Followers

Wednesday, November 10, 2010

கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?

10.11.10
கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?


இது நமக்கு மிகப் பரிச்சயமான ஒன்று. பிழை. இந்தப் பிழை எழுத்துப் பிழையோ அல்லது அச்சுப் பிழையோ அல்ல. சிந்தனைப் பிழை. இந்த சிந்தனைப் பிழை பலியாகக் கேட்டது ஒரு நிரபராதியான, என்ன நடந்தது என்றே தெரியாத ஒரு அப்பாவியின் உயிர், ஒரு பத்தினியின் மாங்கல்யம், பின் விளைவாக ஒரு அரசன் மற்றும் அவன் மீது உயிரே வைத்திருந்த அவனது மனைவி ஆகியோரது உயிர்கள். ஆனால் தப்பித்தது குற்றவாளி.


நான் விவரிக்கும் காட்சி உங்களுக்கு மிகத் தெரிந்த ஒன்றாக இருக்கிறதா? சந்தேகமே வேண்டாம். நான் சொன்னது சிலப்பதிகாரத்தில் வரும் உச்சகட்ட காட்சிதான்.


தயை செய்து இதனை encounter death போன்ற தற்கால நிகழ்வுகளுடன் மட்டுமே  இணைத்துப் பார்த்து  இந்தப் பேச்சை மிகக் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடவேண்டாம். எனது நோக்கு ஒரு தனி மனிதனின் சிந்தனைகள் வலுப்பெற்றாலே பாதிக்குமேல் வாழ்வின் சிக்கல்கள் தீர்ந்து விடும் என்பதுதான். கீழே நான் விவரிப்பது சிலப்பதிகார நிகழ்வுதான் என்றாலும் என் கருத்தை வலியுறுத்த கூடுமானவரை பிறழாமல் கொடுத்திருக்கிறேன். சற்றே பிறழ்ந்தாலும் அது நான் சொல்லவந்த கருத்தை வலியுறுத்தக் கருதியே என பிழை பொருத்தருள வேண்டுகிறேன்.



ஒரு பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடி விட்டான். அந்த நேரத்தில் அங்குவந்த கோவலன் தன்னிடம் இருக்கும் கண்ணகியின் காற்சிலம்பை அவனிடத்தில் விற்க முயலுகிறான். தப்பிக்க வழி தெரியாமலிருந்த பொற்கொல்லனுக்கு சட்டென்று ஒரு விபரீத எண்ணம். கோவலனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் கோவலன் கொண்டுவந்த சிலம்பை எடுத்துக்கொண்டு அரசனிடம் செல்கிறான். அரசனை அந்தப்புரத்தின் வெளியே சந்திக்கிறான்.


அந்தப்புரத்தில் அரசியுடன் ஏற்பட்ட உரசலில் மன்னன். சிந்தனை குழம்பத்தான் செய்யும். அரசனின் நிலையை சரியாகக் கணித்த பொற்கொல்லன் தன்னிடம் இருக்கும் கோவலன் கொணர்ந்த கண்ணகியின்   காற்சிலம்பை அரசனிடம் காட்டுகிறான். தன் கையில்  உள்ள காற்சிலம்பு அரசியின் திருடு போன சிலம்பென்றும், திருடன் தன் வசம் இருக்கிறான் என்றும் சொல்கிறான்.


அரசன் என்ன செய்ய வேண்டும்?  ஆராய்ச்சி மணி கட்டி ஆண்ட அரசர்கள் வாழ்ந்த கதையறிந்த அரசன் என்ன செய்யவேண்டும்? விசாரணை செய்யத்தானே வேண்டும். இங்குதான் ஊழ் விளையாடியது. அந்தப்புர குழப்பத்தில் தன் சிந்தனைத் தெளிவை இழந்த அரசன் பொற்கொல்லன் கையிலிருந்த அரச குடும்பத்தினர் மட்டுமே அணிந்துவரும் விலைமதிப்பற்ற காற்சிலம்பைப் பார்க்கிறான். சிந்தனைத் தடுமாற்றத்துடன் சிறிது கோபமும் சேர்ந்து விடுகிறது. பொற்கொல்லனைப் பார்த்தபின்  சினத்துடன் காவலளிகளிடம்  சொல்கிறான், ‘ அவனைக் கொன்று வாருங்கள்”.


அவனைக் கொண்டு வாருங்கள் என்றல்லவா அரசன் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மன்னனின் “அவனைக் கொன்று வாருங்கள்” என்ற சிந்தனை பிறழ்ந்த இந்தப் பிழை ஒரு காவியமே படைத்து விட்டது. இது விசாரிக்காமலே அரசன் தந்த தண்டனை யல்லவா?




