Followers

Thursday, July 28, 2011

அரிச்சந்திர மகராசனின் கதையும் விவிலியத்தின் யோபுவின் கதையும் சொல்வதென்ன?

28.7.11

அரிச்சந்திர மகராசனின் கதையும் விவிலியத்தின் யோபுவின் கதையும் சொல்வதென்ன?



தலைப்பைப் பார்க்கும் போது ஏதோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலிருக்கிறதா..? இல்லை, இது அப்படியல்ல.

எனக்கென்னவோ எல்லா மதங்களும் மற்றும் அவைகளால்  போற்றப்படும் எல்லா நூல்களும் மற்றும் ஏனைய அதன் மற்ற கோட்பாடுகளும் ஒரு தனி மனிதனின் சுய ஒழுக்கத்திற்கும்,  சமூகத்துடன் அவன் கொண்டுள்ள சுமுகமான இணக்கத்திற்கும் எதிரானாதாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

அரிச்சந்திர மகாராசனின் கதை இந்துக்களின் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யோபுவின் கதை கிருத்துவர்களின் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.



The tomb of Job, outside Salalah, Omen  (Job in Islam)




இதே யோபுவை இஸ்லாமியர்கள் இறைத்தூதராக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இவர் அய்யூப் எனப்படுகிறார்.

அரிச்சந்திர மகராசனின் கதையில், அயோத்தியை ஆண்ட அரிச்சந்திரன்,  தன் வாழ்வில் தனக்கு வரும் எத்துனை இடர்களிலும் மற்றும் இழப்பிலும் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் இருக்கவும் எந்தச் சூழலிலும் பொய்யுரையாதிருக்கவும் மிகவும் உறுதி கொண்டு தனக்கு வரும் இடர்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றியும் இறுதியில்  அவனது  சுய ஒழுக்க உறுதியினை மெச்சிய இறைவன் , அவன்  இழந்தவை  அனைத்தையும்    அவனுக்குத் திரும்ப அளித்து அவனை மேம்படுத்துகிறார் என்பதைப் பற்றியும் சொல்கிறது.




இதில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால் பாடுகளுக்கு உள்ளாக்கப் பட்ட அரிச்சந்திரன்  அயோத்தி மன்னன். விசுவாமித்திரருக்கு தான் வாக்களித்த காரணத்தால் அவருக்கு தனது அரியணையையும் தான் ஆண்டுவந்த நாட்டையும் தானமாக கொடுத்து விட்டான். நாட்டை தானமாக கொடுத்துவிட்ட காரணத்தால் அயோத்தியை விட்டு வெளியேறி வாரணாசிக்கு செல்கிறான். ஆனாலும் விசுவாமித்திரர் விட்ட பாடில்லை.  கொடுத்த தானத்தை ஏற்றுக் கொள்ள தனக்கு தட்சிணை கொடுத்தாக வேண்டுமென்கிறார்.  எல்லாவற்றையும் இழந்த அரிச்சந்திரன் தன் மனைவி தாராமதியையும் தன் மகன் ரோகிதாசனையும் ஒரு பிராமணனுக்கு அடிமைகளாக விற்றும் தட்சிணைப் பணம் போதாத காரணத்தால் தன்னை ஒரு புலையனிடம் வெட்டியான் பணி செய்ய அடிமையாக ஒப்படைத்து கிடைக்கும் பணத்தை  விசுவாமித்திரரிடம் தட்சிணைப் பணமாகக் கொடுத்து தனது வாக்கை காப்பாற்றுகிறான்.


செங்கோல் ஏந்தி நாட்டை ஆண்டவன், கையில் சுடுகோலை  ஏந்தி பிணத்தைச் சுடுகிறான். சூரிய வம்சத்தில் பிறந்தவன் புலையனுக்கு அடிமையாக சுடுகாட்டில் பணி செய்கிறான். இது அவனது வாக்குத் தவறாமைக்குக் கிடைத்த பரிசு. அப்படியும் அவன் தனது நிலையை நொந்தானில்லை. நெறி பிறழ்ந்தானில்லை.

