Followers

Wednesday, November 24, 2010

கொண்ட அன்பும் கொல்லும் திறனுடைத்தோ?

24.11.10
கொண்ட அன்பும் கொல்லும் திறனுடைத்தோ?


அன்பு கொல்லுமா? அன்பும் கொல்லும் என்பது தான் சரி. 


மிகையான அன்பு கூட ஒருவித சுய நலத்தின் பிம்பம்தான். இந்த மிகையான அன்பு தங்களது விருப்பமான உறவுகளின் நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்ளுதல்  குறித்த அச்சம் கருதியே வெளிப்படுவதாகும்.  It is a sort of possessiveness  exhibited out of insecured feelings. இத்தகைய மிகையான அன்பால் சிக்கல்கள் உருவாகி சிதைந்துவிடும் உறவுகளுக்கு சரியான உதாரணம் வேண்டுமென்றால் பெரும்பாலான மாமியார் மருமகள் உறவைச் சொல்லலாம். அம்மாக்கள் தங்களது பிள்ளையின் மேல் வைத்திருக்கும் அதீத அன்பே இந்தச் சிக்கலை உருவாக்குகிறது. இத்தகைய பெற்றோர்கள்  ஒரு கட்டத்திற்கு மேல்  தங்களது பிள்ளைகளின் வாழ்வில் ஒரு இடையூராகத்தான் பார்க்கப் படுகின்றனர். இது அவர்களுக்குப் புரிவதில்லை.


இந்த மிகையான அன்பு  நாம் அன்பு கொள்வோரின் தேவைகளை நம்மை  சரியாகப் புரிந்துகொள்ள விடாது என்பதுதான் உண்மை. நாம் பிறரது தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாத போது நம்மால் எப்படி அவர்களது தேவைகளையும் மற்றவைகளையும் சரியான முறையில் நிறைவேற்றி வைக்க முடியும்?  இது பற்றி வேறு ஒரு கோணத்தில் முன்னர் பேசியிருந்தேன். நான் இன்று பேசப்போவது பிம்பப் பார்வைகள் இல்லாவிடினும் சில நேரங்களில் இந்த மிகையான அன்பு கேடான விளைவுகளை உண்டுபண்ணும் வாய்ப்பு இருக்கிறது என்பதைப்பற்றித்தான்.


உண்மையில் சொல்லப்போனால் இந்த மிகையான அன்பை சரியான வகையில் வெளிப்படுத்தத் தெரியாமற் போனால் இது மிகுந்த சிக்கல்களை உறவுகளுக்கிடையே உருவாக்கும். உறவுகளுக்கிடையே மிகத்தேவையான ஒரு நாகரிகமான, சுகாதாரமான இடைவெளியை - Personal space - இந்த மிகையான அன்பு கெடுத்துப் போடுகிறது. இது மட்டுமல்லாது நமக்கு மிகவும் விருப்பமான உறவுகளைப் சரியாகப் புரிந்து கொள்ளுதலிலும் சிக்கலை உருவாக்குகிறது. இந்த உறவுச் சிக்கல்கள் எழாத  பல நேரங்களில் இந்த அதீத அன்பு நாம் அன்பு கொண்டோரையே கொண்றும் விடுகிறது.


ஒரு பொது உதாரணமாக நாம் பெற்றோர் பிள்ளைகள்  உறவை எடுத்துக் கொள்ளலாம். சில பெற்றோர்கள் இந்த அதீத அன்பால் தம் பிள்ளைகளை பொத்தியதைப் போல வளர்ப்பார்கள். இப்படி வளர்ந்த பிள்ளைகளுக்கு வெளி உலக அனுபவங்கள் கிடைத்தல் மிக அரிது. அவர்களுக்கு கிடைக்கும் எல்லா அனுபவங்களும் தங்களின் பெற்றோர் வட்டத்திலேயே அதுவும் அவர்கள் பார்க்கும் கோணத்திலேயே கிடைக்கும். இது ஒருவகையான கிளிக்கூண்டு அனுபவம் தான். சிறகு இருந்தும் பறக்காது, பறத்தல் என்ற அனுபவம் கிடைக்காத அன்பால் கூண்டிலடைபட்டு பறக்கும் அனுபவத்தையே மறந்துவிடும் கிளிக்கு கிடைக்கும் அனுபவம்தான்.


ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் இத்தகைய பிள்ளைகள் கடைசிவரை ஒருவரைச் சார்ந்தே இருக்கின்றனர்.  தனது சுயத்தை மறக்கின்றனர். சுயத்தை உணர்ந்து அதனை முழுக்க ருசித்து அதனை புரிந்து இழப்பது வேறு இது வேறு. தனக்கென்று ஒரு கருத்து உண்டு என்பதைக்கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இத்தகைய பிள்ளைகள் தங்களது வாழ்வையே இழக்கின்றனர்.


சமீபத்தில் நான் ஊடகங்களில் கண்ட செய்தி இது. பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காக உயர் ரகங்களைச் சேர்ந்த செல்ல நாய்க்குட்டிகளை வளர்க்க நேரிடும் பெற்றோர்கள் தாங்கள் வெளிநாடு செல்ல வேண்டிய காரணத்தாலோ அல்லது அந்த நாய்களை வளர்க்க முடியாமற் போக நேர்ந்தாலோ அவைகளை காரில் கொண்டு போய் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இறக்கி விட்டு விட்டு வெகு வேகமாக காரை எடுத்துக் கொண்டு போய்விடுவராம். ஏதுமறியா இந்த செல்லப்பிராணிகள் நீண்ட தூரம் காரின் பின்னே வேகமாக ஓடி வருமாம். இறுதியில் ஓட முடியாமல் மூச்சிறைக்க இந்த நாய்கள் அங்கேயே திகைத்து நின்று விடுமாம்.


