Followers

Wednesday, July 15, 2015

கொலைகளிலும் தற்கொலைகளிலும் கௌரவம்… - II


15.7.15
கொலைகளிலும் தற்கொலைகளிலும் கௌரவம்… - II
 

 

 
டீக்கடையில் எனக்கும் என் அண்டை வீட்டு நண்பருக்கும் பேச்சு தொடர்கிறது.
 “லவ் பண்ணா கட்டி வெச்சிற வேண்டியதுதானே..ஏன் பையன் வேற சாதியா?”
“இல்ல சார். ஒரே சாதிதான். பையனும் இவனைப்போலவே கட்டிட வேலை பார்க்கிறவன்தான்.”
“அப்புறமென்ன?”
“இவனுக்கு பையன் மேல நம்பிக்கை இல்லை. சொத்துக்காக பொண்ணை மடக்கிட்டான்னு பார்க்கறான். படிச்சிட்டிருந்த பொண்ணு மனசை கெடுத்துட்டான்னு கவலைப்படுறான். பொண்ணு B.Com படிச்சிட்டிருக்குது. இதுதான் செகண்ட் இயர். ம்ம்.. இனிமே எங்க காலேஜ் போகப் போவுது...”
“பொண்ணுண்ணு பொறந்தா கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே. அதுவும் சாதிப் பிரச்சனைவேற இல்லன்றீங்க..அப்புறம் ஏன் இப்படி?”
“தெரியலை சார். அவனுக்கு பெரிய பொண்ணுண்ணா உசுரு. ‘ என் கண்மணிய பெரிய படிப்பு படிக்க வெச்சு ஆபிசராக்கரேனா இல்லையா பாருடி’ ன்னு அவன் சம்சாரத்துக்கிட்ட சொல்லிட்டே இருப்பான். அந்தப் பொண்ணு என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பான் சார். இரண்டு நாள் முன்னாடி கூட சாதாரணமாத்தான் இருந்தான். என்னமோ திடீர்னு தூக்கு மாட்டிட்டான்”, என்றார்.
 
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இங்கு சாதி வரவில்லை. தகுதியும் வரவில்லை. பணமும் பெரிதாய் வந்ததாய்த் தெரியவில்லை. பெண்ணும் பையனை விரும்பி இருக்கிறாள். அப்புறம் எதுதான் இவரை தூக்கு வரை தள்ளியது?
இரண்டு நாள் கழித்து நான் நண்பருடன் மருத்துவமனைக்கு அவரை பார்க்கச் சென்றேன்.
படுக்கையில் இருந்தார். நண்பர் வாங்கிச் சென்ற பழங்களை அங்கிருந்த அவரது மனைவியிடம் கொடுத்துவிட்டு படுக்கையில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
“ஏய்யா.. நான் உனக்கு எத்தனை தரம் சொன்னேன். எதுன்னாலும் பாத்துக்கலாம், மனசை விட்டுடாதேன்னு. இப்படிப் பண்ணிட்டியே. ஏன்யா இப்படி பண்ணினே..? என்னம்மா ஆச்சு இவருக்கு.?” என்று அவரது மனைவியின் பக்கம் திரும்பியவர் சற்று கோபமாகவே கேட்டார்.
“இல்லை சாமி..ரெண்டு வாரமா பொண்ண தேடின போலீசு இவரு தூக்கு மாட்டுனதுக்கு முந்தின நாள்தான் அவங்க ரெண்டு பேரையும்  கண்டு பிடிச்சாங்க. அப்போ ஸ்டேசனுக்கு போய் வந்ததிலிருந்து பேயடிச்ச மாதிரியே இருந்தவரு சட்டுனு ராவு கழுத்தில மாட்டிட்டாரு..” என்ற அந்த அம்மையார் வாயைப் பொத்திக்கொண்டு விம்மினார்.
 
“என்னய்யா ஆச்சு ஸ்டேசன்ல? உன்னை ஏதும் கேட்டாங்களா? ஏன்ய சாகப்போன..”? என்று என் நண்பர் ஆறுதலாய் கேட்டதும் அதுவரை படுக்கையிலிருந்தபடியே மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்தவர் என் நண்பரின் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார்.
“சார். உங்களுக்குத் தெரியும். நான் என் பொண்ணுக்கு ஏதும் குறை வெச்சேனா? அவ படிச்சு ஆபீசராகட்டும்னு ஆசைப்பட்டது தப்பா? அவளை என் ஆத்தாளுக்கு மேல பாத்துட்டேனே..ஒருவார்த்தை கடுமையா பேசியிருப்பனா? ஒரு விரலை கோவமா அவளுக்கெதிரா நீட்டியிருப்பனா..?”
“அதான் ஊருக்கே தெரியுமே நீ உன் பொண்ணு மேல உசுரையே வெச்சிருக்கேன்னு. பொண்ணுன்னா ஒரு நாள் கல்யாணம் பண்ணிக் கொடுத்துதானய்யா ஆகனும். இப்ப என்ன நடந்து போச்சு..?”
 
