Followers

Saturday, August 1, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி V


1.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி V



 
 
முந்தைய பகுதிகளுக்கு:

1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II


3. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

4. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV


நண்பர் தொடர்ந்தார்.

“கட்சிக்காரன் எதற்கும் பயப்படாமல் காவல் ஆய்வாளரின் உதவியோடு எங்கள் குடியிருப்பின் பொது இடத்தை ஆக்கிரமித்து 4 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி தன் வீட்டை ஒட்டியுள்ள பொது இடத்தை வளைத்துக் கொண்டான். அந்தப் பகுதி 70 அடி சாலையை ஒட்டி இருந்தது. அவனது நோக்கம் இந்தக் காலியிடத்தை ஆக்கிரமித்து தனது வீட்டின் பக்கச் சுவரை இடித்துவிட்டு தன் வீட்டை வியாபாரத்திற்கு உகந்த  ஒரு இடமாக தயார் செய்வதுதான் என எங்களுக்கு புரிந்து போனது.

காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தபோது அந்த ஆய்வாளர், ‘அது அவருடைய இடம்னு சொல்றாருங்க.. நான் என்ன பண்ண முடியும்?’ என்றார்.

‘சார், ஆக்கிரமிப்புக்கு உள்ளான இடம் அடுக்கு மாடி குடியிருப்பின் பொது இடம். அதை நிரூபிக்க எங்களிடம் குடியிருப்பின் அனுமதி பெற்ற வரைபடத்தின் நகல் இருக்கிறது’.

‘அது அவருடை இடம்னு நிரூபிக்க அவர் கிட்டேயும் டாகுமெண்ட் இருக்குன்னு சொல்ராருங்க’.

‘அப்ப அதை எங்க கிட்ட காட்டச் சொல்லுங்க..’ என்று நாங்கள் சொன்ன உடனே இடை மறித்தான் கட்சிக்காரன். ‘அதெல்லாம் உங்க கிட்ட காட்டனும்னு அவசியம் இல்லை’

‘சார் நாங்க ஸ்டேடஸ் கோ உத்தரவு கோர்ட்டிலிருந்து வாங்கி இருக்கும் போது அங்கே எந்த வேலையும் செய்யக் கூடாதுங்க..’

‘இங்க பாருங்க. இது சிவில் மேட்டர்.  இதுக்கு மேல ஏதாவது வேணும்னா நீங்க கோர்ட்டுல போய்த்தான் தீத்துக்கனும். அத விட்டு அவர் கட்டும் போது அவருக்கு இடஞ்சல் கொடுத்தா அப்புறம் நான் உங்களத்தான் உள்ள வெக்க வேண்டிவரும்..’ என்று ஆய்வாளர் கடு கடுத்தார்.

வேறு வழியின்றி அமைதி காத்தோம். அவன் ஆக்கிரமிப்பை கட்டி முடித்தான். அனைவரும் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம் என்றனர். நான் சற்று பொறுமையாய் இருக்கச் சொன்னேன். வழக்காடிகளும் பெரும் களவாணிகள்தான். தெரியாமல் போய் மட்டிக் கொண்டால் விடுபடுவது சிக்கல். அதுமட்டுமல்ல வழக்குத் தொடுத்தால் குறைந்தது 15 வருடங்கள் இழுக்கும். அதுவுமன்றி விதிமுறைகள் தெளிவாயிருக்கும்போது வழக்கு தேவையில்லை. வழக்கிலே வென்றாலும் அரசு அதிகாரிகள்தான் அந்த விதி முறைகளை செயல் படுத்த வேண்டி வரும் என்பதால் வேறு வழியிருக்கிறதா என யோசிக்காமல் இதில் இறங்க எனக்கு மனமில்லை.

மேலும் காவல் நிலையத்தில் ‘என்னிடம் டாகுமெண்ட் இருக்கிறது’ என்று கட்சிக்காரன் அழுத்தமாய்ச் சொன்னது இடித்தது. அவன் எதைச் சொல்லி யிருப்பான்?

