும் செயலற்றுக் கிடப்பதுதான் எனக்கு விதிக்கப் பட்டதா?



இந்த மக்களாட்சியில் நானும் என்னைப் போன்ற மக்களும் தங்களை ஆள தேர்ந்தெடுப்பது மக்களோடு மக்களாக இருக்கும் ஒரு மனிதனையா அல்லது மக்களை அடிமைகளாய் அடக்கி மக்களது உழைப்பில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளப்படுத்திக் கொள்ளும் ஒரு சுயநலம் மிக்க மன்னனையா? தயை செய்து யாரேனும் தெளிவு படுத்துங்களேன்…

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.



4 comments:

  1. அருமையான, அற்புதமான கட்டுரை, ஒவ்வொரு வரியையும் நூறு சதம் ஆமோதிக்கிறேன். மன்னராட்சியில், மன்னன் எல்லா சுக போகங்களையும் அனுபவிக்கிறான், மக்கள் அடக்கி ஆளப் படுகிறார்கள், சர்வாதிகாரம் நடக்கிறது, எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது, மனம் போன போக்கில் ஆட்சி செய்தாலும் மக்களால் ஒன்றும் செய்ய முடியாது, எல்லாவற்றுக்கும் மேல் அப்பனுக்கப்புரம் மகனே ஆட்சிக்கு வருவான் என்றெல்லாம் சொல்லித்தான் மக்களாட்சியை ஆதரிக்கிறோம். ஆனால் தமிழகத்தில் கரிகால் சோழன், பொற்கை பாண்டியன், மனு நீதி சோழன் போன்றவர்கள் ஆட்சி நீதி தவறாத ஆட்சியாக இருந்தது, மக்கள் நலனே மன்னனின் நோக்கமாக இருந்தது. ஆனால், தமிழகத்தை எடுத்துக் கொண்டால் காமராஜருக்கப்புரம் யார் நல்லாட்சி செய்தார்கள்? அதுவும், போன ஆட்சி மாதிரி கேவலஆட்சி இந்தியாவில் எங்கேயும், இதுவரை நடந்திராத ஒன்றல்லவா? லட்சம் கோடிகளில் தனி நபர் கொள்ளையடிக்கிறான், பிள்ளை குட்டி பேர்களில் கணக்கிலடங்கா சொத்து, மாவட்டத்துக்கு மாவட்டம் அங்குள்ள கட்சி பிரதிநிதிகளால் மக்களுக்கு சித்திரவதை எதையும் நம்மால் கேள்வி கேட்க முடியாத நிலை, மீறினால் குண்டர்களை வைத்து கதையை முடித்து விடும் அவலம். அப்பனுக்கப்புரம், மகனை அல்லவா கட்சித் தலைவனாக தயார் படுத்தினான்? இதில் எங்கே மக்களாட்சி இருந்தது?

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    உண்மையிலேயே மிகவும் நொந்து போய் எழுதிய ஒன்று இது..

    விடிவுக்குக் காத்திருப்போம்.

    ReplyDelete
  3. //மீண்டும் பேசுவோம்.//

    waiting.....

    ReplyDelete
  4. @ ஷர்புதீன்..

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...