Followers

Tuesday, August 4, 2015

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VI


4.8.15

தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VI



முந்தைய பகுதிகளுக்கு:

1.  தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி I

2. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி II


3. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி III

4. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி IV

5. தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி V

நண்பர் தொடர்ந்தார்.

“அப்போதைய மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியத்தையும் பார்த்து மனு கொடுத்தோம். கட்சிக்காரன் எங்களை குடியிருப்பை விட்டு விரட்ட இத்துனை அட்டூழியங்களைச் செய்கிறான் என்று எடுத்தும் சொன்னோம். ‘ஆ! அப்படியா?’ என்று வாயைப் பிளந்தார். வேறொன்றும் நடக்கவில்லை. கட்சியின் வெப் சைட்டிலும் புகார்கள் கொடுத்தோம். ம்..கூம். ஒரு முன்னேற்றமும் காணவில்லை. அதன் பிறகு அதிகாரிகளைப் பார்த்தோம்.

மாநகராட்சி அதிகாரிகளை மனு கொடுத்து பார்த்துவிட்டு வந்து இரண்டு நாட்களில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கோரி ஒரு கடிதம் மாநகராட்சி துணை ஆணையருக்கு அனுப்பினேன்.

அதில் நான் கோரியிருந்த தகவல்களின் சாரம்சம்:

மாநகராட்சிக்குள் உள்ள எங்களது குடியிருப்பில் நாங்கள் குறிப்பிட்ட தேதிகளில் கொடுத்துள்ள புகார்களில் சுட்டிக் காட்டப்பட்ட கட்டிட அத்து மீறல்கள் யாரால் ஆய்வு செய்யப்பட்டது? எப்போது அந்த ஆய்வு நடந்தது? அந்த ஆய்வில் என்னென்ன கட்டிட அத்து மீறல்கள் எங்களது குடியிருப்பில் கண்டறியப்பட்டது? அந்த அறிக்கையின் நகல் யாருக்கு அனுப்பப் பட்டது? அந்த அத்து மீறல்கள் குறித்த ஆய்வின் பெயரில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது? அத்து மீறல்கள் குறித்து இதுவரை ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நடவடிக்கை எடுக்க கால வரை முறை உள்ளதா? நாங்கள் சென்னை மாநகராட்சியின் மீது தொடுத்த வழக்குக்கு (வழக்கு எண் குறிப்பிட்டு) Counter affidavit நீதி மண்றத்தில் சமர்ப்பித்தாகிவிட்டதா? எங்கள் குடியிருப்பிலுள்ள அத்து மீறல்கள் குறித்த வழக்கு குறித்து தற்போதைய உயர் நீதிமண்ற ஆணையின்படி (டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் வந்த ஆணை) கோரப்பட்ட தகவலில் சேர்க்கப்பட்டுள்ளதா? ஆம் எனில் அதன் நகல். இல்லையெனில் அதற்கான காரணம். என பல்வேறு தகவல்களைக் கோரி மனு கொடுத்தேன்.

இந்தக் கடிதம் மாநகராட்சி துணை ஆணையரிடமிருந்து பரிந்துரைசெய்து அனுப்பப்பட்டு தன் கையில் கிடைத்த உடனே மாநகராட்சி உதவிப் பொறியாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

‘சார் என்ன சார் இப்படி எழுதியிருக்கீங்க? நான் தான் பார்க்கறேன்னு சொன்னேனே சார்..’

‘அய்யா, நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னவோ குப்பை அள்ளுவதைத் தவிர வேறு பொறுப்பான பணி உங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதுபோல நடந்துகொண்டு இருக்கின்றீர். இது என் வாழ்நாள் உழைப்பில் நான் வாங்கிய சொத்து. அநியாயமாக ஆக்கிரமிப்பில் இருக்கிறது.’

‘சார் அவன் பண்ணா அவன் மேல கேஸ் போடுங்க சார். என்னை ஏன் சார் இழுக்கறீங்க..?’

‘எல்லாத்தையும் நான் கேஸ் போட்டே தீத்துக்கனும்னா உங்க வேலை என்னங்க? அதைத்தான் நான் உங்க கிட்ட கேட்டிருக்கேன். தயவுசெஞ்சு இப்ப நீங்க சொன்னதை எழுதிக் கொடுத்திட்டீங்கன்னா ரொம்ப சௌகரியமாக இருக்கும். உங்க வசதி எப்படியோ அப்படி செய்ங்க..’ என்றேன்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.

அடுத்த திங்கள் கிழமை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளருடன் எங்கள் குடியிருப்பின் ஆய்வுக்கு வந்தார்.

அத்து மீறி பொது இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பைக் காட்டினேன். விதிமுறைப்படி விடப்பட்ட பொது இடத்தை இப்படி ஆக்கிரமித்துக் கொண்டால் குடியிருப்பிற்கு கொடுத்த மாநகராட்சியின் அனுமதியே செல்லாததாகிவிடுமல்லவா எனக் கேள்வி கேட்டேன்.