எங்காவது கோட்டை விட்டுவிட்டோமோ என்று யோசனையில் இருந்தேன்.

இந்தப் பிரச்சினை ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் முடிந்து போனது.

மாநகராட்சிக்கு இதைப் பற்றி நான் அனுப்பிய புகார் கடிதங்கள் எல்லாம் குப்பைக்குப் போயின. குப்பைக்கு போகதவைகளை கட்சிக்காரன் தனது ஆளை வைத்து கோப்பிலிருந்து உருவிவிட்டான். இது தெரிந்தவுடன் நான் புகார் மனுக்களை மற்ற அதிகாரிகளுக்கும் (மாவட்ட ஆட்சியர், Secretary, Municipal administration, Tamilnadu Government ) அனுப்பினேன். அவர்கள் தங்களது அலுவலகத்திலிருந்து மாநகராட்சிக்கு அதை அனுப்பிவைத்து எனக்கு ஒரு தகவல் கடிதமும் கொடுத்தனர்.

குற்றப் புகார்களை இதைப்போலவே காவல் துறை ஆய்வாளருக்கு அனுப்பி அதன் நகலை காவல் துறை ஆணையருக்கும் அனுப்பி வைத்தேன். இதைப்போலவே பதினெட்டு மாதங்கள் புகார்களை தொடர்ந்து அனுப்பியபின் அதன் தொடர்ச்சியாக இந்தப் புகார்களின் தேதிகளை குறிப்பிட்டு எந்தத் துறையும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று புகார் எழுதி முதலமைச்சரின் தனிப்பிரிவில் சென்று கொடுத்தோம். இதைப்போல மறுபடி ஆறு மாதங்கள் கழிந்தன.  எந்தப் பிடியும் கிடைக்க வில்லை.

இந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது.

தமிழகத்தையே புரட்டிப் போட்ட டிராபிக் ராமசாமியின் வழக்கு சென்னையை கலக்கியது. சென்னையில் உள்ள அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்த விளக்கத்தை சென்னை மாநகராட்சி ஆணையரைக் கேட்டு சென்னை உயர் நீதி மண்றம் உத்தரவிட்டிருந்தது.

அது மட்டுமல்ல. அதுவரை சற்று இணக்கமாக இருந்த கட்டிட அனுமதி பெறும் முறை மாற்றப்பட்டு 2000 க்குப் பிறகு கட்டப்பட்ட அனுமதி மீறலான கட்டிடங்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசின் முடிவாகியது. அத்தகைய அனுமதி மீறலின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நீதி மண்றங்கள் தடை விதிக்கக் கூடாது எனவும் சட்டம் நிறைவேறியது.

இது மிகப் பெரிய வரப் பிரசாதம் தான். இந்த அருமையான சந்தர்ப்பத்தை சரியாக உபயோகிக்கும் வழியை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு அதிசயம் நடந்தது.


கட்சிக்காரன் தனது வீட்டின் பக்கச் சுவர்களை இடித்தான். தனது வீட்டின் உட்புற தடுப்புச் சுவர்களையும் இடித்தான். தனது வீட்டின் உட் பகுதியை மொத்தமாக இடித்து ஒரே ஹாலாக மாற்றி வீட்டின் பக்கவாட்டில் தனது ஆக்கிரமிப்பில் இருந்த பொது இடத்துடன் ஒன்று சேர்த்தான்.

வீட்டை இடிக்கும் போது அவனை இடிக்க விடாமல் தடுத்தோம். கலவரமாகும் சூழ்நிலையில் குடியிருப்பு வாசிகளை நான் தடுத்தேன். அதற்குப் பின் காவல் நிலையம் சென்று எங்களது சொத்துக்களையும் உடமைகளையும் கட்சிக்காரன் சேதப்படுத்துவதாகவும் எங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் இந்த நிலையில் பாதுகாப்பு இல்லை எனவும் புகார் கொடுத்தோம். புகாருடன் கட்சிக்காரன் கட்டிடத்தை இடித்த காட்சிகளை ஒரு புகைப்படக்காரரை வைத்து தேதி நேரத்துடன் கூடிய புகைப்படங்களாக எடுத்து அவைகளையும் புகாருடன் இணைத்தோம்.

