Followers

Friday, October 29, 2010

வானமே எல்லை என்பது வாழ்வில் எத்துனை பொருந்தும்?

29.10.10
வானமே எல்லை என்பது வாழ்வில் எத்துனை பொருந்தும்?


வானமே எல்லை என்பது நமது முயற்சிகளை ஊக்குவிக்க சொல்லிவரும் ஒரு வழக்கு. இதனை நாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்றும்  நமது மேம்பட்ட வாழ்வுக்கு இது  எத்துனை பொருந்தும்  என்பதைப் பற்றியும் பேசுவோம்.


நமது முயற்சிகள் வழியாக நமது கனவுகள் மெய்ப்பட, மெய்ப்பட, நாம் கனவு காண்பதை நிறுத்தாமல் எதிர்பார்ப்புகளை விரிவாக்கி மேலும் மேலும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.  இது  நமது நாட்டிற்கே உரித்தான மெய்ஞானத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மேலை நாட்டினர்க்கே உரிய உலக இன்பங்களை சார்ந்த கலாச்சாரத்தைத் தழுவியதொன்றாகும்.


உலக மயமாக்கப் பட்ட பொருளாதாரச் சூழலில் மேற்சொன்ன வானமே எல்லை என்பது மிகப் பொருத்தமானதாகத் தோன்றினாலும் இந்த நிறுத்தா ஓட்டம் நிச்சயமாக ஒரு தவறுதலான இலக்கைக்  கொண்டுள்ளது எனச் சொல்லலாம். உண்மையில் சொல்லப் போனால் இது நமது பிறப்பின் மகத்துவத்தையும், மேன்மையையும் உணராமல் பிறப்பின் நோக்கினை உதாசீனப்படுத்தி நமது வாழ்வை எள்ளி நகையாடும் வகையில் வாழ்ந்து கழிக்க நம்மைத் தூண்டுகிறது.





‘வானமே எல்லை’ என்பது ‘நீ எத்துனை சாதித்தாலும், எத்துனை வளங்களைப் பெற்றிருந்தாலும்  நிறைவை அடைந்துவிடாமல் மீண்டும் மீண்டும் அவைகளை மேலும் பெருக்கிக் கொள்ளும் முயற்சியை கைவிடாதே. உனது  நிறைவுக்கும் ,  முயற்சிகளுக்கும்  வானம் மட்டுமே எல்லை’ என்று வலியுறுத்துவதைக் காணலாம்.


இது சரியானதொன்றாகுமா? இந்த முயற்சிகளில் நாம் பெறுகின்ற உலகியல் சார்ந்த பொருட்கள் / இன்பங்கள்  எத்துனை இருந்த போதிலும் அவைகளைக் கொண்டு முழுமையான திருப்தியடைந்து விடாதே என்று இது சொல்லும் போது இந்த சொல்வழக்கு ஊக்குவிக்கும் முயற்சிகளே கேலிக்குறியனவாக ஆகாதா?


முயற்சிகள் இல்லாத மனிதன் உயிரற்ற பிணத்திற்கு ஒப்பாவான் என்பது உண்மைதான்.  ஆனால் வெற்றி எல்லைகளைத் தொட்டும்  நமக்கு எக்காலத்தும் முழு நிறைவைக் கொண்டுவராத   முயற்சிகள் நம்மை வெற்று எந்திரன்களாக்கி  விடாதா?


வாழ்வும், வாழ்வதற்குப் பொருளும் , வாழ்வையே இன்பமாக்கி ரசனை மிகுந்து வாழ்வதும்  மிகவும்  இன்றியமையாதது. ஆனால் இதற்கு வானமே எல்லையாக வெற்று  ஓட்டங்களால் நாம் நம் வாழ்வை நிரப்பிக் கொள்வது தவறல்லவா?


கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,  ஒவ்வொரு நாளும் கடைத்தெருவிற்கு சென்று அங்கு விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும் பொருட்களை சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பி விடுவாராம்.  இப்படியே தினமும் நடந்துகொண்டிருக்கையில் ஒரு நாள் ஒரு கடைக்காரன் அவரை , ‘ அய்யா, நீங்கள் எதனையும் வாங்குவதில்லை ஆனால் தினமும் கடைக்கு வந்து பொருட்களை வெறுமனே பார்த்துவிட்டு மட்டும் செல்கிறீர்களே… ஏன்?’  என்றானாம். அதற்கு சாக்ரடீஸ், ‘ எவ்வளவு பொருட்கள் இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பதை அறியவே நான் தினமும் கடைத்தெருவிற்கு வருகிறேன்’. என்றாராம்.




நிறைவுறாது, நம்மை மீண்டும் மீண்டும் ஓட விரட்டிக் கொண்டிருக்கும் இந்த வானமே எல்லை என்கின்ற  சித்தாந்தம் தப்பாது நமது முயற்சிகளை பெருக்கும்.  ஆனால் இந்த எண்ணமானது  நாம் எத்துனை முயன்றபோதும் நம்மை நிறைவடையச் செய்யாது விரட்டிக் கொண்டேயிருக்கும் பிசாசைப் போன்றது. இந்த எண்ணம் கொண்டோர் மனம், வின் வெளியில் கதிரவனை விடப் பெரிதான வின் மீன்களையே விழுங்கியும் நிறைவு கொள்ளாது விழிப்புடனும் ஆவேசத்துடனும் இருக்கும் கருப்புக் குழிகளைப்  (Black Hole) போன்றது.  மிகவும் பரிதாபத்திற்குரியது.  நிறைவடையாத மனம் இறையைத் தேடாது. இந்த இறையைத் தேடா வாழ்வு ஒரு நோக்கம் பிறழ்ந்த வாழ்வு.  பிறப்பின் பொருளை வீணடித்துவிடும்.



போதுமென்ற எண்ணம் கொண்டவரது மனமும் வாழ்க்கையும் எப்போதும் நிறைந்திருக்கிற எடுக்க எடுக்க குறையாது அன்னமிடும் அட்சய பாத்திரம் போன்றது. இந்த போதுமென்ற எண்ணம் தன்னையும் நிறைவு படுத்தி மகிழ்வித்து தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மந்திரம். நிறைவடைந்த மனம் இறையைத் தேடும். பிறப்பின் பொருளுணர்ந்து பிறவிப் பெருங்கடல் நீந்தி  இறையடி சேரும்.


வானமே எல்லை என்றல்லாமல் அறத்தின் எல்லைக்குள் நமது  விருப்பங்களையும் தேவைகளையும் வைத்து அதற்கான முயற்சிகளையும்  நேர்வழியில் கொண்டு இலக்கு மாறாது, உயிரின் நோக்கும் வாழ்வின் நோக்கும் பிறழாது வாழ்வோம். பேரின்பம் பெறுவோம்.

இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.

2 comments:

  1. வானமே எல்லை என்றல்லாமல் அறத்தின் எல்லைக்குள் நமது விருப்பங்களையும் தேவைகளையும் வைத்து அதற்கான முயற்சிகளையும் நேர்வழியில் கொண்டு இலக்கு மாறாது, உயிரின் நோக்கும் வாழ்வின் நோக்கும் பிறழாது வாழ்வோம். பேரின்பம் பெறுவோம்.



    ....well-written with good messages. :-)

    ReplyDelete
  2. தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...