கட்சிக்காரன் தனது குடியிருப்பின் பக்கச் சுவர்களையும் வீட்டினுள் தடுப்புச் சுவர்களையும் இடித்திருப்பதை காட்டினேன். இது நடந்த உடனே புகார் கொடுத்ததையும் நினைவு படுத்தினேன்.

அதற்குப்பின் அங்கு கட்சிக்காரன் தனது மூண்றாவது மாடி வீட்டின் பராமரிப்புக்காக வைத்திருந்த சலவைக் கற்களை காட்டி ‘இதோ இது மூண்றாவது தளத்தின் தரையில் பதிக்க வைக்கப் பட்டிருக்கிறது. மூண்றாவது மாடியில் அனுமதி பெறாமல் ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் குடியிருப்பை விரிவாக்குவதற்காக இவைகள் இங்கு இருக்கின்றன’ என்றேன்.

எதுவும் பேசாமல் ஆய்வு செய்து மூண்றாவது மாடியில் இருந்த அனுமதி பெறாத கட்டிடத்தின் அளவு மற்றும் தரை தளத்தில் கட்சிக்காரன் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுவர், கூடவே கட்சிக்காரன் இடித்துவிட்டிருந்த தனது குடியிருப்பின் நிலை ஆகியவைகளை குறித்துக் கொண்டனர்.

அடுத்த வாரம் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆய்வுக்கு வந்தார்.

என்னிடம் தயங்கியபடியே பேசினார்.

‘இந்த violation 35 வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்கிறதே…’ என்றார்.

‘இல்லை சார். கட்டிடம்தான் 35 வருடங்கள் பழயது ஆனால் இந்த violation இப்போதுதான் நடந்திருக்கிறது. நீங்களே கண்கூடாக பார்க்கிறீர்களே..’

‘அது சரி மேலுள்ள கட்டிடம்?’

‘அதுவும்தான் சார். கொஞ்சம் கொஞ்சமாக encroachment நடந்துட்டிருக்கு. இப்ப கூட மூண்றாவது தளத்தை விரிவாக்கம்தான் செய்கிறார்கள். அது மட்டுமல்ல. இத்தனை வேலையும் நான் நீதிமண்றம் சென்று நிலையாணை (Status Quo) உத்தரவு பெற்றபிறகும் அதை மதிக்காமல் கட்டிட வேலை செய்கிறார்கள். உச்ச நீதி மண்றத்திலேயே அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செவ்வனே தயங்காமல் செய்தால் நீதி மண்றங்களுக்கு வழக்கே வராது என்றுள்ளனர். நீங்கள் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள் எனத் தெரியவில்லை,’ என்றேன்.

‘நிலையாணை உத்தரவா? எங்கே காட்டுங்கள்’ என்றவரிடம் நான் நீதிமண்ற உத்தரவைக் காட்டி விளக்கினேன். அதைப் பார்த்தவர் உற்சாகமாக தலையாட்டினார்.


அடுத்த திங்கட் கிழமை. உதவிப் பொறியாளரும் உதவி செயற்பொறியாளரும் அரசு வண்டியில் வந்திறங்கினர். கூடவே ஒரு JCB இயந்திரம் மற்றும் இரண்டு சரக்குந்துகளுடன் வந்த மாநகராட்சி ஆட்கள் மடமட வென இறங்கி கட்சிக்காரன் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த சுவற்றை இடித்துத் தள்ளினார்கள். அதுமட்டுமல்ல அவன் தனது குடியிருப்பை இடித்ததில் பொது இடத்தில் சேர்ந்திருந்த இடிபாடுகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றனர்.

கட்சிக்காரன் பதறினான். கத்தினான். யார் யாரையோ தொலைபேசியில் அழைத்தான். அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் அசர வில்லை. விடாமல் அடித்த தனது கைப்பேசியை எடுக்கவில்லை. சற்று நேரம் கழித்து தனது கைப்பேசியை அணைத்து விட்டார். ஆனாலும் அவர் முகத்தில் தெரிந்த கலவரத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.


கட்சிக்காரன் முகம் சிவக்க வெறிபிடித்தவன் போலிருந்தான். உடல் உப்பிப் பருத்த தேரைபோலிருந்தான். He was like a puffed up toad. அவன் கண் முன்பாகவே அவனது சூழ்ச்சியின் நோக்கம் பொடியாகி குப்பை வண்டியில் ஏறுவதைக் கண்டு பித்துப் பிடித்து உறுமிக்கொண்டே முன்னும் பின்னும் நடந்தான்.”

நண்பர் சொன்னதைக் கேட்டு, எப்படி இது நடந்தது என நான் ஆச்சரியப்பட்டேன்.

நண்பர் தொடர்ந்ததை அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதைத் தொடர: தி. மு. கா. னிடமிருந்து சொத்தை மீட்ட உண்மைக் கதை – பகுதி VII

அன்பன்,

வேதாந்தி.

4 comments:

  1. Really agonising to read, can understand how agonised the experience of your friend will be.

    Following.....

    ReplyDelete
  2. ஆவல் கூடிக் கொண்டே போகிறது...!

    ReplyDelete
  3. எல்லாப் பகுதிகளையும் படித்து விட்டேன்.ஒரு புதினம் படிப்பது போல் இருக்கிறது!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...