தன் நரித் தந்திர நோக்கம் நிறைவேறிய மகிழ்வில் பொற்கொல்லன் அரசவைக் காவலர்களுடன் தன் வீட்டிற்கு வருகிறான். அங்கே அப்பாவியாய் இருக்கும் கோவலன் காவலாளிகளைப் பார்க்கிறான். அவனுக்கு சந்தேகம் பிறக்கவில்லை. காரணம் தான் கொண்டுவந்த கண்ணகியின் காற்சிலம்பை வாங்கும் பொருளாதாரத் தகுதி நாட்டில் சிலருக்கு மட்டுமே உண்டு என்பதை அறிவான். எனவே அரசன் அந்தச் சிலம்பை வாங்க முயலலாம் என்பது அவன் எண்ணம். அரசவைக்கு புறப்படத் தயாராகிறான். ஆனால் காவலாளிகள் கோவலனைக் கொண்டு சென்றதோ கொலைக்களத்திற்கு. தான் எந்த குற்றத்திற்காக கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலே காவலாளியிடமிருந்த கொலை வாளுக்கு பலியாகிறான். கோவலனின் துண்டிக்கப்பட்ட தலை அவனது உடலிலிருந்து தெறித்து விழுகிறது. கோவலன் ஒருவேளை இது தன் ஊழ்வினைப்பயன் என்று மனமுவந்து கூட இந்த தண்டனையை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.


ஆனால் தப்பித்தது பொற்கொல்லன்.




சரி. கற்பனைக்கு கண்ணகி நியாயம் கேட்க வரவில்லை என வைத்துக் கொள்வோம். இப்போது கோவலன் தலை துண்டிக்கப் படுகிறது. பார்த்துக் கொண்டிருக்கும் வேற்றூரைச் சேர்ந்த கோவலனின் பின்புலம் தெரியாத  மக்கள் , குழுவாகப் பிரிந்து விவாதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம் கீழ்க் கண்ட கேள்விகள் எழாதா?


கோவலனை  குற்றவாளிதான், அரசனின் தீர்ப்பு நியாயமானதுதான் எனக் கருதுவோர் தங்களது கருத்துக்கு சாதகமாகக் கொள்பவைகள்:


அரசன் நிச்சயம் நீதி தவறமாட்டான்.
விலையுயர்ந்த காற்சிலம்பு கோவலனின் வசம் வந்ததெப்படி?
கோவலன் அந்தச் சிலம்புக்குரியவன் என்றால் அதை அவன் விற்க வந்ததேன்? இதுவே அவன் பொருளாதாரத்தில் பின் தங்கியவன் எனக் காட்டவில்லையா?
கோவலனின் கையிலிருப்பது அரசியின் காற்சிலம்பென அடையாளம் காட்டியது பொற்கொல்லனல்லவா? பொற்கொல்லன் தானே அரசியின் சிலம்புகளை வடித்தவன். அவனுக்குத் தெரியாதா எது அரசியின் சிலம்பென்று?
தான் தவறு செய்யவில்லை என்றால் கோவலன் சொல்லியிருக்கலாமே. ஏன் வாய் மூடி மொளனியாய் இருந்தான்?
இதற்கெல்லாம் மேலே அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை. நாம் வாழ்வது நீதி தவறாத நாட்டில் எனும் நம்பிக்கை.


சரி. அரசனின் தீர்ப்பை சந்தேகிப்போர் தமது கருத்தை வலியுறுத்தும் வினாக்கள் எனக் கொள்பவைகள் கீழே.


அரசன் அவசரப்பட்டு தீர்ப்பளிக்கக் காரணமென்ன?
கோவலனை அரசவையில் கூட கொண்டு நிறுத்தாமல் தீர்ப்பு சொல்லவேண்டிய கட்டாயமென்ன?
அரசனைத் தவிர பொருளாதாரத்தில் அரசனுக்கு இணையான வேறு வணிகக் குடும்பத்தினரிடம் இத்தகைய சிலம்பு இருக்க வாய்ப்பில்லையா?
அந்த வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவரது வியாபாரப் பெருக்கு குறித்து சிலம்பை அவர்கள் விற்க முனைந்திருக்கக் கூடாதா?
சிலம்பை அடையாளம் காட்டிய பொற்கொல்லனது நம்பகத் தன்மை என்ன?
பொற்கொல்லனுக்கு இதனால் சுய லாபம் இருக்க வாய்ப்பில்லையா?
பொற்கொல்லனைத் தவிர சிலம்பு தனதுதான் என நிச்சயப் படுத்திக்கொள்ள அரசன் செய்த முயற்சிகள் என்ன?


