Followers

Wednesday, September 15, 2010

உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி


15.9.10
உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி



இது உறவாடிக் கெடுப்பதுபோல நம்மை உடனிருந்தே கொல்லும்.

நான் சினத்தைப் பற்றிச் சொல்லவில்லை. பொதுவாக சினத்தைத் தான் உடனிருந்து கொல்லும் என்பார்கள். ஆனால் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நாம் சினத்தைக்கூட நமக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ளலாம்.

நான் இங்கு குறிப்பிடுவது அழுக்காறு என்னும் பொறாமையை.

பொறாமை என்பது மிக மோசமான ஒன்று.

இதுவரை நான் பேசியதைப் பார்த்தீர்களானால் நாம் வெற்றியடைவதென்பது நமது அகச்சூழல் மற்றும் புறச்சூழல்களின் மீது நாம் கொண்டுள்ள ஆளுமைத் திறன்தான் ( our manipulative ability of internal environmental – mind – factors / forces and external environmental factors / forces ) தீர்மானிக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள். இதற்கு மிகத் தெளிவான பார்வையும், தீர்மானங்களும் தேவை. இதற்கு மிகத் தெளிவான மனம் தேவை.


பெரும்பாலான எதிர்சக்திகள் நமது மனத் தெளிவைத்தான் குறிவைக்கின்றன. எப்படி மதுவானது நமது ‘ மூளையிலுள்ள மெடுல்லா ஆப்லாங்கேட்டா’ எனும் பகுதியினைத் தாக்கி நமது சமநிலைப்பாட்டைக் கெடுத்து தள்ளாட வைக்கிறதோ அதைப்போல நமது எதிர் சக்திகள் நமது மனத்தெளிவினைத் தாக்கி நமது மனப் பார்வையை (mental perception ) புரட்டிப் போடுகிறது. இந்தக் கோணலான மனப்பார்வை தான் நமது சூழல் காரணிகளைத் திரித்து நமது மனதை முறுக்கி ஆக்கிரமித்து சிந்தனைக் கேட்டினை விளைத்து நமது செயலாலேயே நம்மைக் கொன்று விடுகிறது.

இதற்கு நிறைய எடுத்துக் காட்டுகளைத் தரலாம். சிந்தனைக் கேட்டால் விளைந்த விளைவுதான் கோவலனின் படுகொலை.



இதைப்போலத்தான்  பொறாமையும் நமது மனப்பார்வையைக் கோணலாக்கி சிந்தனைக் கேட்டை விளைவிக்கிறது. நன்றாய் யோசித்துப் பாருங்கள். நம் மனதினை ஆராயும் பார்வை நமது பலம் மற்றும் பலவீனங்களைக் காட்டும். இது நமது பலத்தினை பலப்படுத்தவும் பலவீனங்களை குறைக்கவும் பயன்படும். இதை விட்டு அடுத்தவரை ஆராயும் பார்வை அடுத்தவரது பலம், பெருமை, அல்லது மற்றய குணாதிசயங்களை ஆராய்வதோடு மட்டுமல்லது அதை நம் குணாதிசயங்களோடு ஒப்பிடத்தூண்டி நம்முள் பொறாமைத் தீயை நெய் வார்த்து வளரக்கும். இது நம்மை வளர்ப்பதற்கு உதவாது. மாறாக காழ்ப்புணர்ச்சியை பெருக்கி அடுத்தவரை நமக்கு எதிரியாகக் காட்டி நம்மை அவர்மேல் ஏவிவிடும்.


இந்தப் பொறாமை உணர்வு நமது மனதை காகம் கொத்துவதைப் போல் கொத்தி தன் வசம் இழுத்துப்போடும் வரை ஓயாது.


நான் கண்ட ஒருவர் பல்கலைக் கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்துவந்தார். அவர் மகிழ்வுடன் இருந்து நான் பார்த்ததே கிடையாது. எப்போதுமே  மற்றவர்மேல் சுள்ளென்று விழுவார். இத்தனைக்கும் அவர் இளம் வயதிலேயே திருமணமாகி நிரந்தர வேலையோடு இருந்தார். ஆனால் தனக்குக் கிடைத்திருக்கும் வாழ்வின் சிறப்பை பார்க்க முடியாமல் அவரது இந்தப் பொறாமைக் குணம் அவரைக் குருடாக்கிவிட்டது. கடு கடு வென்றே இருப்பார். அடுத்தவர் கொள்ளும் சிறிய மகிழ்வுகூட அவரை மிகவும் பாதித்தது.  வெறும் எண்ணூறு உரூபாயில் தன் செலவுகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கும் மற்ற துன்பங்களுக்கிடையில் படித்துவந்த ஆய்வுப் படிப்பு மாணவர்களைக்  கூட கண்டு பொறாமைப் பட்டார். அவர்களுக்கு வரும் கடிதங்களை கிழித்து விடுவார். காசோலைகளை ஆள் இல்லையென்று திருப்பி அனுப்பிவிடுவார். இப்படி பல வழிகளில் அடுத்தவருக்கு வேதனைகளை கொடுத்து வந்தார். இந்தப் பொறாமை குணம் அவரைக் கொன்று கொண்டிருந்ததே தவிர மேம்படுத்தவில்லை.


மாறாக மற்றொருவர் இவரைப் போலவே அதே பல்கலைக் கழகத்தில் உதவியாளராக இருந்தவர் மற்ற ஆசிரியர்களின் உதவியோடு நூலகருக்கான பட்டப் படிப்பினை படித்து முடித்து அதே பல்கலைக் கழகத்தில் நூலகராக பதவி உயர்வு பெற்றார். இத்தனைக்கும் இவர் மாற்றுத் திறன் கொண்டவர். நூலகரானபின் அவருக்கு ஒரு நல்மனதுடையோரது உதவியால் திருமணமும் நடை பெற்றது. உடனே பல்கலைக் கழக மாணியக் குழுவால் பரிந்துரைக்கப் பட்ட ஊதியமும் கிடைத்தது.


நான் மேலே சொன்ன இரண்டுமே உண்மை நிகழ்வுகள்.


பல்கலைக் கழகத்திலேயே பணிபுரிந்தும் படிக்கத்தோன்றவில்லை முன்னவருக்கு ஆனால் மாற்றுத்திறனாளியாய் இருந்தும் இரண்டாமவரது தெளிவான சிந்தனை அவரை முன்னேற்றியது.

வாழ்வில் முன்னேற சிந்தனைத் தெளிவு மிக முக்கியம். அதற்கு பொறாமை போன்ற சிந்தனைக் கொல்லி உணர்வுகளுக்கு மனதில் இடமளிக்கக் கூடாது.


இன்னமும் பேசுவோம்.

அன்பன்

வேதாந்தி.

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...