இந்தப் புகாரை காவல் துறை ஆணையரிடமும் அளித்தோம்.

இதே புகாரை சற்று மாற்றி, எங்களது குடியிருப்பில் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் பொது இடத்தில் சுவரை எழுப்பி பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடல்லாமல் மாநகராட்சி அனுமதியின்றி தனது குடியிருப்பின் பக்கவாட்டுச் சுவர்களை இடித்து அதனை ஒரு வியாபார ஸ்தலமாக மாற்றும் முயற்சி நடக்கிறது என்றும், மேலும் எங்களது மூண்றாவது தளத்திலும் இதே ஆசாமி தனது குடியிருப்பை அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்கிறான் எனவும் மனு தயாரித்து புகைப்படங்களை இணைத்து அப்போதைய மாநகராட்சி ஆணையர் திரு. ராஜேஷ் லாகானியிடம் நேரில் சென்று விளக்கி மனுவைக் கொடுத்தோம்.

அதோடு நில்லாமல் எங்கள் குடியிருப்பில் உள்ள கட்டிட அத்து மீறல்களையும் அதுகுறித்து மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் எழுதி புகைப்படங்களை இணைத்து Secretary, Municipal Administration, Government of Tamilnadu வுக்கு ஒரு புகார் மனு கொடுத்தோம்.

அதே புகார் மனுவை சற்று மாற்றி அரசு இயந்திரம் எந்த வகையிலும் இயங்காதவாறு அதிகாரிகள் தங்களுடைய நலனுக்காக அத்து மீறல்களைக் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சம்பந்தப் பட்ட கட்சிக்காரானால் எங்களது குடியிருப்பில் உள்ள அனைவரது உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறதெனவும் இந்த நிலை அதிகாரிகளின் மெத்தனத்தால் எல்லை மீறிப்போவதாகவும் இரண்டு புகார்கள் தயாரித்து ஒரு புகாரை மாநகராட்சி ஆணையருக்கும் மற்றொரு புகாரை காவல் துறை ஆணையருக்கும் அனுப்பும்படிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவிலும் சேர்த்தோம்.

இந்தப் புகார்களை நான் கொடுத்த பின்பு ஒரு வாரம் கழித்து எங்கள் பகுதி மாநகராட்சி உதவிப் பொறியாளரை அனுகி புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காவிடில் நான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் எனவும் தெளிவாய்ச் சொல்லிவிட்டு வந்தேன்.

வந்து இரண்டு நாட்களில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கோரி ஒரு கடிதம் மாநகராட்சி துணை ஆணையருக்கு (அவர்தான் மாநகராட்சியின் Public Information Officer ) அனுப்பினேன்.”

நண்பர் பேசுவதை சற்று நிறுத்தினார்.

நண்பர், தகவலறியும் உரிமைச் சட்டத்தையும் பயன் படுத்தியிருக்கிறார் என்ற தகவல் எனக்கு சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.

எப்படி பயன்படுத்தியிருப்பார் என்றறியும் ஆர்வமும் மிகுந்தது.

நண்பர் தொடர்ந்தது அடுத்த பதிவில்.

இதைத் தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VI

அன்பன்,

வேதாந்தி.

 

 


4 comments:

  1. தகவலறியும் உரிமைச் சட்டத்தை எப்படி பயன்படுத்தியிருப்பார் என்றறியும் ஆர்வமும் மிகுந்தது.,உங்களுக்கு மட்டுமா ,எனக்கும்தான் :)

    ReplyDelete
  2. உங்களின் அனுபவங்கள் ஏனையோர்க்குப் பாடம்.

    சுவை படச் சொல்கிறீர்கள்.

    காத்திருக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  3. என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு...!

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. ரொம்ப பொறுமையா செயல்பட்டு வென்றிருக்கிறார் போல!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...