வெட்ட வெளியில் வாழத்தெரியாது திகைத்து நிற்கும் இந்த நாய்கள் உணவின்றியோ அல்லது அங்கே உள்ள தெரு நாய்களின் கடிக்கோ பலியாகி மிகவும் பரிதாபமாக உயிரை விடுமாம்.  இவைகள் பழக்கப் படா சூழலுக்கு இறையாகி இறத்தலுக்கு யார் காரணம்? மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு மிகுந்த அன்பு காட்டி அதனை பொத்தி வளர்த்து இறுதியில் தங்கள் வசதிக்கு அவைகளை கைவிட்டு விடுதலாலேயே அவைகள் இந்த பரிதாப முடிவுக்கு ஆளாகின்றன. இது போலவே தான் நம் பிள்ளைகளும். பிள்ளைகளை நாம் கைவிடுவதில்லை என்றாலும் நமது இறப்பிற்குப் பின்னும் அவர்கள் வாழ வேண்டி யிருப்பதால் அவர்களுக்கு வாழக் கற்றுக் கொடுத்தலே நலம்.


எனக்குத் தெரிந்து ஒரு பொறியியல் கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவன், பெற்றோர் மீது மிகுந்த அன்பு கொண்டவன், தனது பெற்றோர் ஒரு சாலை விபத்திலே இறந்து போனபின் தன்னால் தனியே வாழப்பிடிக்காமல் ஆறு மாதங்களுக்குப் பின் தனது பெற்றோர் இறந்த இடத்திலேயே தனது உயிரையும் மாய்த்துக் கொண்டான். இதைச் சொல்லும் போதே எனக்கு நெஞ்சைப் பிசைகிறது. பெற்றோர் இந்தப் பிள்ளையின் வாழ்வுக்காக தமது உயிரையும் கொடுத்திருப்பர் ஆனால் பிள்ளை இறப்பதை பொறுப்பரோ?


அவர்களது மிகுதியான அன்பினால் இந்தப் பிள்ளை உலகத்தில் தனியேவாழ கற்றுக்கொள்ள, இழப்பை பொறுத்துக்கொள்ள, தோல்வியைத் தாங்கிக்கொள்ள, பிறப்புக்கும்  இறப்புக்கும் இடையே இருப்பதுதான் வாழ்க்கை எனப் புரியவைக்கத் தவறிவிட்டனர். அதனாலேயே இந்த இழப்பு.


நாம் உண்மையிலேயே பிள்ளைகளை நேசித்தோமானால் அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டுமே தவிர வாழக் கற்றுக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இந்த ‘வாழக் கற்றுக் கொடுத்தல் ‘ பெரும்பாலும் நமது அனுபவங்களைச் சார்ந்தே இருக்குமாதலால் இவைகள் அவர்களுக்கு பயனளிக்காது மட்டுமல்ல உலகைத் தெரிந்துகொள்ளும் அவர்களது சுயமுயற்சிகளையும் கெடுத்து விடும். இது மிகவும் அபாயகரமானது. இது மட்டுமல்ல ஒருவேளை பிள்ளைகள் நமது இந்த கற்றுக் கொடுத்தலுக்கு ஆளானார்களானால் அவர்கள் தங்களது இணை நண்பர்களை - peer group - விட சற்றே பின் தங்கியோ அல்லது வித்தியாசப்பட்டோ இருப்பார்கள். இது அவர்களது மனதில் மிகுந்த குழப்பத்தினை உண்டுபண்ணலாம்.


இந்த உலகில் வாழவும் தங்கள் வழியில் வாழக் கற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு உயிருக்கும் உரிமை உண்டு.  ஆனால் இந்த வாழக் கற்றுக் கொள்ளும் உரிமையும், வாழக் கற்றுக் கொள்ளும் முறையும் ஒருவர் தீய வழியில் தனது வாழ்வைச் செலுத்தி பரிசோதித்துக் கொள்ள அனுமதிப்பதாகாது.  மாறாக மேற்சொன்னதெல்லாம் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சமுதாயத்தின் ஆரொக்கியத்திற்கும், தனது சொந்த ஆரொக்கியத்திற்கும் எதிராகாத நல்வழியில் வாழ்வதைக் குறித்து மட்டுமே இங்கு பேசப்பட்டிருக்கிறது.


நமது அன்பெனும் அமுதத்தை அதிகப்படியாக நமது பிள்ளைகள் மீது பொழிந்து அந்த அன்பே அவர்களைக் கொல்லும் நஞ்சாவதைத்  தவிர்ப்போம். அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள வாழ்வைப் புரிந்துகொள்ள அனுமதிப்போம். பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு நமது பிள்ளைகள் சரியான முறையில் வாழக் கற்றுக் கொள்கிறார்களா என்று கவனிப்போம். அவ்வப்போது, அவர்கள் வழி பிறழும் போது அவர்களை தடுத்தாட்கொண்டு நெறிப்படுத்தி தீயவைகளினின்று அவர்களைக் காத்துப் பேணுவோம். மகிழ்விப்போம் மற்றும் மகிழ்வோம்.
 
இன்னமும் பேசுவோம்.


அன்பன்,

வேதாந்தி.


2 comments:

  1. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..
    இது அன்பிற்கும் பொருந்தும். அப்படித்தானே??

    ReplyDelete
  2. @ இந்திரா..

    ஆமாம். அன்புக்கு மிகச்சரியாகப் பொருந்தும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...