அடிமைகளாக விற்கப்பட்ட அவனது மனைவி தாராமதியும் மகன் ரோகிதாசனும்  இதைப்போன்றே கொடும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.  மகன் ரோகிதாசன் பூசைக்கு பூக்கொய்யச் சென்றபோது அரவம் தீண்டு மாண்டு போகிறான். கலங்கிப்போன தாராமதி மகனை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று கதறி அழுகிறாள். அவளது புடவையில் பாதி மகனின் பிணத்தின் மேல் கிடக்க, அரிச்சந்திரனோ இறந்து கிடப்பது தன் மகன் என்றறியாது பிணத்தை எரிக்க வரி கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லையெனக் கூறிய தாராமதியிடம் அவள் அணிந்திருக்கும் மாங்கல்யத்தை விற்று வரியை செலுத்தச் சொல்கிறான். தன் கணவனைத் தவிர வேறு யாருக்குமே தென்படாத தன் மாங்கல்யத்தைப் பற்றி பேசியதுமே அவன்தான் தனது கணவன் அரிச்சந்திரன் என அறிய வருகிறாள் தாராமதி.


வாரணாசியில் உள்ள அரிச்சந்திர காட்


பின்னரே இறந்தது தன் குழந்தை ரோகிதாசன் எனத் தெரிந்து கொண்ட அரிச்சந்திரன் கலங்கிப் போனான்.  ஆயினும் தனது கடமை தவறாமல் வரிப்பணத்தைச் செலுத்தும் படிக்கு தனது மணைவியின் ஒத்துழைப்பையும் பெற்ற அரிச்சந்திரன் வரிப்பணத்திற்கு ஈடாக தன் மகனின் பிணத்திற்கு போர்த்திய பாதி புடவை நீங்கலாக தன் மணைவியின் மேல் மீதமிருந்த பாதி புடவையை வரியாக செலுத்தி விடலாம் எனக் கூறுகிறான். கணவன் சொல் தட்டாத தாராமதியும் அதற்கு சம்மதிக்கிறான். கடமையைக் காப்பாற்ற கட்டிய கணவனே தன் மணைவியின் மானம் காத்து நிற்கின்ற புடவையை அவிழ்க்கவும் துணிந்த போதுதான் கடவுளர்கள் அவன் முன் தோன்றி அவனைத் தடுத்து அவனது கடமை தவறாமையையும் வாக்குப் பிறழாமையையும் மெச்சி அவன் இழந்த அனைத்தையும் அவனுக்களித்து அவனது மகனையும் உயிர்ப்பித்துக் கொடுத்தனர் என்பது கதை.


இந்த வாக்குத் தவறாமையும் நெறி பிறழாமையும் அரசனுக்கு மட்டுமல்ல மற்றைய ஏனையோருக்கும் தேவை. இந்தக் கதை நிறைய மனிதர்களை மாற்றியிருக்கிறது. மகாத்மாவும் இந்த நாடகம் கண்டுதான் வாழ்வில் உறுதியான நெறி பிறழாக் கொள்கையை உடையவரானார்.


இதைப்போன்றதுதான் யோபுவின் கதையும்.


செல்வச் செழிப்பில் யோபு



மிகுந்த செல்வச் செழிப்பில் வாழும் யோபு இறையின் மேல் மிக்க நம்பிக்கையும் தனது வாழ் முறையில் இறை வழியினையும் கடைப்பிடித்து வருபவன்.  அவனது நெர்மையையும் உறுதியையும் பார்த்த சாத்தான் ,  யோபுவை ஆசீர்வதித்து பாதுகாப்பதனால்தான் யோபு இறையை நிந்தியாமலும், இறைவழி தவராமலும் இருப்பதாகச் சொன்னபோது  இறை யோபுவின் உண்மையான உறுதியைவெளிப்படுத்த வேண்டி சாத்தானுக்கு யோபுவை சோதனைக்குள்ளாக்க அனுமதித்தார்.