“இல்ல சார். என் கண்ணுல வெச்சு பொத்திப் பொத்தி பாத்துட்ட என் கண்மணி, என் மகாராணி, போலீஸ்காரங்க, “ஏம்மா உனக்கு உன் அப்பன் வேணுமா இல்ல இந்தப் பையன் வேணுமா’ ன்னு கேட்டதுக்கு எனக்கு இந்தப் பையன்தான் வேணும்னு சொல்லிட்டா சார்.. இந்த அப்பன் வேணான்னுட்டா சார். என் ஆத்தாவே என்னை வேணாண்னதுக்கப்பறம் நான் உசிரோட இருந்து என்ன சார் பிரயோசனம்…”, என்று தன் இரு கைகளாலும் மடேர் மடேர் என்று தலையிலடித்துக்கொண்டு கதறினார்.
நான் விக்கித்து நின்றேன்.
இதுவும் ஒரு காதல் தானே. தங்க மீன்கள் படத்தில் இயக்குனர் ராம் ஓவியமாய் வரைந்து காட்டியிருப்பாரே.. பிள்ளையைப் பெற்ற எல்லா அப்பன்களுக்கும் இந்தக் காதல் தெரியுமே. ஒரு பெண்ணுக்கு முதல் காதலே தன் தகப்பனிடம்தான் என்று சொல்வார்களே..அது உண்மைதானே.
அத்தகைய புனிதமான காதலின் மறுப்பை – rejection of paternal love – எவர்தான் தாங்கிக்கொள்வர்.
காதலித்த பெண் காதலனை ஒதுக்கிவிட்டால் அதைப் பெரிய துரோகம் என்று சொல்லும் இந்தச் சமூகம், அவள் தகப்பனை ஒதுக்கி அவனது அன்பை மதியாது உதறிச்செல்லும் செயலை ஏன் கண்டிக்க மறுக்கிறது?.
 

பெற்றோர் காட்டிய அன்பை உணராதவர்கள் எந்த அன்பையும் உணரும் தகுதி இல்லாதவர்கள் என்றே நான் சொல்லுவேன். அன்பை முதலில் நாம் அடையாளம் காண்பதே பெற்றோரிடம்தானே?
முள்ளும் மலரும் படத்தின் உச்ச கட்டத்தில் தன் அண்ணனா? அல்லது தனது காதலனா என்று தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் ஒரு பெண் தனக்கு பெற்றோராகவும் சகோதரனாகவும் அன்பைப் பொழிந்த தன் அண்ணனை தேர்ந்தெடுத்துச் செல்வது எத்துனை உயர்ந்த பண்பு. அத்துனை உயர்ந்த பண்பைக் கொண்டவளுக்கு அவளது அண்ணன் அவளது காதலனையே பரிசாக கொடுப்பது அதனினும் உயர்ந்த காதலைக் காட்டுகிறதல்லவா?

திரைப்படங்களில் காதலை உயர்த்திக் காட்டிய ஒரு பிரபல திரைப்பட இயக்குனர், இந்தக் 'காதல்' என்ற சிக்கலிலிருந்து தன் மகளை மீட்டுத்தந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த உடனே தரையில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து, கை கூப்பி நன்றி சொல்லிக் கதறியதை நாடே அறியுமல்லவா? ஒரு தந்தையின் அன்பும் அவனது பெண்ணைப்பற்றிய அவனுடைய அக்கரையும் எதை விடவும் முன் நிற்கக் கூடியதல்லவா? அத்தகைய அன்பு ஒதுக்கப்படுதலை எவர்தான் நொறுங்கிப் போகாமல் தாங்கிக் கொள்வர்?