இப்படிப் பல கேள்விகள்.

இது நமக்கும் நடக்கலாம் அல்லவா?




உண்மை அறிய முயலுவோர் சிந்தித்தே ஆகவேண்டும். குழுவோடு சேர்ந்து கூக்குரலிடலாகாது. உண்மை வெல்லவேண்டுமென்றாலும், வென்று நிலைக்கவேண்டுமென்றாலும் சிந்திப்போர் அதிகரிக்கவேண்டும்..நல்ல சிந்தனைகளை ஆதரிக்க வேண்டும். இது முக்கியம். ஏனெனில் உண்மை இறந்த உலகம் வாழ்வதற்கு மிக ஆபத்தான ஒன்று.  நம்மிடையே மேலே சொன்னதுபோல் சில சுயநலமிக்க 'போக்கிரி பொற்கொல்லர்'களும்  உண்டு. சிந்திப்பது ஒன்றே நம்மையும் காத்து நாம் இருக்கும் உலகையும் காக்க வல்லது.  இது குறித்தே விசாரணைகளும் நீதியை ஆராய்ந்து நிலை நாட்ட வல்ல மன்றங்களும் நாட்டில் இருக்கின்றன.  குற்றமிழைத்தோரை இந்த மன்றங்கள் முன் வைக்காது தண்டிப்பது   எக்காலத்தும் பொருந்தா ஒன்றாகத்தான் அமையும். இதுமட்டுமல்லாது இதில் சமுதாயத்திற்கு ஆபத்து விளையும் வாய்ப்புக்களும் உண்டு. மேலும்  இத்தகைய செயல்களை ஊக்குவிப்பத்தன் மூலம் சதிகாரர்களுக்கு நம்மையறியாமலே நாம் துணைபோகும் கொடுமையும் உண்டு.

சிந்தனை செய்வோம். சிறந்தவைகளையே ஊக்குவிப்போம்.  உண்மைக்கு மாறானவைகளை, எதிரானவைகளை  புறம் தள்ளி சமுதாய நலன் காப்போம்.


இன்னமும் பேசுவோம்.


அன்பன்,


வேதாந்தி.



10 comments:

  1. வித்தியாசமான பதிவு.
    மக்களின் விவாதங்கள் என்ற அடிப்படையில் உங்கள் சிந்தனை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்களுக்கு வரும் word verification-ஐ எடுத்து விடலாமே..
    அது தங்களுக்குப் பின்னூட்டமிடுபவருக்கு இடைஞ்சலாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இது விவாத மேடை அல்ல. தோன்றியதைச் சொல்கிறேன். அவ்வளவே.

    ReplyDelete
  4. வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
  5. தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் திரு நடராசன் அவர்களே.

    ReplyDelete
  8. பொற்கொல்லன் ஒரு வில்லன் போல் சித்தரிக்க சிலபதிக்காரம் துணை போயுள்ளது. உங்கள் சந்தேகம் போல் , என்னோடது யாதுஎனில் , அவன் பொற்கொல்லன் எனில் , அவனுக்கு தெரியாதா ? மாணிக்கமா அல்லது முத்தா என்று . எனவே திருடன் போர்கொல்லனாக இருக்க வாய்ப்பு இல்லை .

    ReplyDelete
  9. பொற்கொல்லர் பற்றி உமது பதிவு மிக சிறப்பே,,
    இருந்தாலும் எனக்கு சில கேள்விகள் உள்ளது. இந்த கதையில்.
    # முத்துக்களையோ ,மாணிக்கங்களையோ எந்த முட்டாள் ஆசாரியும் சிலம்பினுல் ஒளித்து வைக்க மாட்டானே. அதனால் எந்த பிரேஜனமும் இல்லையே..
    # அரசியின் சிலம்பையே திருடிய பொற்கொல்லனுக்கு கோவலன் சிலம்பை திருடுவது ஆவ்வளவு கடினமா,??
    # அரசவை பொற்கொல்லனுக்கு ஒரு சிலம்பை திருடும் அளவுக்கா வறுமை இருந்து இருக்கும்.
    # என் பாட்டி காலத்திலே பவுன் 2 ரூபாய்தானாம் தங்கம் ,
    ஒருவேலை பாண்டியன் காலத்தில் பவுன் விலை லட்சத்தில் இருந்திருக்குமோ..??
    வெருமனே பேசவேண்டாம் நண்பா.
    சிந்தித்து பேசுங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...