யோபு சாத்தானது விளையாட்டால் தனது அனைத்து செல்வங்களையும் இழந்தான் ஆனால் கடவுளை நிந்தித்தானில்லை. பின்னர் தன் குழந்தைகளையும் இழந்தான். மறுபடியும் கடவுளை நிந்தித்தானில்லை. இத்தனைக்குப் பிறகு சாத்தான் கடவுளிடம், “ யோபு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் உன்னைப் போற்றுகிறான். அவன் சுகவீனப்பட்டானானால் நிச்சயம் கடவுளைச் சபிப்பான்..” என்கிறான். கடவுளும், ‘சரி அவனது உயிருக்கு பங்கமின்றி எது வேண்டுமானாலும் செய்து கொள்” என்கிறார்.


கடவுளை நிந்திக்க யோபுவின் மனைவியே தூண்டுகிறாள்

இதற்குப் பின்னர் சாத்தான் யோபுவிற்கு மிகக் கடுமையான மற்றும் அருவருப்பான தோல் நோயைக் கொடுக்கிறான். யோபுவின் உடலில் தாங்கமுடியாத அரிப்பும், அவன் உடலைச் சொறிந்துகொள்ளும்போது அவனது உடலிலிருந்து கிளம்பும் குடலைப் புரட்டும் துர்நாற்றத்தையும் கண்டு அவனது மனைவி, “ இந்தப் பாடு படுதற்கு நீ கடவுளைச் சபித்துவிட்டு செத்துப் போகலாம் ‘ என்கிறாள். அப்போதும் யோபு கடவுளை நிந்திக்க மறுக்கிறான். இறுதியில் சாத்தான் தனது சவாலில் தோற்றுப்போனதை ஒத்துக் கொள்கிறான். கடவுள் யோபுவின் உறுதியை மெச்சி அவன் இழந்ததனைத்தையும் அவனுக்கு இரண்டு மடங்காக திருப்பி அளிக்கிறார்.


யோபு தான் இழந்ததை திரும்பப் பெறுகிறான்


மேற்சொன்னவைகள் ஒருவன் தனது சோதனைக் காலங்களில் நம்பிக்கை இழக்காமலும் தனது நேர்மையான கொள்கைகளிலிருந்தும் வழுவாது உறுதியாய் இருப்பானானால் அவன் இறுதியில் மோசம் போகாது நிறைந்து வாழ்வான் என்பது நிச்சயம் எனக் காட்டுகிறது.


இது கடவுளை நம்புபவர்க்கு. சரி. கடவுளை நம்பாதவர்க்கு?




கடவுளை நம்பாதோர் தனது வாழ்வின் வழிகாட்டியாக, ஒளிப்பாதையாக பகுத்தறிவை நம்புவர். பகுத்தறிவு என்பது லாப நட்டக் கணக்கு பார்க்கும் அறிவல்ல. நன்மை தீமைகளை கண்டறியும் அறிவு. இதைக் கொண்டவன் தனக்கு கிடைக்கும் நிலையில்லா லாபத்திற்காக நிலையான நன்மையை வாழ்வில் இழக்காது உறுதியாய் இருப்பானானால் அவனுக்கும் நிறைந்த வாழ்வென்பது நிச்சயமே..


நல்லவர் என்றும் கெடுவதில்லை. எனவே நாம் , நமது நற் கொள்கைகளை இந்த உலகத்தின்  நிலையில்லா லாபத்திற்காக பலியாக்காது உறுதியாய் வாழ்ந்து நிறைவான வாழ்வை அடைவோம்.   இதுவே நமக்கும் நம்மைச்சார்ந்த சமுதாயத்திற்கும் நிறைந்த பயனானது.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.




2 comments:

  1. // நமது நற் கொள்கைகளை இந்த உலகத்தின் நிலையில்லா லாபத்திற்காக பலியாக்காது உறுதியாய் வாழ்ந்து நிறைவான வாழ்வை அடைவோம்// True!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...