 இந்தக் கொலைகளிலும் தற்கொலைகளிலும் கௌரவத்தை விட ஒதுக்கப்பட்ட தனது அன்பே காரணமாக மிஞ்சுகிறது எனச் சொல்வேன்.
தற்கொலை, தன்மீது திரும்பிய வெறுப்பு. கொலை, பிறர் மீது திரும்பிய வெறுப்பு. அவ்வளவுதான்.
இதை கையிலகப்பட்ட களிமண்ணைப் போல பலர் அவரவர் வசதிக்கும் தேவைக்கும் தகுந்தார்ப்போல சுயநலம் கொண்டு வடிவமைத்து விளையாடுகின்றனர். இது விபரீத விளையாட்டல்லவா?
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.
 
 
 

7 comments:

  1. படார் படார் என்று அந்தப் பெண்ணை அறைய வேண்டும் போலுள்ளது... அந்த வயதில் வரும் ஒரு ஈர்ப்பு எந்தளவு மயக்குகிறது என்று வேதனையாகவும் உள்ளது...

    ReplyDelete
  2. //பெற்றோர் காட்டிய அன்பை உணராதவர்கள் எந்த அன்பையும் உணரும் தகுதி இல்லாதவர்கள் என்றே நான் சொல்லுவேன். //
    நூறு விழுக்காடு உண்மை!

    ReplyDelete
  3. பெற்றோர் காட்டிய அன்பை உணராதவர்கள் எந்த அன்பையும் உணரும் தகுதி இல்லாதவர்கள் என்றே நான் சொல்லுவேன். // உண்மையே.

    ஆனால் இந்த விவகாரத்தில், போலீசின் கேள்வி தவறு என்று தோன்றுகின்றது. உனக்கு யார் வேண்டும் என்று கேட்பதை விட, பெற்றோர், பெண் அந்தப் பையன் எல்லோரையும் வைத்துப் பேசுவது நன்றாக இருந்திருக்கும். அதைப் போலீசார் செய்ய மாட்டார்கள்தான். இங்கு சட்டம் என்பதற்கு மட்டும் தான் மனிதம் எனபதற்கு அப்பாற்பட்டு பார்க்கப்படுகின்றது. இவர்கள் பக்குவப்படவில்லை, மாறாக உணர்ச்சிகள் மேலெழும்பியதால்...இவ்விளைவு. அந்தப் பெண் ஓடிப் போயிருப்பதை விட அமைதியாக தன் நிலைப்பாட்டை பெற்றோர்களுக்குப் புரியவைத்து அவர்களிடம் தனது அன்பையும் செலுத்து, அதே சமயம் அந்தப் பையனையும் பக்குவப்படுத்தி, அந்தப் பையனும் பக்குவத்துடன், பெற்றோர் சம்மதம் இல்லாமல் நாம் மணம் புரிவது வேண்டாம் அவர்களிடம் நமது அன்பைப் புரிய வைப்போம் என்றும் சொல்லி இருக்கலாம். இல்லை ஒருவேளை அவர்களது காதல் உண்மையானது அல்ல, பருவக் காதல் என்று தெரிந்திருந்தால் அதை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துரைத்து....இப்படிப் பல பேசலாம்தான். ஆனால் உணர்வுகள் மேலிடும் போது இவை எல்லாம் பின் தள்ளப்படுகின்றது. கண்ணை (மூளை) மறைத்து விடுகின்றது....

    ReplyDelete
  4. கௌரவக் கொலைகளைப் பற்றியும், கௌரவத் தற்கொலைகள் பற்றியும் நம் சினிமாக்கள் தான் அவ்வப்போது சொல்லுகின்றனவே...பக்குவமான வாழ்க்கை அணுகுமுறையைக் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்குமோ...

    ReplyDelete
  5. ஒதுக்கப்பட்ட அன்பு என்கிற உங்களில் சொல்லாடலில் வெகுநேரம் நின்றிருந்தேன்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. ஹார்மோன்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள வயது. காவல் நிலையத்தில் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்ட எந்தத் தகப்பனால்தான் தாங்க முடியும்?

    ReplyDelete
  7. வணக்கம். மிக அவதானமாக பேச வேண்டிய விடயம். பெற்றோரின் பாசத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய அதே நேரம் தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பிள்ளைகளுக்கு உண்டு. மேலும் கண்மூடித்தனமான பாசமும் தவறல்லவா? ஓடிப் போவதை நான் ஆதரிப்பதில்லை. தன் காதலை பெற்றோரின் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும். அன்றேல் திருமணமாகாமலே வாழ வேண்டும். எந்தவொரு பெற்றோரும் பிள்ளைகளின் காதல் விவகாரத்தை சரிவரக் கையாளாததே இது போன்ற சம்பவங்களுக்கான முக்கிய காரணி.

    நமது வலைத்தளம் : சிகரம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...