Followers

Wednesday, October 13, 2010

காதலுணர்வு போற்றத் தகுந்ததா?

13.10.10
காதலுணர்வு போற்றத் தகுந்ததா?



அன்பின் மேம்பட்ட ஒரு பரிமாணமே காதலுணர்வு. அது மட்டுமல்ல இந்தக் காதலுணர்வு மனிதனுக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது. எதையுமே எடுத்துப் பழக்கப் பட்ட மனிதனை மற்றவருக்காக கொடுத்துப் பழக வைக்கிறது. இந்தக் காதலுணர்வால் சேரும்  எதிர் பாலினர் தங்கள் வாழ்வின் இறுதிவரை விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவருக்காகவே வாழ பழகிக் கொள்கின்றனர். காதலுணர்வு கொடுக்கத்தூண்டுமே ஒழிய எடுக்கத்தூண்டாது. இது சுயநலத்தின் மரணத்தில்தான் தொடங்குகிறது. 





இது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்குள்ளும் ஆண் பெண் உணர்வுகள் உண்டு. இந்த உணர்வுகளை ஒருவர் கொள்ளும் காதலுணர்வுதான் நம்மிலிருந்து மேலே கொண்டு வருகிறது. இந்த இரு உணர்வுகளையும் சரியாக உணரத்தெரியாத உயிர்  முழுமையடைவதில்லை.  இதை முழுதாக  உணர்ந்து பூரணமடையவே மறுபாலினராக  அந்த உயிர் மறு பிறப்பு எடுக்கிறது என்றும் சிலர் கூறுவர்.  காதலுணர்வு கொள்ளும் ஒரு ஆண் மண்டியிட்டு தன் காதலியிடம் தன் காதலை மென்மையாகச் சொல்லத் தெரிந்து கொள்கிறான்.  காதலுணர்வு கொண்ட ஒரு பெண் தன் காதலனை மேம்படுத்த அவனை ஆட்கொள்ளுகிறாள். இந்த  பெண்ணின் அதீத ஆளுமையும்  ஆணின் மனம் நிறைந்த அடிபணிதலும் காதலுணர்வுக்கே உரிய ஒரு சிறப்பல்லவா?

காதலுணர்வு கொண்ட  சுயநலத்தைக் கொன்ற  மனிதன்  பண்படும் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டான் என பொருள். இது அவனது வாழ்வின் ஒரு நல்ல ஆரம்பம். இந்தக் காதல் அவனது வாழ்வை செவ்வனே கடக்க அவனுக்கு ஒரு திசைகாட்டியாய் இருந்து அவனை, அவனது வாழ்வை மேம்படுத்தும். தன்னைப்போலவே தீராக் காதலுணர்வுடனுள்ள ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் இருவரும் கைகோர்த்து வாழ்க்கைப் பயணத்தினை தொடர்வது, தன் சந்ததிகளுக்கும் இந்தக் காதலுணர்வின் மேண்மை தெரிய தியாக உணர்வுடன் குடும்பத்தை நடத்திச் சென்று வாழ்ந்து இப்பிறவியைக் கடப்பது மிகுந்த நலமானதல்லவா?



இங்கு நான் குறித்த எதிர் பாலினரின் காதல் முக்கியமானது. ஏனெனில் இந்த இணைதான் குடும்ப வாழ்வில் இணைந்து அன்பெனும் தியாக வழியில் தன்சுயநலத்தைக் கொண்று பிறவிப் பயனை அடைவர்.  நாம் மற்றவரிடம் காட்டும் ‘அன்பு’ மேன்மையைக் கொடுத்தாலும் இத்தகையதொரு உயர்ந்த மேன்மையைத் தராது. காதல் வேறு காமம் வேறு. இது பற்றி இன்னொரு  சமயத்தில் பேசுவோம்.


சிலர் குடும்ப வாழ்வைத் துறந்து துறவி வாழ்வை மேற்கொள்ளுவர்.  காதலுணர்வுதான் ஒருவனை மேம்படுத்துமெனில் துறவு மேற்கொண்ட  இவர்களது வாழ்வு மேம்பட்டதில்லையா?


இது நல்ல கேள்வி தான். ஆனால் இந்தத் துறவிகள் இறைவனைக் காதலிக்கின்றனர்.



ராதையையும் கிருஷ்ணனையும் காதலர்களாக சித்தரித்தாலும் இதில் உள்ள உண்மை என்னவென்றால் ஆத்மா பரமாத்மாவை காதலுணர்வுடன் சுற்றிச் சுற்றி வருவதையே பூடகமாக சொல்கிறது. வள்ளலார் இறைவனை காதலனாகவும் தன்னை இறையின் காதலியாகவும் பாவித்து காதலுணர்வால் உருகி உருகி இறையோடு சேர்ந்து பேரின்பம் அடையும் நாளை எதிர்பார்த்து தன் நாட்களை  கடத்தினார். இதைப் போல எத்துனையோ  அடியார்கள் இறையை தன் காதலனாகவும், காதலியாகவும் எண்ணி எண்ணி காதலுணர்வுடன் தன் பிறவி மேம்பட வாழ்ந்திருக்கிறார்கள்.

நமது எதிர்பாலினரது காதலை விட மேற்சொன்ன இறைக் காதல் மிகுந்த மேன்மையுடையது. முன்னர் சொன்னது நமக்கு கொடுப்பது சிற்றின்பமென்றால் பின்னர் நமக்கு கொடுப்பது பேரின்பம். முன்னர் சொன்ன காதல் நம்மை மேம்படுத்தி வாழ்வில் இப்பிறவியைக் கடக்க உதவுமென்றால் பின்னர் சொன்னது நமக்கு பிறப்பறுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்க வல்லது. இன்னமும் சொல்லப்போனால் நம்மை தேவர்களாக்கி இறையுடன் சேர்க்க வல்லது.

எனவே நம்மை மேம்படுத்தும் காதலுணர்வை புரிந்து அதைக் காத்து வளர்ப்போம் வாழ்வை மேம்பட்ட உயிரிகளாய் கடப்போம்.

வாழ்வு மேம்பட இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

3 comments:

  1. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    ReplyDelete
  2. ANBE ANAITHIRKKUM AADHARAM. UNMAIYANA KAADHAL POTRUTHALUKKU URIYADHU. ADHUVE IRAI VALIPAADU.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...