Followers

Thursday, November 18, 2010

மதியோரே! பூனை மிதியை ஆதரித்து யாணை மிதிக்கு ஆளாவீரோ?

18.11.10
மதியோரே! பூனை மிதியை ஆதரித்து யாணை மிதிக்கு ஆளாவீரோ?



தெரிந்தோ தெரியாமலோ கடந்த பதிவுகள் ஊழலைக் குறித்த தொடர் பதிவுகள் போலாகிவிட்டன. இது ஒரு விபத்துபோல நடந்துவிட்டது. மேலும் இந்தப் பதிவும் ஊழல் குறித்தே. ஊழலும் அதை ஆதரிப்பதும் ஒரு நோய்வாய்ப்பட்ட மனப்பாங்கு- sick mentality - என்பதாலேயே இதைக் குறித்து விரிவாக பேச நினைக்கிறேன்.  இது விளைவுகளைக் குறித்த அறியாமையாலும், மேலும் இந்த சட்ட விரோத சுயநலப் போக்கால் சமுதாய நலன்  சிதைவுண்டு போகும் அபாயமும் இருப்பதாலேயே இன்றைய பேச்சும் ஊழல் குறித்தே.


நமது மக்கள் ஊழல் என்பது நமது வசதிக்காகத்தான் என நினைக்கின்றனர். அவர்களுக்கு தங்களது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்து ஒரு விரிந்த பார்வை கிடையாது. இது வருந்தத் தக்கது.  ஊழலைக் குறித்த ஒரு விரிந்த பார்வை இல்லாததனாலேயே தினமும் நடக்கின்ற ஊழலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை தாம் ஆதரிக்கும் அன்றாட ஊழல் என்பது ஒரு பூனை மாதிரி.. அதன் காலில் ஒரு மிதி வாங்கிவிட்டால்  எல்லா வேலைகளும் தாமதமின்றி தடங்கலின்றி நடந்து விடுகிறது. எனவே இந்தப் பூனை மிதியை ஆதரிக்கின்றனர்.


ஆனால் அவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால் இந்தப் பூனை மிதியை தெரிந்து ஆதரித்து தமக்குத் தெரியாமலேயே யாணை மிதிக்கு ஆளாகிறார்கள் என்பதுதான்.



இது தெளிவாக விளங்க ஒரு நடந்த நிகழ்வைச் சொல்லுகிறேன். இது ஒரு நிகழ்வுதான் என்றாலும் நமது ஊக்கம் ஊழலை வளர்த்து யாணையாக்கி அது நம்மை எப்படி மிதித்து துவைக்கிறது என்பதை நிச்சயம் புரியவைப்பதோடல்லாமல் நம்மையும் விழிப்புணர்வுடன் இருக்கத்தூண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.


பொறுப்பான அரசுப் பணியில் பணிபுரியும் ஒரு அலுவலர். அவர் மூலமாக செல்லும் எந்த ஒரு கோப்பையும் கையூட்டு வாங்காமல் கையொப்பமிடமாட்டார். அவரைப் பொருத்தவரை அது அவர் தனது வேலைக்கு அடுத்தவர் கொடுக்கும் அன்பளிப்பு. கேட்பதையோ கேட்டுப் பெற்று காரியம் சாதித்துக் கொடுப்பதையோ சட்ட விரோதமான் செயல் என்று அவருக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. தான் மற்றவர்களுக்கு சீக்கிரமாய் காரியத்தை முடிக்க உதவி செய்கிறோம்  எனும் எண்ணமே அவரிடம் மேலோங்கியது.


அவரிடம் மற்ற அரசு அலுவலர்கள் சார்ந்த கோப்பு சென்றாலும், “ ஏன் நீங்கள் மட்டுமென்ன பணம் பெறாமலா காரியம் செய்து முடிக்கிறீர்கள்?” எனக்கேட்பதோடு கொடுப்பதிலும் பெறுவதிலும் யாருக்கும் எந்தக் கெடுதியும் இல்லை எனும் நினைப்பை வளர்த்துக் கொண்டார்.


ஆயிற்று. அவரது ஓய்வுக் காலமும் வந்தது. அதுவரை கையூட்டு பெற்று சேமித்த பணத்தில் ஒரு மனை வாங்கி வீடு கட்டினார். எல்லோரும் பாராட்டினர். அவருக்கு பெருமிதம் தாளவில்லை. தான் மிகவும் சாமர்த்தியசாலி என நம்பினார். இரு பெண் பிள்ளைகள். வீடு கட்டியதைப் போக மீதமுள்ள பணத்தில் இரு பெண் பிள்ளைகளுக்கும் மணம் முடித்து விடலாம் என எண்ணினார்.


வீடுகட்டி குடிபுகுந்த சில மாதங்களிலேயே பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அனைவருக்கும் நோய் வர ஆரம்பித்தது. டாக்டரிடம் சென்றுவர, மருத்துவச் செலவு என அவரை வாட்டியது. குடும்பத்தார் ஒருவர் மாற்றி ஒருவர் படுத்தனர். வெறுத்துப் போனார். யாரோ வேண்டாதவர் தம் குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டனர் என நம்ப ஆரம்பித்தார்.  பெண்களின் திருமணத்திற்கென்று வைத்திருந்த பணம் மருத்துவச் செலவுக்கும் மாந்திரீகச் செலவுக்குமாய் கரைந்து போனது. ஒரு கட்டத்தில் மனம் ஒடிந்துபோய் கண்ணீர் விட்டுக் கதற ஆரம்பித்தார்.


அவருடனே இருந்த நண்பர் ஒருவர் ஏதோ தோன்ற ஒருநாள் அவரது வீட்டுக் கிணற்று நீரை பரிசோதிக்கச் சொன்னார். அவர் இருந்த பகுதியில் கிணற்று நீரே குடிக்கவும், சமையல் போன்ற மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் நண்பருக்கு குடிக்க உபயோகப்படுத்தும் நீரைப்பற்றிய சந்தேகம் வந்தது.


அவரது சந்தேகத்தை பரிசோதனை முடிவுகள் உறுதிப் படுத்தின. ஆம் . குடிக்கப் பயன்படுத்தும் நீரில் அளவுக்கு அதிகமான மாசு. நச்சு மாசு. ஊரை விட்டுத் தள்ளியிருந்த ஒரு தொழிற்சாலையின் கழிவு நிலத்தடி நீரை மாசுபடுத்தியிருந்தது. அதிக காலமாக மாசு நிலத்தினுள் விடப்பட்டதால் நச்சு மாசு நீண்ட பகுதிகளுக்கு பரவியிருந்தது. உண்மை தெரிந்தவுடன் அதிர்ந்து போனார். அதற்குள் அந்தப் பகுதி முழுக்க மாசு நச்சு பரவிய தகவலறிந்தவர்கள் யாரும் அங்கு வீட்டு மனைகளோ அல்லது வீடுகளையோ வாங்க முற்படவில்லையாதலால் வீட்டை விற்றுவிட்டு வேறு இடம் பெயர்ந்து போகலாம் என்ற அவரது எண்ணமும் நிறைவேறவில்லை.


தொழிற்சலைகளின் மாசை கட்டுப்படுத்தசட்டமும் சட்டபூர்வ அமைப்புகளும் இருந்தும் இது நடந்தது எப்படி? அப்புறம் தான் நண்பருக்கு உறைத்தது. மாதா மாதமும் மற்றும் வருடத்திற்கு இருமுறையும் என பங்குவைத்து பணம் பறிமாரியதில் சட்டத்திற்கும் அதிகாரத்திற்கும் பொறுப்பில் உள்ளோர்  பணத்தை கொள்ளையடிக்க, தொழிற்சாலை தனது  கழிவில் மாசை கட்டுப்படுத்தாமல் லாபம் பார்க்க, கடைசியில் கட்டுப்படாது வெளியான கழிவு மக்களை யாணையாய் மிதிக்க…


இந்த நிமிடத்தில் மட்டும்தான் அந்த பாதிக்கப் பட்டவர் ஊழலால் இத்தகைய கொடுமையும் விளையும் என அறிந்து உணர்ந்து வருந்தினார். பூனை மிதியென ஊக்குவித்து யாணை மிதியை வாங்கிக்கொண்ட அதிர்ச்சி அவரது நெஞ்சை அடைத்தது.


அய்யா, தமிழ் நாட்டிலுள்ள நொய்யல் ஆற்றின் நச்சு நீங்கள் எத்துனை தொலைவிலிருந்தாலும் விளையும் உணவுப் பயிர் மூலமாக உங்களை வந்தடையும். பாழான  பாலாறு யாருடைய சொத்து? பாலாற்றுப் படுகையிலுள்ளோர் பணம் செலவழித்தே நல்ல குடிநீரைப் பெறவேண்டிய அவலம் மிகக் கொடுமையல்லவா? இயற்கை வளங்களை சுயநலத்திற்காக நச்சுப்படுத்த நாம் அனுமதிக்கலாமா?

இது மட்டுமல்ல. நவம்பர் 17, 2010 தேதியிட்ட The Hindu  நாளிதளில் திரு.  P. Sainath   எழுதியிருக்கும் “ Illegal financial flows: the great drain robbery”  என்ற தலைப்பில் சொல்லியிருப்பதை கவனியுங்கள்:

According to a study by Global Financial Integrity (GFI), India has lost nearly a half-trillion dollars in illegal financial flows out of the country. These “illicit financial flows,” says GFI, “were generally the product of corruption, bribery and kickbacks, criminal activities and efforts to shelter wealth from a country's tax authorities.”

புரிகிறதா.. நாடுகடந்து செல்வம் செல்லுமளவுக்கு ஊழல் மலிந்து விட்டது..

இது யார் சொத்து..? நம் சொத்தல்லவா..

இனியும் ஊழலை ஊக்குவிக்கலாமா?



மதியோரே.. இனியும் பூனை மிதியென ஊழலை ஆதரித்து யானை மிதிக்கு ஆளாகாதீர்..  மதம் கொண்டதைப்போல்  நாட்டை அழிக்கத் துணிந்துவிட்ட ஊழல் யாணையை இனியேனும் ஊக்குவிக்காது கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்போம். நாம் ஈடுபடும் எச்செயலிலும் ஊழலை வளர்க்காது செயலாற்றுவோம். பிழைத்து வளர்வோம். நமது நாட்டினையும் அதன் செல்வத்தையும்  காப்போம்.

மீண்டும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.





5 comments:

  1. இந்தப்பதிவுக்கு ஓட்டு போடணும்மா எனக்கு எவ்ளோ சம்திங் கொடுப்பீங்க??? ஹி..ஹி..

    ReplyDelete
  2. பதிவை சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  3. //கவிதை காதலன் said...
    இந்தப்பதிவுக்கு ஓட்டு போடணும்மா எனக்கு எவ்ளோ சம்திங் கொடுப்பீங்க??? ஹி..ஹி..//

    ரிப்பீட்டு..

    ReplyDelete
  4. @இந்திரா..

    ஊழலுக்கு ஓட்டுப் போடாதீங்க.. ஊழலை எதிர்க்க ஓட்டுப் போடுங்க..

    தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...